tamilnadu

img

மார்க்சிய அறிவுச்சுடர் தோழர் இ.எம்.எஸ் - தி.வரதராசன்

1909-ஆம் ஆண்டு ஜூன் 19 அன்று கேரளத்தில் ஏலம்குளம் என்ற ஊரில் பிறந்த இ.எம்.எஸ். நம்பூதிரிபாட் திருச்சூர் செயிண்ட் தாமஸ் கல்லூரியில் பி.ஏ. படிக்கையில், பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிரான சிவில் சட்டமறுப்புப் போராட்டத்தில் ஈடுபடுவதற்காக கல்லூரியை விட்டு வெளியேறினார். இதுதான் தேச சுதந்திரப் போராட்டத்தில் அவரது முதலாவது பங்கேற்பு. தோழர் பி.கிருஷ்ணபிள்ளை முதலானோருடன் சேர்ந்து 1934-ல் கேரள காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சியை உருவாக்கினர். 1934 முதல் 1940 வரை காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சியின் அகில இந்திய இணைச் செயலாளராக இருந்தார். 1934-லும், 1938-40லும் கேரள பிரதேச காங்கிரஸ் கமிட்டி செயலாளராகப் பொறுப்பேற்றார். கேரளத்தில் 1937-ல் உருவான கம்யூனிஸ்ட் கட்சியின் முதலாவது குழுவின் உறுப்பினரானார். 1939-ல் கேரளத்தில் காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சியை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி யாக மாற்றுவதில் மிகமுக்கியப் பங்குவகித்தார். 1941-ல் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு உறுப்பின ரானார். 1950-ல் அரசியல் தலைமைக் குழு உறுப்பின ரானார். 1953 - 1956 ஆண்டுகளில் செயல் பொதுச்செய லாளரானார். 1962-63ல் கட்சியின் பொதுச்செயலாளர். அதற்குப் பிறகு கட்சி பிளவுபட்டு 1964-ல் இந்திய கம்யூ னிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) உருவானபோது அதன் அரசியல் தலைமைக் குழு உறுப்பினரானார். 1978 முதல் 1991 வரை கட்சியின் பொதுச்செயலாளராகப் பொறுப்பு வகித்தார். தொடர்ந்து அவர் காலமாகும் வரை கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினராக இருந்தார். 1967, 1970, 1977 ஆகிய ஆண்டுகளில் இ.எம்.எஸ். கேரள சட்டமன்றத் திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1957-59லும், 1967-69லும் கேரள முதலமைச்சராக மகத்தான பணி யாற்றினார். 

1956 நவம்பர் 1-ல் கேரள மாநிலம் உருவாகிய அடுத்த ஆண்டு 1957 பிப்ரவரி 28-ல் முதன்முறையாக 126 சட்டமன்றத் தொகுதிகளுக்கு ஜனநாயக முறையில் நடைபெற்ற தேர்தலில் கம்யூனிஸ்ட் கட்சி தனிப் பெரும்பான்மையுடன் 60 தொகுதிகளில் வெற்றி வாகை சூடியது. (அப்போது மொத்த சட்டமன்றத் தொகுதிகள் 126தான்.) கம்யூனிஸ்ட் கட்சிக்கு  சுயேச்சை எம்.எல்.ஏ.க்கள் 5 பேர் ஆதரவளித்தனர். இதையடுத்து முதன்முறையாக கேரளத்தின் முதலமைச்சர் ஆனார் இ.எம்.எஸ். 

முதலாவது கம்யூனிஸ்ட் அரசு 

இந்தியாவில் முதன்முறையாகத் தேர்தலில் மக்களின் வாக்குச் சீட்டால் தேர்ந்தெடுக்கப்பட்ட இ.எம்.எஸ். தலைமை யிலான கம்யூனிஸ்ட் அரசு கல்வித்துறையில் சீர்திருத்தம், நிலச்சீர்திருத்தச் சட்டங்கள் கொண்டு வந்தது. இதனால் ஆத்திரமுற்ற காங்கிரஸ் கட்சியும், சுயநல சாதி-மத சக்திகளும், பெரும்வசதிபடைத்த மேட்டுக்குடித் தலைவர்களும் கூட்டுச்சேர்ந்து அர்த்தால், வேலை நிறுத்தம் என்பதன் பேரால் பெரும் கலவரங்களுடன் மாநிலம் முழுவதும் ‘விமோச்சன சமரம்’  நடத்தினர்.  ஆட்சிக் கவிழ்ப்பு நோக்கத்துடன் நடத்தப்பட்ட அந்த விமோச்சன சமரத்துக்கு ஏகாதிபத்திய அமெரிக்காவும் பணஉதவி செய்தது. இவ்வாறாக, 1959 ஜூலை 31 அன்று பிரதமர் நேருவின் தலைமையிலான மத்திய அரசு 356-ஈவது சட்டப்பிரிவைப் பயன்படுத்தி கேரளத்தின் கம்யூனிஸ்ட்  அரசை அநியாயமாகக் கலைத்தது. எனினும், 1967 சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் இரண்டாம் முறையாக முதலமைச்சரானார் இ.எம்.எஸ்.

பத்திரிகை ஆசிரியராக...

1932-இல் காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சியின் இடதுசாரி பத்திரிகையாக ‘ப்ரபாதம்’ (விடியல்) என்ற பத்திரிகை வெளி வந்தது. மிக்க சிரமத்துடன் நடத்தப்பட்ட இந்தப் பத்திரிகை யின் ஆசிரியராக இ.எம்.எஸ்-ஸும், நிர்வாகியாக தோழர் ஏ.கே.கோபாலனும் இருந்தனர். பத்திரிகை ஆசிரிய ராகப் பொறுப்பேற்ற இ.எம்.எஸ்-க்கு அப்போது வயது 26. கம்யூனிஸ்ட் கட்சியின் பத்திரிகையாக “தேசாபி மானி”யைத் துவக்கியபோது தமது மூதாதையர் சொத்தி லிருந்து தமக்குக் கிடைத்த பங்கை விற்று அந்தத் தொகையை தேசாபிமானிக்காக வழங்கினார் இ.எம்.எஸ்.

தேசாபிமானி நாளிதழின் முதலாவது இதழில் இ.எம்.எஸ். இவ்வாறு எழுதினார்: “பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் ஒரு புறத்திலும், பாசிஸ்ட் ஐந்தாம்படையினர் மறுபுறத்திலும் நின்று இந்தியாவை அச்சுறுத்திக் கொண்டிருக்கிறார்கள். தேசத் தலைவர்களிடையே ஒற்றுமை இல்லை. பிளவுற்றி ருக்கிறார்கள். இதனால், என்ன செய்வதென்று தெரியாமல் மக்கள் திகைக்கிறார்கள். எதிரியை விரட்டியடித்து சுதந்திரம் பெறவேண்டியிருக்கிறது. ஆபத்தும் அவசரமும் நிறைந்த காலம் இது. இன்றைய தேவை செயலற்றுக் கிடப்பதல்ல. சரியான உத்வேகத்துடன் இலட்சியத்தை நோக்கி முன்னேற வேண்டியுள்ளது...”    

எழுதிய நூல்கள் ஏராளம்

எழுதுவதிலும் வாசிப்பதிலும் மிகுந்த ஈடுபாடு உள்ளவர் இ.எம்.எஸ். “ஒரு மார்க்சியவாதி என்ற முறையில், மனிதன் சேகரித்த அறிவு முழுமையும் எனக்கு அக்கறையுள்ள தாகும். எல்லா நூல்களையும் நான் படிப்பேன். படிப்ப வற்றையெல்லாம் நான் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதில்லை அல்லவா?” என்றார்.  இ.எம்.எஸ். எழுதிய நூல்கள் ஏராளம். கேரளம் மலை யாளிகளின் தாய் பூமி, இந்திய சுதந்திரப் போராட்ட வரலாறு, தன்வரலாறு, மார்க்சிசம்-லெனினிசம் ஒரு பாடப் புத்தகம், கேரளத்தில் கம்யூனிஸ்ட் கட்சி, காந்தியும் காந்தியிசமும், மார்க்சிசமும் மலையாள இலக்கியமும், ஒரு கம்யூனிஸ்ட்டின் நினைவுக் குறிப்புகள். முன்னாள் முத லமைச்சரின் நினைவுக் குறிப்புகள், வாசிப்பின் ஆழங்க ளில், மார்க்ஸ்,ஏங்கெல்ஸ்,லெனின் ஆய்வுலகம் - ஒரு முகவுரை, இந்திய சுதந்திரமும் அதற்குப் பிறகும், காலத்தின்றெ நேர்க்குப் பிடிச்ச கண்ணாடி ஆகியவை இ.எம்.எஸ்.-ஸின் முக்கிய நூல்கள்.

 மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மலையாள வார இதழ் “சிந்தா”வில் 1972 அக்டோபர் 6 முதல் “சோத்யங்க ளுக்கு மறுபடி”( கேள்விகளுக்குப் பதில்) என்கிற பகுதியில் 1261 வாரங்கள் வாசகர்களின் கேள்விகளுக்கு -–ஒரு வாரம்கூட இடையின்றித் தொடர்ந்து பதில் எழுதினார்! அரசியல், தத்துவம், கட்சி ஸ்தாபனம், சமுதாயம், கலை-இலக்கியம், இதிகாசம், கலாச்சாரம் என மிக விரி வான தளங்களில் அந்தக் கேள்வி-பதில் பகுதி இருந்தது. ஒரு கேள்விக்கு ஒரு பக்கம் அளவுக்கு மிக விரிவாக- விளக்க மாக பதில் எழுதுவார். கட்சித் தோழர்களுக்கும் பொது வாசகர்களுக்கும் இ.எம்.எஸ்-ஸின் பதில்கள் மிகவும் பயனுள்ளவையாக இருந்தன. இவை அனைத்தையும் தொகுத்து நூலாக வெளியிட்டால் சராசரி 400 பக்கங்கள் கொண்ட 13 தொகுதிகள்  வரும் என்று, ‘தேசாபிமானி வாரிக’ என்ற வார இதழ் (1997 மார்ச் 9-15) கட்டுரை யொன்று கூறியது. அத்துடன் அதே இதழில் இ.எம்.எஸ் டயரி என்ற பகுதியில் 1991 நவம்பர் 3 முதல் இ.எம்.எஸ். ஒவ்வொரு வாரமும் தொடர்ந்து  எழுதிவந்த 269 கட்டுரைக ளையும் தொகுத்துப் புத்தகம் ஆக்கினால் 1345 பக்கங்கள் வரும்.  “இவன்தான் முதன்மையானவன் என்று இவனுடைய நண்பர்கள் சொல்லிக் கொள்கிறார்கள்...” என்று இ.எம்.எஸ்.ஸின் அன்னை பெருமையுடன் சொன்னதுபோல் இ.எம்.எஸ். முதன்மையானவர்தான்! 

கு.சின்னப்ப பாரதியின்  நாவல்கள் பற்றி...

நாவலாசிரியர் கு.சின்னப்ப பாரதியின் நாவல்களையும் வாசித்து அவற்றுக்கு மதிப்புரையாக ‘சின்னப்ப பாரதி’ என்ற தலைப்பில் ஒரு கட்டுரையே வழங்கியுள்ளார் இ.எம்.எஸ். அதில் அவர் கூறுகிறார்:  “தமிழ்நாட்டின் முற்போக்குக் கலை-இலக்கிய இயக்கத்தின் பிரபல தலைவர்களில் ஒருவர் சின்னப்ப பாரதி. இதுவரை அவர் நான்கு நாவல்கள் எழுதியுள்ளார்.1958-ல் வெளிவந்த நிலவுடைமை எப்போது? 1975-ல் வெளிவந்த தாகம். 1985-ல் வெளிவந்த சங்கம், 1991-ல் வெளிவந்த சர்க்கரை. இவற்றில் தாகம், சர்க்கரை நாவல்களின் ஆங்கில மொழிபெயர்ப்புகள் என்முன் உள்ளன. இவற்றில் முதலாவது நாவலுக்கு நான் முன்னுரை எழுதியிருக்கிறேன்.” என்று தமது கட்டுரையின் துவக்கத்தில் கூறும் இ.எம்.எஸ். தாகம், சர்க்கரை நாவல்கள் குறித்து பாராட்டுதலுடன் ஆழ்ந்த மதிப்பீடு செய்துள்ளார்.

“பாரதியின் (சின்னப்ப பாரதியின்) ‘தாகம்’ என்ற முந்தைய நாவல் தொழில்மயமாகாத கிராமப்புறத்துக் கதை யாகும். ஆனாலும் அதிலும்கூட , சொந்தக் கிராமத்தை விட்டு வெளியில் வாழவேண்டிய நிலையில் இருந்த ஓர் இளைஞன் சங்கம், போராட்டம் என்னும் செய்தியோடு கதைக் களமாகிய கிராமத்துக்கு வந்து சேர்கிறான். அவனது பணிகளின் விளைவாக விவசாயிகளிடையே வர்க்க உணர்வும் சங்கமும் உருவாகி வருகிறது. இதன் உயர்ந்த வடிவமாக சர்க்கரை நாவலைச் சித்தரித்துக் காட்டுகிறார் பாரதி. தொழிற்சங்க இயக்கப் பாரம்பரியமுள்ள ஒரு தலை வர் சர்க்கரை ஆலையில் பணியாற்றுகிற தொழிலாளர்க ளை மட்டுமல்ல,  ஆலையின் சுற்றுப்பகுதியில் உள்ள  கரும்பு விவசாயிகளையும் வர்க்க உணர்வு கொண்டவர்க ளாக்கி வர்க்கப் போராட்டங்களுக்குக் கொண்டு வருகிறார். தமிழ்நாட்டில் வர்க்க உணர்வும் வர்க்க ஸ்தாபனமும் வளர்ந்து வருவதன் இரண்டு கட்டங்கள்தான் தாகமும், சர்க்கரையும்.”

நூல்களுக்கும் நாடகங்களுக்கும்... 

எழுத்தாளர்களின் நூல்களுக்கு இ.எம்.எஸ். எழுதிய அணிந்துரைகளும் ஏராளம் உண்டு. இவற்றையெல்லாம் தொகுத்தால் பெரும்நூலாகிவிடும். பிரபல மூத்த எழுத்தா ளர்கள் முதல் இளம் எழுத்தாளர்கள் வரை தங்கள் நூல்க ளுக்கு இவரது அணிந்துரையைப் பெற்றுள்ளனர். இ.எம்.எஸ். அணிந்துரை என்றால் தங்கள் நூலுக்குத் தனி மரியாதை என்பது அவர்களின் நம்பிக்கை. எழுத்தா ளர்கள் உற்சாகமும் சந்தோசமும் அடையட்டுமே என்று தம்மை நாடிவரும் எழுத்தாளர்களுக்குப் பிரியமுடன் அணிந்துரை எழுதி வழங்குவார். 1940-ல் மகாகவி வள்ளத்தோளும் தமது புகழ்பெற்ற “ஸ்திரீ” என்ற காவிய  நூலுக்கும் மற்றறொரு நூலுக்கும் இளம் இ.எம்.எஸ்.ஸிடம் மதிப்புரை பெற்றுள்ளார்.  கேரளத்தில் நடத்தப்படும் மேடை நாடகங்களை நேரில் சென்று பார்த்து, அந்நாடகங்களைப் பாராட்டியும், குறையைச் சுட்டிக்காட்டியும் பல விமர்சனங்கள் எழுதியுள்ளார். ஃப்ரீடம் ரோடு, குசேல விருத்தம், ஸ்வப்னம் விதச்சவர், அடுக்களையில் நின்னு அரங்கத்தேக்கு, ரக்த பானம், பாட்டம் பாக்கி, நிங்ஙள் என்னெ கம்யூனிஸ்டாக்கி ஆகியவை இ.எம்.எஸ். விமர்சனம் எழுதிய அரசியல், தொழில்முறை மேடை நாடகங்களாகும்.

இலக்கியத்தில் ஐக்கிய முன்னணி

அரசியலில் மட்டுமல்ல இலக்கியத்திலும் ஐக்கிய முன்னணி உருவாக்க வேண்டியதன் அவசியத்தை இ.எம்.எஸ். இங்கே அழகாக விளக்குகிறார். ‘முற்போக்கு இலக்கியமும் கம்யூனிஸ்ட் இலக்கியமும்’ என்ற நூலில் அவர் கூறுகிறார்: “தீவிர அரசியல் பணிகளில் பங்கேற்கா தவரும், சமுதாய அமைப்பில் புரட்சிகர மாற்றங்களை உருவாக்க வேண்டுமென மனதாலும் கருதாதவரும்கூட  முற்போக்கு இலக்கியவாதிகளிடையே அநேகம் பேர் இருப்பார்கள். தொழிலாளி வர்க்கக் கண்ணோட்டம் இல்லையெனினும் ஜனநாயக உணர்வு, மனிதநேயம், ஓர் எழில்மயமான சமத்துவ உலகம் பற்றிய கனவு இவை யெல்லாம் அவர்களுக்கும் இருக்கும். இத்தகையோரது இலக்கியப் படைப்புகளில் குறைகளும் பலவீனங்களும் இருந்த போதிலும் தொழிலாளி வர்க்கத் தலைமையில் உள்ள இயக்கத்திற்கு அவை உதவும். பால்ஸாக்கைப் பற்றி மார்க்சும், டால்ஸ்டாயைப் பற்றி லெனினும் தெரிவித்த மதிப்பீட்டின் உட்கருத்து இதுவேயாகும். அதாவது, தொழி லாளி வர்க்கக் கண்ணோட்டத்தைப் பெற்றிராதவராகவும், உணர்வுப்பூர்வமாகப் புரட்சிகரப் பணிகளில் பங்கேற்காத வராகவும் இருந்தபோதிலும், சமுதாய மாற்றத்திற்கு ஒருகட்டம் வரை உதவும் நூல்களைப் படைத்து வழங்குகிற முற்போக்கு இலக்கியவாதிகளும் உள்ளனர். அவர்களிடம் நட்புணர்வோடும் ஒத்துழைப்பு மனோபாவத்தோடும் நடந்துகொள்கிற கடமை நமக்கு உண்டு. அத்துடன், அந்த நண்பர்களின் கண்ணோட்டத்தில் வெளிப்படுகிற குறைகளையும் பலவீனங்களையும் நட்பு ரீதியில் எடுத்துக்காட்டி விமர்சிப்பது நமது கட்டாயக் கடமை. இவை இரண்டும்  சேர்ந்ததுதான் இலக்கியத்தில் ஐக்கிய முன்னணி என்பது.”

செம்மலர்க்கு வாழ்த்து

1970-ஆம் ஆண்டு மே மாதம் செம்மலர் இலக்கிய இதழ் பிறந்தபோது அதற்கு வாழ்த்துத் தெரிவித்து தோழர் இ.எம்.எஸ் எழுதிய கடிதத்தில். தமிழ் இலக்கியத்தின் முற்போக்குப் பாரம்பரியத்தை முன்னுக்குக் கொண்டுவர ஒரு திங்கள் இதழ் துவங்க விருப்பதாகக் கூறும் உங்களின் 25.3.70 தேதிய கடிதம் கண்டு மகிழ்ச்சியடைகிறேன். வெற்றிபெற வாழ்த்துகிறேன். இ.எம்.எஸ்.ஸிடம்  வாழ்த்துப் பெற்ற செம்மலர் இன்று 50-ஆம் ஆண்டு பொன்விழா கொண்டாடுகிறது!

சிந்திப்பதை நிறுத்திவிட்டார்...

மார்க்ஸ் இறந்தபோது அவரது ஆருயிர்த் தோழர் ஏங்கெல்ஸ் நெஞ்சம் நெகிழச் சொன்னார் “மார்க்ஸ்  இப்போது சிந்திப்பதை நிறுத்திவிட்டார்” என்று. அவ்வாறு தான், மார்க்சிய ஞானி இ.எம்.எஸ்.- அந்த மூதறிஞர் தமது 89-வது வயதிலும் 19.3.1998 அன்று தமது வாடகை வீட்டில் அமர்ந்தபடி மற்ற பத்திரிகைகளுக்கான இரண்டு கட்டுரைகளை எழுதி முடித்துவிட்டு, தேசாபிமானிக்கான மூன்றாவது கட்டுரைக்கான வாசகங்களைத் தமது உதவியாளர்க்குச் சொல்லிக் கொண்டிருந்தபோதே திடீரென அவருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டது. உடன் டாக்டர்கள் வரவழைக்கப்பட்டு மருத்துவமனைக்குக் கொண்டுசென்றும் சிகிச்சை பலனின்றி இறந்துவிட்டார்! மார்க்ஸ் இறந்தபோது ஏங்கெல்ஸ் சொன்னதை இங்கே இ.எம்.எஸ்-க்கும் பொருத்திப் பார்க்கலாம்: இ.எம்.எஸ் அப்போது சிந்திப்பதை நிறுத்திவிட்டார்! தேசத்தின் இந்த மகத்தான அறிவுச் சுடர் தமது கட்சியின், தோழர்களின், உழைக்கும் வர்க்கத்தின் சிந்தனையில் புரட்சிகர அறிவுச் சுடர் ஏற்றிவைத்துள்ளது. அந்தச் சுடர் தேசத்தின் புதிய பாதைக்கு வழிகாட்டுகிறது. 

இ.எம்.எஸ். எழுதிய “இந்திய தேசியத்தின் ஆன்மா” என்ற கட்டுரையில் அவர் தெரிவித்துள்ள பின்வரும் கருத்து இன்று நம் சிந்தனையில் வைத்துக்கொள்ள வேண்டிய தாகும்: “எந்தச் சாதியைச் சேர்ந்தவராக இருந்தாலும், எந்த மதநம்பிக்கை கொண்டவராக இருந்தாலும், எந்த மொழி யைப் பேசுகிறவராக இருந்தாலும், நாட்டின் எந்தப் பகுதியில் வாழ்பவராக இருந்தாலும், காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரையும், குஜராத்தும் சிந்துவும் தொட்டு அசாம் முதலான வடகிழக்குப் பிரதேசங்கள் வரையும் வாழ்கிற கோடிக்க ணக்கான மக்கள் சேர்ந்ததே இந்தியா. இந்த மக்களின் சுதந்திர வேட்கையும், தேச ஒற்றுமைத் தாகமுமே இந்தியாவை ஒரு தேசமாக உருவாக்கியது.”

நிறைவாக, இ.எம்.எஸ்.ஸின் ஒரு மணிவாசகம்: “குருவிடமிருந்து நான் உபதேசம் பெறவில்லை. நான் இந்த நாட்டில் நடைபெறுகிற நிகழ்வுகளைப் பார்த்துப் புரிந்து கொண்டு களத்தில் இறங்கியவன். சிறுவயதிலி ருந்தே அரசியல் விஷயங்களைக் கற்கவும், புரிந்து கொள்ளவும் முயன்றேன். அதன் விளைவாகவே நான் இந்த அளவுக்கு உயர்ந்தேன். எனது இலட்சியம் எனது வாழ்நாளிலேயே நிறைவேற வேண்டும் என்ற பிடிவாதம் எதுவும் எனக்கு இல்லை. எனது காலத்திற்குப் பின்னராவது நிறைவேறினால் போதும்.”

இன்று (மார்ச் 19) தோழர் இஎம்எஸ் நினைவு நாள்