tamilnadu

img

தபால் ஓட்டு நடைமுறையில் சந்தேகத்தை ஏற்படுத்தும் மாற்றம் ஏன்? மார்க்சிஸ்ட் கட்சி கேள்வி

திருப்பூர், ஏப். 5 –

தபால் ஓட்டு பதிவு செய்து பாதுகாப்பாக வைக்கும் நடைமுறையில் சந்தேகத்தை ஏற்படுத்தும் மாற்றம் செய்யப்பட்டிருப்பதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பிரதிநிதி ஆட்சேபத்தை பதிவு செய்து, நம்பகத்தன்மையை நிலைநிறுத்தும் நடவடிக்கை மேற்கொள்ளுமாறு வலியுறுத்தினார்.திருப்பூர் மாவட்ட ஆட்சியரக அலுவலக கூட்ட அரங்கில், திருப்பூர் தொகுதிக்கு உட்பட்ட வாக்குச்சாவடிகளில் பயன்படுத்தும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை பகிர்ந்தளிப்பதற்கான கூட்டம் வியாழனன்று நடைபெற்றது. தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் மற்றும் திருப்பூர் நாடாளுமன்ற தொகுதி பொதுத்தேர்தல் பார்வையாளர் அசோக் என்.கரன்ஞ்கர் முன்னிலையில் நடைபெற்ற இக்கூட்டத்துக்கு மாவட்ட தேர்தல் அலுவலர், மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.பழனிசாமி தலைமை ஏற்றார்.இதில் திருப்பூர் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட பெருந்துறை, பவானி, அந்தியூர், கோபி, திருப்பூர் வடக்கு, மற்றும் திருப்பூர் தெற்கு ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகளில் உள்ள 1,704 வாக்குச்சாவடிகளில் பயன்படுத்தப்படும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் (வாக்குப்பதிவு இயந்திரம், கட்டுப்பாட்டு இயந்திரம், வி.வி.பேட்) கணினி மூலமாக ஒதுக்கீடு செய்யும் பணி வேட்பாளர்கள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் நடைபெற்றது.இக்கூட்டத்தில் பேசிய ஆட்சியர் கே.எஸ்.பழனிசாமி, பதிவு செய்யப்படும் தபால் வாக்குகளை ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள ஸ்ட்ராங் ரூம் எனப்படும் பாதுகாப்பான அறையில் சேகரித்து வைக்கப்படும் என்று தெரிவித்தார்.


ஆட்சியர் தெரிவித்த நடைமுறை, கடந்த தேர்தல்களில் தபால் வாக்குகளை பெட்டிகளில் சேகரித்து வைத்த நடைமுறைக்கு மாறானதாக இருந்ததால் இது பற்றி மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் பற்கேற்ற மாவட்ட செயற்குழு உறுப்பினர் என்.கோபாலகிருஷ்ணன் விளக்கம் கோரினார். அத்துடன் ஸ்ட்ராங் ரூம் எனப்படும் பாதுகாப்பு அறையை பற்றியும் கேள்வி எழுப்பினார்.இதற்கு பதிலளித்த ஆட்சியர் கே.எஸ்.பழனிசாமி, தேர்தல் பணியில் ஈடுபடும் அலுவலர்களுக்கு பயிற்சி மையங்களிலேயே தபால் வாக்கு படிவங்கள் அளிக்கப்பட்டு அங்கேயே அவர்கள் தங்கள் வாக்குகளைப் பதிவு செய்து கொள்ளலாம் அல்லது தபால் மூலமும் அனுப்பி வைக்கலாம். அத்துடன் ஒவ்வொரு நாளும் வரக்கூடிய தபால் வாக்குகளை ஆட்சியர் அலுவலகத்தில் ஸ்ட்ராங் ரூமில் சேகரித்து வைக்கப்படும். தேர்தல் ஆணைய வழிகாட்டுதல்படி இந்த நடைமுறை மேற்கொள்ளப்படுகிறது, என்றார்.கடந்த காலங்களில் தபால் வாக்குகளை சீலிடப்பட்ட வாக்குப்பெட்டிகளில் செலுத்தி பாதுகாத்து வைக்கும் நடைமுறை இருந்தது. ஆனால் இப்போது சீலிடப்பட்ட வாக்குப்பெட்டிகள் வைக்காமல் தனி அறையில் வைத்து பூட்டி வைப்பதாக கூறுவது வியப்பளிப்பதாக என்.கோபாலகிருஷ்ணன் கூறினார். மேலும் ஒவ்வொரு நாளும் எத்தனை வாக்குகள் வரப்பெற்றன என்று பதிவு செய்வது, அதை அறையில் பூட்டி சீல்வைப்பது போன்ற பணிகளை ஆட்சியரக பணியாளர்கள் மூலமே மேற்கொள்வதென்றால், அதை மேற்பார்வையிட்டு, கண்காணிப்பது எப்படி என்றும் அவர் கேள்வி எழுப்பினார். அப்படியானால் ஒவ்வொரு நாளும் வரக்கூடிய தபால் வாக்குகளை ஸ்ட்ராங் ரூமைத் திறந்து உள்ளே வைக்கும்போது அரசியல் கட்சி பிரதிநிதிகளுக்குத் தகவல் சொல்லி அவர்கள் முன்னிலையில் இப்பணியை மேற்கொள்வதாக ஆட்சியர் பதிலளித்துள்ளார்.


எனினும், இந்த நடைமுறையில் ஒவ்வொரு நாளும் ஸ்ட்ராங் ரூமை பூட்டி சீலிட்டு மறுபடியும் திறந்து பூட்டி சீலிடுவது என்று தொடர்ச்சியாக நடைபெறும்போது, நம்பகத்தன்மை சந்தேகத்துக்குரியதாக மாறுகிறது. அத்துடன் அரசியல் கட்சி பிரமுகர்களும் அழைக்கும்போதெல்லாம் அங்கு வந்து செல்வதில் சிரமம் ஏற்படும். இந்த புதிய முறை மாற்றப்பட்டது சரியல்ல, ஏற்கெனவே கடந்த காலத்தில் பின்பற்றப்பட்ட தபால் வாக்குப்பெட்டி முறையையே அமல்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.தபால் வாக்குப்பதிவு நடைமுறை தமிழகம் முழுவதும் இதுபோல் மாற்றப்பட்டிருப்பதாகவும் தேர்தல் அலுவலர்களால் தெரிவிக்கப்பட்டது. எனவே மாநிலம் முழுவதும் இதுபோல் மாற்றப்பட்டிருக்கும் நிலையில், மாநில அளவில் தேர்தல் ஆணையம் இப்பிரச்சனையில் தலையிட்டு தபால்வாக்குப் பதிவில் நம்பகத்தன்மையைப் பாதுகாக்கும் வகையில், முந்தைய தபால் வாக்குப்பெட்டி முறையை அமல்படுத்த வேண்டும் என்றும் என்.கோபாலகிருஷ்ணன் அழுத்தமாக வலியுறுத்தினார். இதுபற்றி தேர்தல் ஆணையத்தின் கவனத்துக்குக் கொண்டு செல்வதாகவும் பதில் அளிக்கப்பட்டது.

;