tamilnadu

img

686 பயணிகளுடன் இலங்கை கப்பல் தூத்துக்குடி வருகை

தூத்துக்குடி:
தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்திற்கு இலங்கை கொழும்பில் இருந்து ஐஎன்எஸ் ஜலஸ்வா கப்பல் மூலம் செவ்வாயன்று 686 பயணிகள் வந்துள்ளனர்.

கொரோனா பரவல் ஊரடங்கு காரணமாக இலங்கை நாட்டில் தவித்த தமிழகத்தைச் சேர்ந்த மக்களை ஐஎன்எஸ் ஜலஸ்வா என்ற கப்பல் மூலம் அழைத்து வர ஏற்பாடு செய்யப்பட்டது. இதன்படி இந்த கப்பல்  686 பயணிகளுடன் கொழும்பில் இருந்து புறப்பட்டு தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்திற்கு செவ்வாயன்று காலை வந்தது. இதில் தமிழகத்தின் 32 மாவட்டங்களைச் சேர்ந்த 557 ஆண்கள், 129 பெண்கள் என மொத்தம் 686 பயணிகள் வந்துள்ளனர். முன்னதாக துறைமுகத்திற்கு வந்த பயணிகளை துறைமுக பொறுப்புக்கழகத்தின் தலைவர் டி.கே.ராமச்சந்திரன், மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி மற்றும் அதிகாரிகள் வரவேற்றனர்.

பயணிகளுக்கு உடல் வெப்பநிலை பரிசோதனை செய்யப்பட்டது. பின்னர் அவர்களை தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக பேருந்துகள் மூலம் அவர்களது சொந்த மாவட்டத்திற்கு அனுப்பி வைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மேலும், பயணிகளுக்கு காலை உணவு பேருந்துகளில் வழங்கிட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. மாநகராட்சி ஆணையர் வீ.ப.ஜெயசீலன், கூடுதல் ஆட்சியர் (வருவாய்) விஷ்ணுசந்திரன், சார் ஆட்சியர் சிம்ரோன் ஜித் சிங் காலோன், தூத்துக்குடி வ.உ.சி. துறைமுக பொறுப்புக்கழக துணைத்தலைவர் பிமல் குமார் ஜா, உதவி ஆட்சியர் (பயிற்சி) எம்.பிரித்திவி ராஜ், துறைமுக பொறுப்புக்கழக முதன்மை பொறியாளர் ரவிகுமார் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

;