tamilnadu

img

குடியுரிமைச் சட்டம், வேளாண் மண்டல பாதுகாப்பு மசோதாவில் தமிழக அரசிடம் தெளிவு இல்லை...

திருவாரூர்:
மத்திய அரசால் கொண்டு வரப்பட்டுள்ள குடியுரிமை திருத்தசட்டத்திற்கு எதிராக தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றாமலும் டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்திட அரைகுறையாக மசோதா நிறைவேற்றியும் குழப்ப நிலையில் தமிழக அரசு உள்ளது. 

இந்த இரு பிரச்சனைகளிலும் அரசிடம் தெளிவு இல்லை என சிபிஎம் மாநிலச் செயலாளர்கே.பாலகிருஷ்ணன் குற்றம்சாட்டியுள்ளார். திருவாரூரில் வியாழக்கிழமையன்று மாலை அவர் செய்தியாளர்களைச் சந்தித்து மேலும் தெரிவித்ததாவது,நாட்டில் உள்ள பொருளாதார மந்த நிலை, வேலைவாய்ப்பின்மை, வங்கிகளில் மோசமான செயல்பாடு, எல்ஐசி போன்ற பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு தாரைவார்த்தது போன்ற பல்வேறு பிரச்சனைகளில் இருந்து நாட்டு மக்களை திசை திருப்பவும், பன்முகத் தன்மைக் கொண்ட இந்தியாவை சிதைப்பதற்கும் குடியுரிமை திருத்தச்சட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. நாடு முழுவதும் இதற்கு எதிராக பலத்த கண்டனம்எழுந்துள்ளது. தொடர் போராட்டமும் நடைபெற்று வருகிறது. கேரளா உள்ளிட்ட 11 மாநிலங்களில் குடியுரிமை திருத்த சட்டத்தை அமல்படுத்த மாட்டோம் என்றும் தேசிய குடிமக்கள் பதிவேட்டை அமல்படுத்த மாட்டோம் என்றும் சட்டமன்றத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. தமிழக சட்டமன்றத்திலும் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் எனவும் ஒட்டுமொத்த தமிழக மக்களும் கோரிக்கை விடுத்தும் பாஜகவின் வழிப்படி நடக்கும் தமிழக அரசுதீர்மானத்தை கொண்டு வரவில்லை. 

மேலும் சட்டமன்றத்தில் பேசிய தமிழக முதல்வர், தமிழகத்தில் சிறுபான்மை சமுதாயத்தைச் சார்ந்த எவரேனும் பாதிக்கப்பட்டுள்ளனரா என ஆவேசமாக கேள்வி எழுப்பினார். இச்சட்டம் அமல்படுத்தப்படும் நிலையில் நிகழப் போகும் எதிர்விளைவுகள் குறித்து இந்த அரசிற்கு தெளிவான புரிதல் இல்லைஎன்பதையே இந்த போக்கு காட்டுகிறது.மத்திய அரசின் குடியுரிமை சட்டத் திருத்த மசோதா என்பது  அரசியல் சாசனத்திற்கு எதிரானதாகும். பெரும்பாலான மக்களிடம் அவர்களுக்கான ஆவணங்கள் இல்லாமல் இருந்து வரும் நிலையில் இதற்கான பட்டியல் தயாரிக்கும் போது அவர்கள் மிகுந்த பாதிப்பிற்கு உள்ளாகவுள்ளனர். குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவில் மக்களுக்கு எவ்வித பாதிப்பும் இருக்காதுஎன தமிழக முதல்வர் கூறுகிறார். ஆனால் இந்த சட்டத்தினை அமல்படுத்திய அசாம் மாநிலத்தில் இதுவரையில் 19 லட்சம் மக்கள் குடியுரிமையை இழந்துள்ளனர். அவர்களுக்கான குடியுரிமை என்பது பறிக்கப்பட்டுள்ளது. இதுவே தமிழகத்திற்கும் உதாரணமாகும். இதை தெரியாமல் முதல்வர் பேசி வருகிறார். இதற்காகவே மக்களை பாதுகாக்க திமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் போராட்டம் நடத்தி வருகின்றன. 

வேளாண் மண்டலம்
காவிரி டெல்டா மாவட்டங்களில் ஏற்கனவே எடுக்கப்பட்டு வரும் கச்சா எண்ணெய் மற்றும் மத்திய அரசுமூலம் புதிதாக ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்காக 260 இடங்களில் வழங்கப்பட்டுள்ள அனுமதி ஆகியவற்றினை ரத்து செய்வதற்கு தமிழக அரசு சட்டம் கொண்டு வர வேண்டும்.காவிரி டெல்டா மாவட்டங்களில் மீத்தேன் மற்றும் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்தை அமல்படுத்தக் கூடாது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்கட்சி உட்பட பல்வேறு அரசியல் கட்சியினர், பொதுமக்கள், விவசாயிகள் என பலரும் பல்வேறு கட்ட போராட்டத்தை நடத்திய நிலையில் வேறு வழியின்றி சட்டம்- ஒழுங்கு நிலைமையினை கருத்தில் கொண்டு மாநில அரசு, டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்துள்ளது.ஆனால் ஏற்கனவே 260 இடங்களில் 15 ஆயிரம் சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்கு மத்திய அரசுஅனுமதி வழங்கியுள்ளது. ஒரு முறை பெற்ற அனுமதியை கொண்டுதொடர்ந்து திட்டத்தை மேற்கொள்வதற்கு வழிவகை உள்ளதால் மத்திய அரசு வழங்கியுள்ள இந்த அனுமதி மற்றும் ஏற்கனவே டெல்டா மாவட்டங்களில் எடுக்கப்பட்டு வரும் கச்சா எண்ணெய் ஆகியவற்றிற்கு தடை விதிப்பதற்கு தமிழக அரசு சட்டம் கொண்டு வர வேண்டும். 

அப்போது தான் இந்த பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம்என்பது முழுமை பெறும். இதுகுறித்து தமிழக அரசு, மக்களிடம் விளக்கமாக தெளிவுபடுத்த வேண்டும். மேலும் இதற்கு முதல்வர் தலைமையில் அமைச்சர்கள் மற்றும்அதிகாரிகளை கொண்ட குழு என்பதுஎவ்வித பலனையும் அளிக்காது. இந்த குழுவில் விவசாயிகள் மற்றும் பொதுமக்களை இணைத்தால் மட்டுமே பலன் கிடைக்கும். மேலும் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் என்ற அறிவிப்பில் டெல்டா மாவட்டங்களான திருச்சி, பெரம்பலூர், கரூர் போன்ற மாவட்டங்கள் விடுபட்டு போயுள்ளன. மேலும் கடலூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் முழுமை இல்லாமல் ஒரு பகுதி மட்டும் இணைக்கப்பட்டுள்ளது. எனவே இந்த டெல்டா மாவட்டங்கள் அனைத்தையுமே பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அமல்படுத்த வேண்டும்.ராஜீவ் கொலை வழக்கில் 7 பேர்விடுதலையில் கவர்னர் முடிவு எடுக்க வேண்டுமென ஏற்கனவே உச்சநீதிமன்றம் தெரிவித்து விட்ட நிலையில் மத்திய அரசின் ஒப்புதலுக்காக கவர்னர் வேண்டுமென்றே காலம் தாழ்த்தி வருகிறார்.  மேலும் டெல்டா மாவட்டங்களில் அரசு கொள்முதல் நிலையங்களில் ஆய்வு என்ற பெயரில் அதிகாரிகள் கொள்முதல் நிலைய ஊழியர்களை பணி செய்ய விடாமல் தடுத்து வருகின்றனர். இதன் காரணமாக இதுவரையில் 10 சதவீத கொள்முதல் கூட நடைபெறாமல் விவசாயிகள் பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளனர். இவ்வாறு கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். பேட்டியின் போது கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் ஐவி.நாகராஜன், மாவட்டச் செயலாளர் ஜி.சுந்தரமூர்த்தி, மாவட்டச் செயற்குழு உறுப்பினர் வி.எஸ்.கலியபெருமாள், எம்.சேகர், நகரச் செயலாளர் எம்.பாலசுப்ரமணியன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

;