tamilnadu

img

மோட்டார் வாகனத் துறை போல் நுகர்பொருள் வணிகமும் சரியும் அபாயம் வரி பயங்கரவாதத்தின் உச்சம்

சுதந்திர இந்தியாவில், ஒரு மறைமுக வரியின் அமலாக்கம் ஆயிரக்கணக்கான தொழில் வணிகத்துறையினரை வியாபாரத்தை விட்டே ஓடச் செய்த ‘பெருமை’ ஜிஎஸ்டி  வரி அமலாக்கத்திற்கு உண்டு.

மதுரை, ஆக. 21 - மத்திய பாஜக அரசு அமலாக்கி யுள்ள ஜிஎஸ்டி வரி விதிப்பு முறை யால் இந்திய மோட்டார் வாகன தொழில்துறை வரலாறு காணாத சரிவை சந்தித்திருப்பது போல், எப்எம்சிஜி எனப்படும் நுகர்ப் பொருள் வணிகமும் மிகப்பெரும் வீழ்ச்சியை சந்திக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது என வர்த்தகர்கள் எச்சரிக்கை மணி அடித்துள்ளனர். ‘வரி பயங்கரவாதத்தை’ தவிர்க்கப்போவதாகக் கூறி, நரேந்திர மோடி அரசு கொண்டுவந்து அமலாக்கியுள்ள ஜிஎஸ்டி வரி முறைதான் உண்மையிலேயே ‘வரி பயங்கரவாதத்தின் உச்சம்’ என்றும் கடுமையாக சாடியுள்ளனர். இதுதொடர்பாக தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கத்தின் முது நிலைத் தலைவர் எஸ்.இரத்தின வேல், தலைவர் என்.ஜெகதீசன் ஆகியோர் ஆகஸ்ட் 21 புதனன்று விடுத்துள்ள விரிவான அறிக்கை வருமாறு: சுதந்திர இந்தியாவில், ஒரு மறைமுக வரியின் அமலாக்கம் ஆயிரக்கணக்கான தொழில் வணி கத் துறையினரை வியாபாரத்தை விட்டே ஓடச் செய்த ‘பெருமை’ ஜி.எஸ்.டி வரி அமலாக்கத்திற்கு உண்டு. மிகவும் முற்போக்கான ஜி.எஸ்.டி வரி முறையை அந்த  அளவுக்குச் சிக்கலாக்கிவிட்டார்கள். வரி வீதங்களை தாங்கமுடியாத அளவுக்கு அதிகமாக நிர்ணயித்து,  வரி அதிகாரிகளும், தணிக்கை யாளர்களும் கூட புரிந்துகொள்ள முடியாத வகையில் மத்திய அரசு  நாளொரு திருத்தமும், பொழுதொரு விளக்கமும் கொடுத்து சட்டத்தைக் கடைப்பிடிப்பதற்கே அதிக நேரமும், பணமும் செலவழிக்க வேண்டிய சூழலை உருவாக்கிவிட்டார்கள். ஜி.எஸ்.டி வரிச் சட்டஅமலாக்கத்தில் முக்கிய பங்காற்றும் தொழில் வணிகத் துறையினரைக் கலந்து பேசாததே இந்த குழப்பங்களுக்குக் காரணம்.
அடுத்த பாதிப்பு நுகர்பொருள் வணிகத்திற்கு
ஆட்டோ மொபைல் தொழிலைத் தொடர்ந்து ஜி.எஸ்.டி வரியின் குளறுபடியான அமலாக்கத்தால் அடுத்து பாதிக்கப்படப்போவது, எப்எம்சிஜி (F.M.C.G) என்றழைக்கப் படும் நுகர்பொருள் வணிகம்தான். நுகர்பொருள் வணிகத்தில், சரக்குகளை தங்கள் டீலர்களுக்கு விற்பனை செய்த நிறுவனங்கள், அதன் பின் பல்வேறு காரணங் களுக்காக, குறிப்பாக டீலர்கள் கையிருப்பில் உள்ள சரக்கின் விலையைக் குறைத்து நுகர்வோ ருக்கு வேகமாக விற்பதற்கு சரக்கு சப்ளை நிறுவனங்கள் டிஸ்கவுண்ட் (தள்ளுபடி) கொடுப்பது வழக்கம். இது அத்தொழிலில் தவிர்க்க முடி யாத ஒன்று. இத்தகைய டிஸ்கவுண்ட் ஜி.எஸ்.டி வரி விதிப்பிற்கு உட் படாது. ஆனால் சட்டம் அமலாகி இரண்டாண்டுகளுக்குப் பிறகு மத்திய மறைமுகவரி வாரியம் 28.06.2019 தேதியிட்டு வெளி யிட்டுள்ள எண் 106 சுற்றறிக்கையில் இத்தகைய டிஸ்கவுண்ட் குறித்து கொடுத்திருக்கும் விளக்கங்கள் குழப்பத்தின் உச்சகட்டமாகும். நுகர்பொருள் வணிகத்தில் ஈடு பட்டுள்ள சிறிய, நடுத்தர வர்த்த கர்கள் அவற்றைப் புரிந்துகொள்ள  முடியாமலும், அதற்கேற்ப கணக்கு களை பராமரிக்க முடியாமலும் தங்கள் வணிகத்தையே நிறுத்த வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது மிகவும் வேதனைக்குரியது. இதனால் லட்சக்கணக்கானோர் வேலை இழப்பர்.

மத்திய அரசின் குழப்பமான விளக்கங்கள்
1. டீலரிடம் உள்ள இருப்புச் சரக்கை வேகமாக விற்க, சரக்கை விற்ற நிறுவனம், டீலருக்கு டிஸ்கவுண்ட் கொடுக்கும் பொழுது, “இத்தொகை சிறப்பு விற்பனை முயற்சியை மேற்கொள்வதற்காகக் கொடுக்கப்படுகிறது” என்று குறிப்பிட்டுக் கொடுத்தால், சரக்கை வாங்கிய டீலர் சரக்கை விற்றவருக்கு சேவை அளிப்பவ ராகக் கருதப்படுவாராம். எனவே, அந்த டிஸ்கவுண்ட் தொகைக்கு டீலர் தனக்கு சரக்கை விற்றவருக்கு சேவை சப்ளைக்கான பில் போட்டு 18 சதவீதம் வரி வசூலித்து செலுத்த வேண்டுமாம். சரக்கை விற்றவர், வாங்கிய டீலர் இடையே உள்ள விற்றவர் - வாங்கியவர் உறவு, அதே விற்பனை நடவடிக்கையில் எப்படி சேவை அளிப்பவர், சேவை பெறுகிறவர் உறவாக மாற முடியும்? இது கற்பனையையும் மிஞ்சிய விளக்கமாகும்.
2. தங்களிடம் தேங்கிவிட்ட சரக்கை, டீலர் தனது வாடிக்கை யாளருக்கு விலையைக் குறைத்து வேகமாக விற்பதற்காக, சரக்கை சப்ளை செய்த நிறுவனம், டீலருக்கு டிஸ்கவுண்ட் கொடுத்தால், அந்த டிஸ்கவுண்ட், சரக்கைக் குறைத்து விற்ற டீலருக்கு சரக்கின் சப்ளையர் கொடுக்கும் விலையாகக் கருதப்படுமாம். எனவே, டீலர் சரக்கு சப்ளையருக்கு அந்த டிஸ்கவுண்ட் தொகைக்கு பில் போட்டு வரி வசூலித்து செலுத்த வேண்டும்.
நுகர்வோருக்கு பொருளின் விலையைக் குறைத்துக் கொடுத்தா லும் சிக்கல். தொழில் வணிகம் பாதிக்கும் வகையில் யதார்த்த நிலைக்கு எதி ராகக் கொடுக்கப்படும் விளக்கத் திற்கு இது ஒரு உதாரணமாகும். இந்த விநோதமான விளக்கங் களை எல்லாம் முன் தேதியிட்டு ஜி.எஸ்.டி அமலாக்கத் தேதியான 1.7.2017 முதல் அமலாக்கினால் நுகர்பொருள் வணிகத்தில் ஈடு பட்டுள்ள சிறு, நடுத்தர வணிகர்கள் மிக அதிகமாக விதிக்கப்படும் வரி, வட்டி, அபராதம் ஆகியவற்றை செலுத்த முடியாமல் நிறுவனத்தை யே மூடுவதைத்தவிர வேறு வழியில்லை. எனவே 26.6.2019ஆம் நாளிட்ட 106ம் எண் சுற்றறிக்கையை மத்திய அரசு உடனே வாபஸ் பெற வேண்டும். ஜி.எஸ்.டி வரியை அறிமுகப்படுத்தும் பொழுது பிரதமர் மோடி அவர்கள், ஏற்கெனவே உள்ள வரிச் சட்டங்களினால் ஏற்  பட்டுள்ள “வரி பயங்கரவாதத்தைத்” தவிர்க்கவே எளிமையான ஜி.எஸ்.டி வரி என்றார். ஆனால் ஜி.எஸ்.டி  வரியை அமலாக்கம் செய்யும் முறைதான் “வரி பயங்கரவாதத்தின் உச்சம்”. இப்பிரச்சனையில் பிரதமர் மோடி தலையிட்டு,தான் வாக்குறுதி அளித்தபடி, ஜி.எஸ்.டி வரியை “நல்ல மற்றும் எளிமையான வரி யாக” (Good & Simple Tax) மாற்றி அமலாக்கம் செய்ய வேண்டும். இல்லாவிட்டால் பல்வேறு துறை தொழில் வணிகம் பாதிக்கப்பட்டு நாட்டின் பொருளாதாரம் சீர்கேடு அடையும். இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.  

;