tamilnadu

நாகை கொள்ளிடம் பகுதியில் அரசு நிலங்கள் ஆக்கிரமிப்பு  

சீர்காழி: நாகை மாவட்டம் கொள்ளிடம் ஒன்றியத்தில் உள்ள 42 ஊராட்சிகளில் 200 கிராமங்கள் உள்ளன. இந்த 200 கிராமங்களில் ஊராட்சிக்குச் சொந்தமான 400 குளங்கள் மற்றும் 200 சிறுகுட்டைகள், அரசுக்குச் சொந்தமான நஞ்சை மற்றும் புஞ்சை நிலங்கள் சுமார் 1500 ஏக்கரும் ஆக்கிரமிப்பில் உள்ளன. பல குளங்கள் தூர்ந்து போயுள்ளன. சில குளங்கள் தூர்க்கப்பட்டு கட்டிடங்களாக காட்சியளிக்கின்றன. குளங்கள் காணாமல் போனதால் நிலத்தடி நீர் கடந்த காலங்களில் மிகவும் ஆழமான பகுதிக்கு சென்று விட்டது. முறையற்ற நிலையில் விதிக்குப் புறம்பாகவும் குளங்கள் மூடப்பட்டுள்ளன. இதே போல் நஞ்சை மற்றும் புஞ்சை நிலங்களும் சிலரின் ஆக்கிரமிப்பில் உள்ளன. பல ஏழைக் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் சொந்த மனைப்பட்டா இல்லாமல், வாய்க்கால் கரையோரத்திலும், ஆற்றங்கரையோரத்திலும் பாதுகாப்பின்றி வாழ்ந்து வரும் நிலையில் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் இன்றும் ஆக்கிரமிப்பிலேயே உள்ளது. இது குறித்து விவசாய சங்க தாலுகா துணை செயலாளர் பாக்யராஜ் கூறுகையில், கொள்ளிடம் ஒன்றியத்தில் மட்டும் ஆயிரக்கணக்கான ஏக்கர் அரசு புறம்போக்கு மற்றும் குளம், குட்டைகளும் ஆக்கிரமிப்பில் ஆலாலசுந்தரம், பழையபாளையம், புளியந்துறை ஆகிய கிராமங்களில் மட்டும் மொத்தத்தில் 40 ஏக்கர் அரசு புறம்போக்கு நிலம் ஆக்கிரமிப்பில் உள்ளது.  இதே போல் அனைத்து ஊராட்சிகளிலும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள அரசு நிலங்களை மீட்டு ஏழை, எளிய மற்றும் மனைப்பட்டா இல்லாதவர்களுக்கு வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இது குறித்து தமிழக முதல்வர் மற்றும் மாவட்ட ஆட்சியருக்கு கோரிக்கை மனு அனுப்பியுள்ளதாகத் தெரிவித்தார்.