திருவள்ளூர், பிப்.9- பொய் வழக்குப் பதிவு செய்யும் ஆரம்பாக்கம் காவல் நிலைய அதிகாரிகளை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் விளக்கக் கூட்டம் நடைபெற்றது. திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அருகில் உள்ள ஆரம்பாக்கம் கணபதி நகரில் வசிக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த ரஹீம்மாள், ஜெய்தூன், குள்லு ஆகியோரின் வீட்டிற்குள் புகுந்த அதே பகுதியைச் சேர்ந்த, காஜா மொய்தீன் மற்றும் அவரின் மகன்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். இது குறித்து காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர். ஆனால் ஆரம்பாக்கம் காவல் நிலையத்தில் உள்ள உதவி ஆய்வாளர் செந்தில்முருகன், விஜயகுமார் ஆகியோர் பாதிக்கப்பட்ட பெண்கள் மீதே பொய் வழக்கைப் பதிவு செய்துள்ளனர். மேலும் இந்த வழக்கில் சம்மந்தப்படாத சிபிஎம் கிளைச் செயலாளர் முகமதுசாலிக் மீதும் பொய் வழக்குப் பதிவு செய்திருக்கின்றனர். மேலும் வட்டச் செயலாளர் இ.ராஜேந்திரன் மீதும் வழக்கு போடுவோம் என காவல்துறையினர் மிரட்டியுள்ளார். இதனைத் தொடர்ந்து ஆரம்பாக்கம் காவல் நிலைய அதிகாரிகளை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முடிவு செய்தது. இதை அறிந்த காவல்துறை அதிகாரிகள் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் பொய் வழக்குகள் குறித்து பரிசிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளார். பின்னர், காவல்துறையினர் நடவடிக்கைகளை கண்டித்து விளக்க கூட்டம் ஆரம்பாக்கம் காவல் நிலையம் எதிரில் சனிக்கிழமையன்று நடைபெற்றது. வட்டக் குழு உறுப்பினர் ப.லோகநாதன் தலைமை தாங்கினார். இதில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.கே.மகேந்திரன், மாவட்டச் செயலாளர் எஸ்.கோபால், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் பி.துளசிநாராயணன், கே.ராஜேந்திரன், வட்டச் செயலாளர் இ.ராஜேந்திரன், மாவட்டக்குழு உறுப்பினர்கள் ஜி.சூர்யபிரகாஷ், எஸ். தேவேந்திரன், வட்டக் குழு உறுப்பினர் டி.கோபாலகிருஷ்ணன் உட்படபலர் கலந்து கொண்டு பேசினர்.