திருவண்ணாமலை,அக்.16- திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த ஆதனுர் கிராமத்தில் கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக ஆவின் பால் உற்பத்தியாளர்கள் சங்கம் இயங்கி வருகிறது. இதில் சுமார் 400பேர் உறுப்பினராக உள்ளனர். இந்த பால் கூட்டுறவு சங்கத்தின் கீழ் ஆதனூர், கீழையூர், விருப்பாட்சிபுரம் ஆகிய கிராமங்களில் உள்ள பால் விவசாயிகள் தினமும் காலை மற்றும் மாலை நேரத்தில் பால் வழங்கி வருகின்றனர். தினமும் 2700 முதல் 3200 லிட்டர் அளவிலான பால் கொள்முதல் செய்யப்படுகிறது. இந்நிலையில் கடந்த ஒரு மாதமாக பால் கொள்முதலை ஆதனூர் பால் உற்பத்தியாளர் சங்கத்தினர் பாதியளவிற்கு குறைத்தனர். இதனால் பால் விவசாயிகள் அதிர்ச்சியடைந்தனர். மேலும் பால் உற்பத்தியாளர் சங்கச் செயலாளர் மற்றும் தலைவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு முறையிட்டனர். இருப்பினும் பால் வாங்க ஆதனூர் கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்கம் மறுத்து விட்டது. முதலில் பால் கொண்டு வருபவர்களிடம் மட்டுமே கொள்முதல் செய்யப்படுகிறது. இதனால் அதிகாலை முதலே பால் விவசாயிகள் ஆதனூர் பால் உற்பத்தியாளர் சங்கத்தில் ஓருவரை ஓருவர் முண்டியடித்துச் சென்று பால் வழங்கி வருகின்றனர். இதனால் பாதிக்கப்பட்ட பால் விவசாயிகள் சுமார் 300க்கும் மேற்பட்டோர் இன்று காலை ஆதனூர் பால் உற்பத்தியாளர் சங்க அலுவலகம் எதிரில் திடீரென பாலை தரையில் கொட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். இது சம்மந்தமாக விவசாயிகளிடம் ஆவின் ஊழியர்கள் கூறியபோது, பால் கொள்முதல் செய்ய போதியளவில் கேன்கள் இல்லை, மற்றும் உயரதிகாரிகள் பால் அதிகளவில் கொள்முதல் செய்ய வேண்டாம் என்று வாய்மொழி உத்தரவு என்று தெரியவருவதாகவும் விவசாயிகள் தெரிவித்தனர்.