tamilnadu

கம்பத்தில் கொரோனா சிகிச்சைப் பிரிவிற்கு திமுக எதிர்ப்பு

தேனி, மே 24- கம்பம் அரசு மருத்துவமனையில் தொடங்கப்பட்டுள்ள கொரோனா சிகிச்சைப் பிரிவை தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு இடம் மாற்றம் செய்ய வேண்டும் என திமுக தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளது தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திமுக மாவட்டப் பொறுப்பாளர் நா.ராமகிருஷ்ணன், ஆண்டிபட்டி சட்டமன்ற உறுப்பினர் ஏ.மகாராஜன், போடி சட்டமன்ற முன்னாள் உறுப்பினர் எஸ்.லட்சுமணன் மற்றும் திமுக நிர்வாகிகள் மாவட்ட வருவாய் அலுவலர் ரமேஷிடம் அளித்த மனு விபரம்:  கம்பம் அரசு மருத்துவமனையில் புதிதாக தொடங்கப்பட்டுள்ள கொரோனா சிகிச்சைப் பிரிவை தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு இடம் மாற்றம் செய்ய வேண்டும். சின்னமனூர் ஒன்றியத்திலுள்ள ஓடைப்பட்டி, முத்துலாபுரம் ஆகிய பகுதிகளில் 20க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதால், அப் பகுதிகளில் சமூக பரவலைத் தடுப்பதற்கு அனைத்து பொதுமக்களுக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். கேரள மாநிலம், இடுக்கி மாவட்டத்தில் ஏலக்காய் விவசாயத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகள் மற்றும் தோட்டத் தொழிலாளர்கள் விவசாயப் பணிகளுக்காக ஏலக்காய் தோட்டங்களுக்கு தடையின்றி சென்று வர அனுமதி வழங்க வேண்டும். என்று மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.