தமிழகத்தில் வார, மாத சந்தைகள், கோவில்கள், சுற்று லாத்தலங்கள், பேருந்து நிறுத்தங்கள், கடை வீதிகள் என தள்ளுவண்டிகளில்; சாலையோர தரைக்கடைக ளில், தலைச் சுமைகளில் என சில்லரை விற்பனையில் கணிசமான பொருட்களை விற்பனை செய்பவர்களாக - சமூகத்தின் பிரிக்க முடியாத ஒரு அங்கமாக இருப்பவர்கள் தெருவோர வியாபாரிகள். நகர்ப்புற மக்கள் தொகையில் 2.5 சதமானம் உள்ள இவர்கள் பல்வேறு பொருட்களை விற்பனை செய்பவர்க ளாக உள்ளனர். காய்கறி, பழம், பூ, பொம்மைகள், பிளாஸ்டிக் சாமான்கள், ஆயத்த ஆடைகள், உணவு மற்றும் பலகார கடைகள், இளநீர், நுங்கு, கம்மங்கூழ், வாழைபழம், தர்பூசணி போன்ற சாலையோர வியாபாரத்தில் மட்டுமே விற்கப்படும் பொருட்கள் ஏராளம். நிரந்தர வேலை கிடைக்காதோர், சிறுபான்மையினர், பெண்கள், பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட சமூகத்தினர், கைம் பெண்கள், மாற்றுத்திறனாளிகள் என சமூகத்தின் விளிம்பு நிலையில் உள்ளவர்கள் தான் சாலையோர வியாபாரிகள்.
‘‘ஐந்து வயதுடைய மைந்தனும் உழைப்பான்
அஷ்ட மாதக் கர்ப்பிணி அழுதழு துழைப்பாள்
தந்தையும் ராப்பகல் நொந்துதான் உழைப்பான்
சஞ்சலம் தரித்திரங்கள் மிஞ்சி உழைப் போரைத்
தின்னும்’’
-என்கிற ஜீவாவின் கவிதையைப் போல் குடும்பமே உழைத்து வாழ்க்கையை ஓட்டும் நிலையில் இருப்பவன்தான் சாலையோர வியாபாரி.
இந்த எளிய மக்களைத் தான் காவல்துறை, மாநகராட்சி, நகராட்சி அதிகாரிகள், ஆளுங்கட்சியை சேர்ந்த உள்ளாட்சி பிரதிநிதிகள், தலைமைப் பொறுப்பில் உள்ளவர்கள், அரசியல் பிரமுகர்கள், உள்ளூர் ரவுடிகள் என பலவகையில் இந்தத் தெருவோர உழைப்பாளிகளை தொழிலாளர்களை மிரட்டுவதும், வியாபாரம் செய்யவிடாமல் தடுப்பதுமான செயல்கள் தமிழகத்தில் அனைத்து நகரங்க ளிலும் நடந்து வருகிறது. ஏதாவது ஒரு இடத்தில் தொடர்ந்து வியாபாரம் செய்யவேண்டுமென்றால் மேலே கண்ட அதி காரிகள், மக்கள் பிரதிநிதிகள் அல்லது இருவருக்கும் சேர்த்து மாமூல் என்ற பெயரில் தினம் ஒரு தொகை அல்லது மொத்த மாக ஒரு தொகை வழங்கி வருவதும், காவல்துறை வாரம் ஒரு வழக்கு, மாதம் இரண்டு வழக்கு என பொய் வழக்கு களை போட்டு நீதிமன்றத்துக்கு அலைக்கழிப்பதுமாக தமிழகத்தில் நாளும் நடைபெற்று வருகிறது. சாலையோர வியாபாரிகள் முழுவதுமே ஏதோ ஆக்கிர மிப்பாளர்கள், குற்றவாளிகள் போன்று காவல்துறையால், உள்ளாட்சி அமைப்புகளால் தொடர்ந்து சித்தரிக்கப்பட்டு வருகிறார்கள். எனவே தான் ஆக்கிரமிப்பு அகற்றுதல் என்ற பெயரில் பொருட்களை பறிமுதல் செய்வது, அடித்து நொறுக்குவது போன்ற செயல்களில் உள்ளாட்சி அமைப்பும், காவல்துறையும் தொடர்ந்து செய்து வருகிறது.
இத்தகைய தொழிலாளர்கள் குறித்து ‘முறைசாரா தொழில் புரிபவர்களுக்கான தேசிய குழுவானது’ 2007 ல் தேசிய அளவில் ஒரு புள்ளி விவரத்தை வெளியிட்டது. அதில் சாலையோர ஆண் வியாபாரிகள் தினந்தோறும் ரூ.70 வரையிலும், பெண்கள் ரூ.40 வரையிலும் வருமானம் ஈட்டுபவர்களாக தெரிவித்துள்ளது. தற்போது சற்று உயர்ந்தி ருக்கலாம். அவர்கள் தொடர்ந்து ஏழைகளாகவே திகழ்ந்து வருகிறார்கள். அதற்கு பல காரணங்களில் ஒன்று இத்தொழி லாளர்கள் வியாபார முதலீட்டுக்காகவும், மருத்துவம், குழந்தை கள் கல்வி, திருமணம், மற்றும் விஷேசங்களுக்காக கந்து வட்டிக் காரர்களை நாடுவதும், சம்பாதிக்கும் வருமானத்தில் பெரும் பகுதியை கந்து வட்டி, ரன் வட்டி, மீட்டர் வட்டி போன்ற வற்றில் இழந்து விடுவதும் தொடர்ந்து கடனாளியாக இருப்பதும்தான். எனவே இத்தகைய சாலையோர வியாபாரிகள் நிரந்தரமாக, நிம்மதியாக, சுயமரியாதையாக வியாபாரம் செய்வதற்கு சிஐடியு தலைமையேற்று பல்வேறு களப் போராட்டங்களையும், சட்டப் போராட்டங்களும் அதன் தொடர்ச்சியாக பெரும் எண்ணிக்கையில் உள்ள தில்லி மாநகர சாலையோர வியாபாரிகளுக்கு ஆதரவாக கிடைத்த நீதிமன்ற உத்தரவும், தமிழகத்தில் சென்னையில் மூத்த வழக்கறிஞர் ஆர். வைகை அவர்களின் பெரும் முயற்சியில் கிடைத்த நீதிமன்ற உத்தரவும், திருச்சியில் மூத்த வழக் கறிஞர் ஜமீல் அரசு அவர்கள் தொழிலாளர்களுக்கு ஆதரவாக பெற்றுக் கொடுத்த உயர்நீதிமன்ற தடை உத்தரவும், உருத்தாணைகளும் தொழிலாளர்கள் மீது தொடுக்கப்பட்ட மாநகராட்சி மற்றும் காவல்துறையின் அத்துமீறல்களை ஓரளவு குறைக்க உதவியது.
உச்சநீதிமன்றம் 1989 ல் வரையறை செய்து விதி 19(1) ன் கீழ் நடைபாதை, தெருக்கள் மற்றும் மக்கள் நடமாடும் பகுதி களில் மக்களுக்கு இடைஞ்சல் இல்லாத வகைகளில் சாலை யோர வியாபாரிகள் விற்பனை செய்ய அவர்களுக்கு பாது காப்பான விற்பனை மையம் அமைத்து கொடுக்க வேண்டும் என தில்லி மாநகராட்சிக்கு ஒரு உத்தரவு பிறப்பித்தது. அதை தொடர்ந்து தில்லி நகர வியாபாரிகளுக்கு வியாபாரம் செய்ய, உரிமம், அடையாள அட்டை, இடம் ஒதுக்கித் தரப்பட்டது. அதைத் தொடர்ந்து பிரதமர் தலைமையில் சாலையோர வியாபாரிகளுக்கான தேசிய கொள்கை உருவாக்கப்பட்டு இந்த கொள்கையின்படி சாலையோர வியாபாரிகள் பாது காப்பாக தொழில் புரிவதோடு, நியாயமான விலையில் வசதி யான இடத்தில் விற்பனை செய்ய கொள்கை வகுத்தளித்தது. இதை தொடர்ந்து அதில் பல்வேறு மாற்றங்கள் செய்யப் பட்டு ‘சாலையோர வியாபாரிகள் வாழ்வாதார பாதுகாப்பு மற்றும் சாலையோர வியாபாரத்தை முறைப்படுத்துதல் சட்டம்-2014’ என்கிற சட்டத்தை மத்திய அரசு நிறைவேற்றியுள்ளது. சாலையோர வியாபாரிகளை பாதுகாப்பது மற்றும் சாலை யோர வியாபாரத்தை முறைப்படுத்துதல் குறித்து மத்திய சட்டம் இயற்றப்பட்டிருந்தாலும் அது நடைமுறையில் எந்த அளவிற்கு தொழிலாளர்களின் பயன்பாட்டிற்கு வரும் என கூற இயலாது.
இந்தியாவில் சுமார் மூன்றரைக் கோடி சாலையோர வியாபாரிகளின் வாழ்க்கையில் இந்த சட்டம் எத்தகைய மாற்றத்தை, பாதுகாப்பை வழங்கப்போகிறது என்பதைப் பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும். தமிழகத்தில் 12 மாநகராட்சிகள், 149 நகராட்சிகள், 561 பேரூராட்சிகள் என நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் உள்ளன. இதில் மத்திய சட்டப்படி மாநகராட்சி, நகராட்சிக்கு மட்டுமே மேற்கண்ட சட்டம் பொருந்தும். இந்தியாவில் வேறெங்கும் இல்லாத பேரூராட்சி அமைப்புகளை இச்சட்டத்தில் இணைக்க தமிழக அரசை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் இருந்தபோது கோரிக்கை வைத்ததின் விளைவாக, பேரூராட்சி கள் இச்சட்டத்தில் இணைக்கப்பட்டு, தமிழக அரசால் மத்திய சட்டத்திற்குசெயல்வடிவம் என்ற அடிப்படையில் 2015 நவம்பர் 2 அன்று அரசாணை வெளியிட்டு, சாலையோர வியாபாரிகள் வாழ்வாதார பாதுகாப்பு மற்றும் சாலையோர வியாபாரிகள் முறைப்படுத்துதல் சட்டம்-2015 இயற்றி அறிவிக்கை வெளியிடப்பட்டது. அதைத் தொடர்ந்து தமிழகத்தில் சில மாநகராட்சிகள், நகராட்சிகளில் சாலையோர வியாபாரிகளை கணக்கெடுப்பு செய்து அடையாள அட்டை வழங்கி தேர்தல் நடத்தி ‘விற் பனைக்குழு’ அமைக்கப்பட்டுள்ளது. தேர்தல் நடைபெறாத பல்வேறு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் மேற்கண்ட சட்டம் குறித்து எந்தவித புரிதலும் இல்லாமல் ஆக்கிரமிப்புகளை அகற்றுவது என்ற பெயரில் தொடர்ந்து சாலையோர வியாபாரிகளை சித்ர வதைப்படுத்தும் செயல் தொடர்கிறது.
எனவே மத்திய சட்டத்தில் கூறப்பட்டுள்ளதுபோல் தமிழக அரசு உடனடியாக சட்ட அமலாக்கம் - கண்காணிப்புகுறித்து உரிய அதிகார அமைப்பை உருவாக்க வேண்டும்.
♦ தமிழ் நாட்டில் மத்திய, மாநிலச் சட்டப்படி மாநில தொடர்பு அதிகாரியை உடனடியாக நியமித்திட வேண்டும்.
♦ மாவட்ட அளவில் அதிகாரிகளை நியமனம் செய்து சட்டம் குறித்த புரிதலை உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் காவல்துறையினருக்கு உருவாக்க வேண்டும்.
♦ மத்திய சட்டத்தில் கூறப்பட்டுள்ளதுபோல் சட்டம் நடைமுறைக்கு வந்த பின்பு தமிழகத்தில் விற்பனைகுழு, விற்பனை மண்டலம், உரிமம், அடையாள அட்டை வழங்காமல் சாலையோர வியாபாரிகளை அப்புறப்படுத்தும் செயலை தடுத்து நிறுத்த வேண்டும்.
♦ தேர்ந்தெடுக்கப்படும் விற்பனைக்குழு 16 பேர் என்ற எண்ணிக்கையில் 10 பேர் சாலையோர வியாபாரிகள் இருக்கும்படி சட்ட திருத்தம் செய்திட வேண்டும். இதற்கான போராட்டங்களை திருச்சி மாநகர் உட்பட தமிழகத்தின் பலபகுதிகளிலும் சிஐடியுவும், மார்க்சிஸ்ட் கட்சியும் முன்னெடுத்து வருகின்றன.
கட்டுரையாளர்: சிபிஐ(எம்)
திருச்சி மாநகர் மாவட்டச் செயலாளர்