tamilnadu

img

தங்கையை அழைத்துச்செல்ல பழுதான சைக்கிளில் 80 கி.மீ பயணித்து தேனி வந்த சகோதரர்

தேனி:
கொரோனா நோய் தொற்று பரவலின் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில்  உடல்நிலை சரியில்லாத தனது தாயைக் காண முடியாமல் தவித்து வந்த தனது சகோதரியை தேனியிலிருந்து மதுரைக்கு அழைத்துச் செல்ல  பழுதான சைக்கிளில் அவரது சகோதரர் சென்ற சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை கூடல்நகர் அருகே உள்ள தினமணி நகரைச் சேர்ந்தவர் தமிழ்செல்வி. கனவரை இழந்த இவருக்கு ஜீவராஜ், பிரவீனா என்ற இரு பிள்ளைகள் உள்ளனர். இவர்களில் பிரவீனா தேனி அரவிந்த் கண் மருத்துவமனையில் செவிலியராகப் பணி புரிந்து வருகிறார். இந்த நிலையில்  ஊரடங்கால்  வருமானமின்றி  சிக்கலை சந்தித்து தமிழ்ச்செல்விக்கு உடல் நிலை சரியில்லாமல் போகவே. தனது மகளை எப்படியாவது அழைத்து வருமாறு தனது மகன் ஜீவராஜிடம்  கூறியுள்ளார்.  இதையடுத்து தேனிக்குச் சென்று தனது தங்கையை அழைத்து வருவதற்காக தம்முடைய பழுதான  சைக்கிளில்  திங்கள் காலை மதுரையிலிருந்து கிளம்பியுள்ளார் ஜீவராஜ்.  80 கி.மீ தொலைவிலுள்ள தேனியை  நள்ளிரவு வந்தடைந்தார்.  

பின்னர் தனது சகோதரி பணிபுரியும் தனியார் மருத்துவமனை முன்பு இருந்த பயணியர்  நிழற்குடையில் தங்கியிருந்து காலை மருத்துவமனை திறந்ததும் தனது தங்கையை அழைக்க வந்திருப்பதாக மருத்துவமனை நிர்வாகத்திடம் தெரிவித்துள்ளார்.  இதையடுத்து  சூழ்நிலையைப் புரிந்து அவரின் தங்கையை அழைத்துச் செல்ல மருத்துவமனை நிர்வாகம் அனுமதி அளித்தது.    தங்கையை அதே பழுதான சைக்கிளில் மதுரைக்கு அழைத்துச் செல்ல முடியாத நிலையில் காவல்துறையினரிடம் ஜீவராஜ் முறையிட்டுள்ளார். அவர்கள் வாகனம் ஏற்பாடு செய்தனர். இதையடுத்து தனது சைக்கிளை தேனி காவல் நிலையம் முன்பு நிறுத்திவிட்டு காவல்துறையினர்  ஏற்பாடு செய்த  காரில் அவர்களது  ஒத்துழைப்புடன் மதுரைக்கு தனது தங்கையை அழைத்துச் சென்றார்.

தாயின் சொல்லை தட்டாத மகன் 80 கி.மீ தூரம் பழுதான சைக்கிளில் தனது தங்கையை அழைத்துச் செல்ல தேனி வந்த  சம்பவம் நெஞ்சை நெகிழச்செய்வதாக இருந்தது.

-நமது நிருபர்

;