tamilnadu

img

இடிந்து விழும் நிலையில் அரசுப் பள்ளி மாணவர்கள் போராட்டம்

நாகப்பட்டினம், ஆக.17- நாகப்பட்டினம் வட்டத்தில் உள்ளது முட்டம் என்னும் சிற்றூர். இங்கு தலித் மக்களும் பிற்படுத்தப்பட்ட மக்களும் மிகுதியாக வாழ்கின்றனர். ஆங்கிலேயர் காலத்தில் தனியார் ஒருவரால் முட்டத்தில் தொடக்கப் பள்ளி ஒன்று தொடங்கப்பட்டது. பின்னர் இது, ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியாக மாற்றப்பட்டுப் பின், அரசு உயர்நிலைப் பள்ளியாக மாறியது. உயர்நிலைப் பள்ளியான பிறகு சில வகுப்பறைகள் கட்டப்பட்டன. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டக்குழு உறுப்பினராகவும், கட்சியின் நாகை ஒன்றியச் செயலா ளராகவும் உள்ள பி.டி.பகு, முட்டம் ஊராட்சி மன்றத் தலைவராகப் பணியாற்றிய போது, இந்தப் பள்ளியின் வளர்ச்சிக்காக மிகுந்த பணிகளா ற்றினார். அரசு உயர்நிலைப் பள்ளியை மேல்நிலைப்பள்ளியாக உயர்த்திட முன்நின்றார். உயர்நிலைப் பள்ளி, மேல்நிலைப் பள்ளியாகத் தரம் உயர்த்தப்பட்டது. ஆனால், பள்ளிக் கட்டிடங்கள் மிகப் பழைமையான. நிலையில் உள்ளன.  பி.டி.பகு,  பல போராட்டங்கள் நடத்தியும், கல்வித் துறை அதிகாரி களுடன் பேச்சு வார்த்தை நடத்தியும், இதுவரை பழைய கட்டிடங்கள் இடிக்கப்படவும் இல்லை; புதிய கட்டிடங்கள் கட்டப்படவும் இல்லை. தற்போது, மாணவ மாணவியருக்கு மரத்தடியில்தான் வகுப்புகள் நடக்கின்றன. எந்நேரமும், பழைய கட்டிடங்கள் இடிந்து விழும் நிலை எற்பட்டால் மாணவரின் உயிருக்கு ஆபத்தாகும் நிலை ஏற்படும். எனவே, மாணவர்கள் யாரும் வகுப்பறைக்குள் அனுமதிக்கப் படாமல் ஆசிரியர்கள் கண்காணித்து வருகின்றனர். இந்நிலையில், செவ்வாய்க்கிழமை அன்று, இந்திய மாணவர் சங்கத்தினர், முட்டம் அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் மாணவர்களோடு இணைந்து, பழைய கட்டிடங்களை இடித்திடவும்,  புதிய கட்டிடங்கள் கட்டித்தரவும்  வலியுறுத்திப் போராட்டம் நடத்தினர். போராட்டத்திற்கு மாணவர் சங்கத்தின் ச.சிவனேசன் தலைமை வகித்தார். மாவட்டத் தலைவர் ப.மாரியப்பன், மாவட்டச் செயலாளர் அ.அமுல்காஸ்ட்ரோ மற்றும் ம.ராஜேஸ், ர.கதிரேசன், ப.மாரிஸ் உள்ளிட்டோர் கண்டன உரையாற்றினர். சாலை மறியலாக நடைபெறவிருந்த போராட்டம், காவல் துறையினரின் வேண்டுகோள் படி ஆர்ப்பாட்டமாக மாற்றப்பட்டது. நாகை வட்டாட்சியர் உள்ளிட்டோர் போராடிய மாணவர் சங்கத்  தலைவ ர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினர். கோரிக்கைகளுக்குத் தீர்வு காண, உரிய ஏற்பாடுகள் செய்கிறோம் என அதிகாரிகள் உறுதியளித்ததன் பேரில், மாணவர் சங்கத்தின் போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது.

;