tamilnadu

img

“நாங்களும் இந்தியர்கள் தானே?”

கொரோனா ஊரடங்கு தளர்த்தப்பட்ட பிறகும், திருப்பூரில் இருக்கும் புலம் பெயர்ந்த தொழிலாளர்களின் துயரம் தொடர்ந்து வருகிறது. ஒருபுறம் அரசு நிர்வாகத்தின் பாராமுகத்தையும், மறுபுறம்சமூக விரோதிகளின் கொடூர அச்சுறுத்தல்களை யும் சந்தித்து வருகின்றனர்.ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்என்று சொல்வதைப் போல் திருப்பூரில் துயரத்தை அனுபவித்து வரும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் நிலையை சித்தரிக்கக் கூடியதாக பின்வரும் ஒடிசா மாநிலத் தொழிலாளர்களின் குரல்களைக் கேளுங்கள்.

குடு சவைன்: நான் கடந்த ஐந்து மாதங்களுக்கு முன்புதான் திருப்பூருக்கு வந்தேன். பல்லடம் சாலை அருள்புரம் பகுதியில் ஒரு பனியன்கம்பெனியில் செக்கிங் பிரிவில் வேலைசெய்து வந்தேன். கொரோனா ஊரடங்கு அறிவிக்கப்பட்ட தால் வேலை இல்லாமல் போனது. வருமானமும் இல்லை. உண வுக்கே வழியில்லாத நிலை ஏற்பட்டது. தங்கி யிருந்த அறைக்கும் வாடகை கொடுக்க முடியவில்லை. 

பறித்துக் கொண்டனர்
இந்நிலையில் விசாகப்பட்டிணத்தில் உள்ள தன்னார்வலர் ஸ்டீபனைத் தொடர்பு கொண்டு இங்கு என்னுடன் இருப்பவர்கள் சுமார் 25 பேர் நிலையைத் தெரிவித்தேன். அவர்எங்களுக்கு அரிசி, பருப்பு, எண்ணெய் உள்ளிட்ட உணவுப் பொருட்கள் கிடைப்பதற்கு ஏற்பாடு செய்தார். ஆனால் நாங்கள் உணவுப் பொருள் ஏற்பாடு செய்ததைப் பார்த்து எங்களைச் சுற்றி இருந்த உள்ளூரைச் சேர்ந்த சிலர்எங்களை மிரட்டிப் பொருட்களைப் பறித்துக் கொண்டனர். ஊரடங்கு தளர்த்தி கம்பெனிகள் இயக்கப்பட்டாலும், எங்களுக்கு வேலை இல்லை. பணமும், உணவும் இல்லாமல்‘இப்போதும் கஷ்டப்பட்டுக்கொண்டிருக்கிறோம்.எங்கள் நிலை குறித்து ஊடகங்களுக்குத் தெரிவித்தால், அதன் மூலம் தகவல் அறிந்து கொண்ட திருப்பூர் மாவட்ட நிர்வாகத்தைச் சேர்ந்தவர்கள், எரிச்சல் அடைந்து எங்களைத் திட்டுகிறார்கள். உங்கள் மாநிலத்தைத் தொடர்பு கொள்ள வேண்டியதுதானே என்று விரட்டுகின்றனர்.

பிஜேடி எம்எல்ஏ
நாங்கள் இந்தியர்கள்தானே? அத்துடன்ஒடிசாவில் எங்கள் பகுதியைச் சேர்ந்தவர்களி டம் இங்குள்ள நிலையை சொல்லி உதவி கேட்டேன். ஆனால் அங்கு ஏற்கெனவே எனக்கு அறிமுகமான ஆளும் பிஜேடி கட்சியைச் சேர்ந்த எம்எல்ஏவும் எங்களுக்கு உதவமுன்வராமல், உனக்கு என்ன பிரச்சனை, சும்மாஇருக்க வேண்டியதுதானே என்று கூறினார்.இதற்கிடையே இங்கு நாங்கள் தங்கியிருந்த அறைக்கும் வாடகை கொடுக்க முடியவில்லை. அட்வான்ஸ் தொகையும் கழிந்துவிட்டது. எனவே அறையை விட்டு வெளியேறி விட்டோம். ஊருக்குச் செல்லலாம் என பெட்டி படுக்கையுடன் கிளம்பி வந்தோம். ஆனால் ரயில் நிலையத்தில் எங்களை விரட்டுகிறார்கள்.ஊரடங்கு காலத்திலேயே பல முறை கிராம நிர்வாக அலுவலரிடம் ஒடிசாவுக்குச் செல்ல பெயர்ப் பதிவு செய்வதற்குச் சென்றேன். ஆனால் அவர்கள் எங்களிடம் ரூ.50 பணம் கொடுங்கள் என்று வற்புறுத்தினர். எங்களிடம் பணம் இல்லாததால் ஒன்றும் செய்யமுடியவில்லை. இப்போது ரயில்நிலையத்தைச் சுற்றி புரோக்கர்கள் நின்று கொண்டு, உங்களைஊருக்கு அனுப்ப ரூ.1000 கொடுங்கள் என கேட்கின்றனர். நாங்கள் என்ன செய்வது என்று கேட்டார்.

ரஷ்மிதா, தீபக் 
ஒடிசாவில் பக்கத்துப் பக்கத்து மாவட்டங்களைச் சேர்ந்தவர்களான ரஷ்மிதா, தீபக் ஆகியோரும் இதே நிலையைத்தான் சொன்னார்கள். ரஷ்மிதா ஓராண்டுக்கு மேலாக திருப்பூரில் பனியன் கம்பெனி ஒன்றில்டெய்லராக வேலை செய்து வந்தார். தீபக்சுமார் எட்டு மாதங்கள் இங்கு தங்கி யிருக்கிறார். அவர் பேக்கிங் பிரிவில் வேலைசெய்து வந்தார். இவர்கள் மூன்று பேரும் ஒரேஇடத்தில் தங்கியிருந்து வேலை பார்த்து வந்தனர். ஆனால் இப்போது வேலை இல்லை, வருமானம் இல்லை, உணவும் இல்லை. தங்கியிருந்த அறையை விட்டும் வெளியேறும் கட்டாயத்துக்கு தள்ளப்பட்டு விட்டனர்.

வாலிபர் சங்கத்தினரின் உதவி
இவர்கள் அங்கு இருந்தபோதே, சுற்றிலும் இருந்த சமூக விரோத கும்பல் இவர்களிடம் இருந்த உணவுப் பொருட்களைப் பறித்துக் கொண்டதுடன், வேறு உடமை களையும் பறித்துக் கொள்ளும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் பெட்டி படுக்கையுடன் கிளம்பிய மூவரும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் இடுவாய் கிளைச் செயலாளர் ஆறுமுகத்தின் தொடர்பு கிடைத்ததால், அவரிடம் நிலைமையைச் சொன்னார்கள். இதையடுத்து வாலிபர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் செ.மணிகண்டன் கவனத்துக்கு இப்பிரச்சனை கொண்டுவரப்பட்டது. அவர்களை சங்க அலுவலகத்துக்கு வர வழைத்து விசாரித்தபோது, இரண்டு, மூன்று நாட்களாக அவர்கள் சாப்பிடவில்லை என்று கூறினர். உடனடியாக உணவு வாங்கிக்கொடுத்து அவர்கள் தங்குவதற்கு ஏற்பாடு செய்தனர். அத்துடன் அவர்களது சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கவும் அரசு நிர்வாகத்தைத் தொடர்பு கொண்டு ஏற்பாடு செய்துள்ளனர்.

பலரின் நிலையும் இதுதான்!
இவர்கள் மூவர் மட்டுமல்ல, இது போல் பலஆயிரம் தொழிலாளர்கள் இன்னும் துயரத்தைச் சந்தித்துக் கொண்டிருக்கின்றனர்.

அடித்து விரட்டும் காவல்துறை பணம் கேட்கும் நிர்வாகம்
அரசு நிர்வாகத் தரப்பில் அவர்களை ஊருக்கு அனுப்புவதற்குப் பணம் கேட்கின்றனர். புரோக்கர்களும் ஆயிரக்கணக்கில் பணம் கேட்கின்றனர். இப்போது முன்பதிவு ரயில்களும் இயக்கப்படும் நிலையில், புலம் பெயர்ந்த தொழிலாளர்களை சொந்த ஊருக்குஅனுப்பி வைக்கும் ரயில்கள் இயக்கத்தை குறைத்துக் கொண்டதாகக் கூறப்படுகிறது. தொழிலாளர்களே பணம் செலுத்தி முன்பதிவுசெய்து ஊருக்குச் செல்லட்டும் என அதிகாரப்பூர்வமற்ற முறையில் தகவல் பரவியுள்ளது.எல்லா வகையிலும் நிர்க்கதியானவர்களாக இருக்கும் இதுபோன்ற தொழிலாளர்களை அரசு நிர்வாகம் முற்றிலும் கைவிட்டுவிட்டது. திருப்பூர்  ரயில் நிலையத்தில் இருந்து ஊருக்குச்செல்லலாம் என குடு, ரஷ்மி, தீபக் போல பலநூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் ரயில்நிலையத்திற்கு அடைக்கலம் தேடி வருகின்ற னர்.ஆனால் இவர்களை காவல் துறையினர் தடியால் மிரட்டி விரட்டி விடுவதிலேயே குறியாகஇருக்கின்றனர். ரயில் வந்தால் ஊருக்குப் போகலாம் என ரயில் நிலையப் பகுதியில் அமர்ந்திருந்தவர்களை செவ்வாயன்று காலை காவல் துறையினர் ஈவு இரக்கமில்லாமல் அடித்து விரட்டிவிட்டனர். உணவும், தங்குமிடமும், வேலையும் இல்லாத இவர்களைப் போன்ற தொழிலாளர்களை குறைந்தபட்சம் ஒரு மண்டபத்திலோ, பள்ளியிலோ தங்க வைத்து மாற்று ஏற்பாடு செய்து தரலாம். ஆனால் “நாங்களும் இந்தியர்கள்தானே?” என்று ஒடிசாதொழிலாளி குடு சவைன் கேட்கும் கேள்விக்குஇந்த அரசு என்ன பதில் சொல்லப்போகிறது? 

===வே.தூயவன்===
 

;