திருவண்ணாமலை, பிப். 15- திருவண்ணாமலை நகரில் பாதாள சாக்கடை திட்டப் பணிகள் தரமில்லாமல் பராமரிக்கப்படுவதால், கழிவு நீர் வெளியேறி பாதிப்பு ஏற்படுவதாக நகர மக்கள் குற்றச்சட்டு தெரிவித்துள்ளனர். திருவண்ணாமலை நகரம் முழுவதும் பாதாள சாக்கடை திட்டப்பணிகள் நடந்து முடிந்துள்ள நிலையிலும், சமுத்திரம் காலனி பகுதியில் மட்டும் கழிவு நீர் கால்வாய் முறையாக அமைக்கப்படவில்லை. கழவு நீர் செல்லும் பைப் லைன் தரைமட்டத்திற்கு கீழேயே அமைக்கப்பட்டுள்ளதால், அங்கிருந்து வெளியேறும் கழிவுகள் சாலை ஓரம் தேங்கி நிற்கிறது. துர்நாற்றம் வீசும் பகுதியாக மாறியுள்ளது. இதனால் தொற்றுநோய் ஏற்படும் அபாயம் உள்ளது. மேலும் வேலுநகர், கீழ்நாத்தூர் உள்ளிட்ட பகுதிகளில், பாதாள சாக்கடை திட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள திறப்புகள் “மேன்ஹோல்கள்” சேதமடைந்துள்ளன. சேதமான பிளாக்குகளை புதிதாக மாற்றாமல், உடைந்த பிளாக்குகளையே வைத்து, கலவை பூசி வருவதால், மீண்டும் சேதமடைவதாக அந்தபகுதி மக்கள் கூறுகின்றனர். கொரோனோ வைரஸ் தாக்குதல் பயம் உலகெங்கும் பரவி வரும் நிலையில், திருவண்ணாமலை நகரில் பொது சுகாதாரத்தை காக்க வேண்டியது நகராட்சி நிர்வாகத்தின் கடமை. எனவே தரமான முறையில் கழிவுநீர் கால்வாய்களை பரமாரிக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.