tamilnadu

img

மயிலாடுதுறை அருகே தலித் பெண்கள் மீது கொலைவெறி தாக்குதல்.. சாதி ஆதிக்க வெறியர்களுக்கு சிபிஎம் கடும் கண்டனம்...

மயிலாடுதுறை:
மயிலாடுதுறை மாவட்டம்  செம்பனார்கோவில் அருகேயுள்ள நரசிங்கநத்தம் கிராமத்தில் தலித் மக்கள்அமைத்த குடிசைகளை  சாதி ஆதிக்கவெறியர்கள் அடித்து நொறுக்கி, பெண்கள் மீது கொலைவெறி தாக்குதல் நடத்தியுள்ளனர். இச்சம்பவத்தி ற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.

கடந்த வாரம் நரசிங்கநத்தம் பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு நிவாரணம் அளிக்க வந்த பூம்புகார் எம்.எல்.ஏ நிவேதா முருகன், ஊருக்கு பொதுவான புறம்போக்கு இடத்தில் குடிசைகட்டி வசிக்கலாமே, பாதுகாப்பு இல்லாத இடத்தில் ஏன் வசிக்கிறீர்கள்என்றும், மந்தை திடலில் வீடுகளை கட்டிக் கொள்ளுங்கள் என சொல்லியதாக கூறப்படுகிறது.இதையடுத்து நரசிங்கநத்தம், கீழக்காலனி, சாமியாங்குன்னம் பகுதிகளில் வாய்க்கால் புறம்போக்கு மற்றும் பாதுகாப்பில்லாமல் வசித்த தலித் சமூகத்தைச் சேர்ந்த 40-க்கும் மேற்பட்ட  குடும்பத்தினர் அப்பகுதியில் உள்ள புறம்போக்கு இடமானமந்தை திடலில்,  வீடு கட்டி வசிக்க லாம் என முடிவு செய்திருந்தனர்.இந்நிலையில் அதை அறிந்த, சாதி ஆதிக்க வெறியர்கள் மந்தை திடலை ஆக்கிரமிக்க முயற்சித்து இருக்கின்றனர். திங்களன்று 30-க்கும் மேற்பட்ட தலித் குடும்பத்தினர் மந்தைதிடலில் குடிசைகளை அமைத்திருக்கின்றனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் பி.சீனிவாசன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் டி.கணேசன், ஏ.வி சிங்காரவேலன், மாவட்டக்குழு உறுப்பினர் டி.சிம்சன், விவசாயிகள் சங்க ஒன்றிய செயலாளர் என்.சந்திரமோகன், கிளைச் செயலாளர் சுந்தர்ராஜ், தம்புசாமி ஆகியோர் தகவலறிந்து தலித் மக்களுக்கு ஆதரவாக இருந்தனர்.

குடிசை போடுவதை அறிந்த வட்டாட்சியர், வருவாய் ஆய்வாளர், கிராம நிர்வாக அலுவலர் மற்றும் காவல்துறையினர் அப்பகுதிக்கு வந்து பார்வையிட்டு இதுவரை அமைத்துள்ள குடிசைகளை தவிர மேலும்குடிசைகளை போடாதீர்கள் என அறிவுறுத்தி சென்றனர். இந்த நிலையில், உருட்டு கட்டைகளுடன் அங்கு வந்தகருணா, கஜேந்திரன், வெங்கட்ராமன், பாலாஜி, ரஞ்சித், சஞ்சீவி உள்ளிட்ட சாதி வெறியர்கள், தலித் மக்கள் அமைத்திருந்த குடிசைகளை அடித்து நொறுக்கி, பெண்களை ஆபாசமாக பேசி கொலை வெறியுடன் கொடூரமாக தாக்கியுள்ளனர். உயிருக்கு ஆபத்தான நிலையிலிருந்த இரு பெண்களை 108 ஆம்புலன்ஸ் மூலம்  மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.காவல்துறையினர் முன்பாகவே நடந்த இச்சம்பவத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளதோடு, தாக்குதலில் ஈடுபட்ட நபர்களை உடனடியாக வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில்கைது செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென மாவட்டச்செயலாளர் பி.சீனிவாசன் வலியுறுத்தி யுள்ளார்.  (ந.நி.)

படக்குறிப்பு : சாதி வெறியர்களால் சூறையாடப்பட்ட தலித் குடிசைகள். தாக்குதலில் பாதிக்கப்பட்ட பெண்கள்.

;