tamilnadu

img

சீர்காழியில் ஒன்றிய துணைத் தலைவர் தேர்தல் ஒத்திவைப்பு

சீர்காழி, ஜன.12- சீர்காழி ஒன்றியத்தில் 21 ஒன்றிய கவுன்சில் பதவிகள் உள்ளன. இந்த ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு கடந்த டிச.27 அன்று நடந்த உள்ளாட்சித் தேர்தலில் திமுக 9, அதிமுக 7, சுயேச்சைகள் 5 என இடங்களை பிடித்தனர்.  இந்நிலையில் சனியன்று சீர்காழி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மறைமுக தேர்தல் தேர்தல் நடத்தும் அலுவலர் ஸ்ரீ கணேஷ் முன்னிலையில், திமுக சார்பில் கமலஜோதி, அதிமுக சார்பில் பவானி செந்தமிழ்ச்செல்வன் போட்டியிட்டனர். திமுக சார்பில் போட்டியிட்ட கமலஜோதி தேவேந்திரன் 11 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அதிமுக சார்பில் போட்டியிட்ட பவானி செந்தமிழ்ச் செல்வன் 10 வாக்குகள் பெற்று தோல்வி அடைந்தார். மாலை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றிய குழு துணைத் தலைவருக்கான மறைமுகத் தேர்தல் நடைபெற்றது. தேர்தலுக்கு 4 மணிக்குள் 9 உறுப்பினர்கள் சென்றனர். மற்ற உறுப்பினர்கள் செல்ல தாமதம் ஏற்பட்டதால் தேர்தல் நடத்தும் அலுவலர் மறைமுக தேர்தல் நடத்தும் அறையை பூட்டினார். இதனால் வாக்களிக்க சென்ற உறுப்பினர்கள் கதவை தட்டி கூச்சலிட்டனர். அப்போது அதிகாரிகளுக்கும் உறுப்பினர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. அங்கு வந்த சீர்காழி இன்ஸ்பெக்டர் மணிமாறன் மற்றும் போலீசார் இருதரப்பினரையும் சமாதானம் செய்தனர். பின்பு உறுப்பினர்கள் அதிகாரிகள் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்றது. 4 மணியைக் கடந்து தேர்தல் விதிமுறைக்கு மாறாக உறுப்பினர்கள் தேர்தல் நடைபெறும் அறைக்கு வந்ததால் தேர்தல் நிறுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. பின்பு தேர்தல் நடத்தும் அதிகாரி ஸ்ரீ கணேஷ், தேர்தல் ஆணையத்தில் இருந்து மறு உத்தரவு வரும் போது ஒன்றியக்குழு துணைத்தலைவர் பதவிக்கான தேர்தல் நடைபெறும் என தெரிவித்தார். இதனை தொடர்ந்து ஒன்றியக்குழு உறுப்பினர்கள் கலைந்து சென்றனர்.

;