tamilnadu

img

சிறுநீரை ஊற்றி வாயில் மலம் திணித்து சாதி ஆதிக்க சக்திகள் அட்டூழியம்

மன்னார்குடி:

திருவாரூர் மாவட்டம் கோட்டூர் ஒன்றியம் திருவண்டுதுறையைச் சேர்ந்த தலித் வகுப்பைச் சேர்ந்த கொல்லிமலை, சாதி ஆதிக்கச் சக்தியினரால் தரக்குறைவாக பேசி தரதரவென இழுத்துச் சென்று கட்டி வைத்து கடந்த ஏப்.28-ம் தேதி அன்று தாக்கப்பட்டார். அவர் மீது சிறுநீர் ஊற்றப்பட்டது. வாயில் மலம் திணிக்கப்பட்டது. வார்த்தைகளால் வர்ணிக்க முடியாத வன்கொடுமைகள் அவர் மீது அரங்கேற்றப்பட்டன. இதையடுத்து திருவண்டு துறை மக்கள் வெகுண்டெழுந்து அன்றே சாலை மறியலில் ஈடுபட்டனர். அதன் பிறகே வழக்கு பதியப்பட்டு முதலில் ஒரு குற்றவாளியும், பின்னர் இரண்டாவது நபரும் கைது செய்யப்பட்டார். தமிழ்நாடு முழு வதும் அதிர்வலைகளை ஏற்படுத்திய அவமானகரமான இக்குற்றச்செயல்களுக்கு பொறுப்பான குற்றவாளிகள் முழுமையாக இன்னமும் கைது செய்யப்படவில்லை. 


சிபிஎம் மாவட்டச் செயலாளர் ஜி.சுந்தரமூர்த்தி, தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநில துணைச் செயலாளர் சின்னை பாண்டியன், மாவட்டத் தலைவர் கதாக அரசு தாயுமானவன், மாவட்டச் செயலாளர் கே.தமிழ்மணி. மாநிலக்குழு உறுப்பினர் பி.கந்த சாமி, கோட்டூர் ஒன்றியச் செய லாளர் எல்.சண்முகவேலு. ஒன்றியக்குழு உறுப்பினர்கள் என்.எம்.சண்முகசுந்தரம், அறிவின்செல்வம் உள்ளிட்டோர் வன்கொடுமைகளுக்கு ஆளான கொல்லிமலையை திருவண்டு துறையில் அவரது இல்லத்தில் வியாழனன்று சந்தித்தனர்.


தீண்டாமை ஒழிப்பு முன்னணி அரசு மற்றும் காவல் துறை நடவடிக்கைகளை கூர்ந்து கவனித்து வருவதாகவும், சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் சட்டப்படி தண்டிக்கப்படுவதற்குரிய நடவடிக்கைகளை தீண்டாமை ஒழிப்பு முன்னணி உறுதியாக மேற்கொள்ளும் என்றும், கொல்லிமலையிடமும் அவரது 

குடும்பத்தாரிடமும் தெரிவித்தனர். 


எஸ்.பி.யிடம் புகார்

தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் சார்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் வெள்ளிக்கிழமை அன்று நேரில் மனு அளிக்கப்பட்டது. இந்நிகழ்வில் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் ஐ.வி.நாகராஜன், தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாவட்டச் செயலாளர் கே.தமிழ்மணி, மாநிலக்குழு உறுப்பினர் பி.கந்தசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மாவட்ட காவல் கண்காணிப்பா ளர் எம்.துரை கூறுகையில், குற்றவாளிகளில் மூன்றாம் நபர் விரைவில் கைது செய்யப் படுவார் எனவும் உரிய நட வடிக்கை மேற்கொள்வதாக உறுதியளித்தார். 


கொலை முயற்சி

இது பற்றி தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்டச் செய லாளர் கே.தமிழ்மணி, செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது, கையில் அரிவாள் மற்றும் கட்டை கள் சகிதம் நீ எப்போது தனியாக மாட்டுவாய் என காத்திருந்தோம். இன்று உன்னை கொல்லாமல் விட மாட்டோம் என சொல்லிக் கொண்டே குற்றவாளிகள் மூவரும் வழிமறித்து அவரை தரதரவென்று இழுத்துச் சென்று கட்டி வைத்து தாக்கியுள்ளனர். சிறுநீரை ஊற்றியும், வாயில் மலத்தை திணித்துள்ளனர். இந்த குற்றச் செயல்களின் பின்னணி யை நேரடியாக விசாரித்தறிந்து ஆய்வு செய்த போது கொலை முயற்சி உள்ளிட்ட குற்றங்களை செய்திருப்பதாக கருத இட முள்ளது. 


எனவே கொலை முயற்சி உள்ளிட்ட உரிய சட்டப்பிரிவு களின் மீது வழக்கு தாக்கல் செய்யப்பட வேண்டும். இரண்டா வதாக மூன்று குற்றவாளிகளில் இருவர் மட்டுமே கைது செய்யப்பட்டுள்ளனர். 3-வது குற்றவாளி ராஜ்குமார் இன்னும் கைது செய்யப்படவில்லை. இனியும் தாமதிக்காமல் அவரை கைது செய்ய வேண்டும். கொடுமை களுக்கு உள்ளாக்கப்பட்ட கொல்லிமலைக்கு நிவாரணம் வழங்கப்பட வேண்டும். மிக முக்கியமாக ஆதிக்க வகுப்பைச் சேர்ந்த இந்த குற்றவாளிகளால் கொல்லிமலைக்கும் அவரது குடும்பத்தாருக்கும் உயிருக்கு தீங்கும் அபாயமும் ஏற்படக் கூடும் என்ற அச்சம் நிலவுகிறது. எனவே கொல்லிமலைக்கும், அவரது குடும்பத்தாருக்கும் பாதுகாப்பு நடவடிக்கைகளை காவல்துறையும், மாவட்ட நிர்வாகமும் எடுத்திட வேண்டும். அவரது பாதுகாப்பிற்கு உத்தரவாதம் அளிக்க வேண்டும் என கே.தமிழ்மணி கூறினார். 


கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தல்

இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எம்.துரை யிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டுபேசினார். குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு உரிய சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். கொடுமைகளுக்கு உள்ளாக்கப்பட்ட கொல்லி மலைக்கு விரைவாக நீதி கிடைக்கச் செய்ய வேண்டும். இதற்கான நடவடிக்கைகளை விரைவாக மாவட்ட காவல் நிர்வாகம் மேற்கொள்ள வேண்டும். இதன் மூலம் மட்டுமே பாதிக்கப்பட்ட சமூகத்தின ரிடையே நம்பிக்கையையும், அமைதியை ஏற்படுத்த முடியும் என்று வலியுறுத்தினார்.

;