tamilnadu

img

கொரோனா தடுப்பு நடவடிக்கையில் அலட்சியம் அச்சத்தில் திருவண்ணாமலை மக்கள்

திருவண்ணாமலை, ஜூன் 30- திருவண்ணாமலை மாவட்டத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. பாதிப்பு எண்ணிக்கையில் மாநிலத்தில் 4ஆவது இடத்தில் உள்ளது. திருவண்ணாமலை நகராட்சியில், கொரோனா தொற்று ஏற்பட்ட பகுதிகளில் கூட தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல், நகராட்சி நிர்வாகம் மெத்தனப் போக்குடன் செயல்படுவதாக நகர மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். நகராட்சியில் 39 வார்டுகள் உள்ளது. 2 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். சுற்றுவட்டார பகுதி கிராம மக்கள் தினசரி ஆயிரக்கணக்கானோர் திருவண்ணாமலை நகருக்கு வந்து செல்கின்றனர். மேலும், கடைகள், வணிக நிறுவனங்கள், மருத்துவமனைகள் மற்றும் திருமண மண்டபங்கள் மூலம் ஆங்காங்கு குப்பைகள் கொட்டப்படுகின்றன. தரமான சாலை, முறையான பாதாள சாக்கடை அமைப்பும் இல்லாததால் திருவண்ணாமலை நகரத்தில் ஏரானமான குப்பைகள் குவிகின்றன. இந்த குப்பைகளை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களுக்கு போதிய  பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாததால் பணியை சரிவர செய்ய முடியாமல்  அவதிப்படுகின்றனர்.

நோய்த் தொற்று ஏற்படுமோ என்ற அச்சத்துடன் வேலை செய்கின்றனர். நகராட்சி நிர்வாகம் வழங்கும் கையுறைகள் தரமற்று இருப்பதாகவும், அணிந்தவுடன் சேதமடைவதாகவும் ஊழியர்கள் கூறுகின்றனர். கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதால், வெளி நபர்கள் செல்ல தடை செய்யப்பட்ட அய்யங்குளத் தெரு பகுதியில், துப்புறவு பணியில் ஈடுபட்ட தொழிலாளிகள், போதிய பாகாப்பு கவசம் இல்லாமல் பணி செய்தது அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. எனவே, ஊழியர்கள் கொரோனா தொற்று ஏற்படாமல் பணியாற்ற தேவையான, தரமான பாதுகாப்பு உபகரணங்களை வழங்க வேண்டும் என துப்புரவு பணியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்நிலையில் செவ்வாயன்று (ஜூன் 30) நகராட்சி ஊழியர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியானதால், நகராட்சி அலுவலகம் மூடப்பட்டது. தொற்றுடன் சிகிச்சை பெற்றுவந்த 70 வயது முதியவர் ஒருவர் உயிரிழந்தார்.

;