india

img

எரிபொருள் விலைகள் கடும் உயர்வு.... நாடாளுமன்றத்தில் பதில் சொல்ல மறுப்பது ஏன்? மோடி அரசுக்கு சிபிஎம் கேள்வி....

புதுதில்லி:
பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயுவிலை உயர்வு தொடர்பாக எதிர்க்கட்சிகளின் கேள்விகளுக்கு நாடாளுமன்றத்தில் நரேந்திர மோடி அரசு பதிலளிக்க மறுப்பது ஏன் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கேள்வி எழுப்பியுள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழுக் கூட்டம் வியாழனன்று இணையம் வழி நடைபெற்றது. இதைத்தொடர்ந்து வெளியிடப்பட்ட அறிக்கை வருமாறு:-

சட்டமன்றத் தேர்தல்

கேரளம், மேற்கு வங்கம், தமிழ்நாடு, அசாம், புதுச்சேரி சட்டமன்றத் தேர்தல்கள் மற்றும் திரிபுராவில் நடைபெறவிருக்கும் சுயாட்சி மாவட்டக் கவுன்சில் தேர்தல்களில் இடதுஜனநாயக மற்றும் மதச்சார்பற்ற சக்திகளின் வெற்றியை உத்தரவாதப் படுத்திட நாட்டில் உள்ள ஒட்டுமொத்தக் கட்சியையும் அரசியல் தலைமைக்குழு அறைகூவி அழைக்கிறது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பிரதான கவனம்,பாஜக-வைத் தோற்கடிக்க வேண்டும் என்பதாகும். இம்மாநிலங்களில் மக்களின் நலன் காத்திடவும், ஒட்டுமொத்தத் தில் நாட்டின் ஒற்றுமையையும் ஒருமைப்பாட்டையும் பாதுகாத்திடவும் இது மிகவும் அவசியமாகும்.கட்சியின் கேரள, மேற்கு வங்க மாநிலக் குழுக்கள் ஏற்கனவே கட்சி வேட்பாளர்களின் பட்டியலை அறிவித்துள்ளன. 

வரலாறு படைத்திடும் விவசாயிகள் போராட்டம்

வரலாறு படைக்கும் விதத்தில் நடைபெற்றுவரும் விவசாயிகளின் போராட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஆதரவும் ஒருமைப்பாடும் தொடர்கிறது. மோடி அரசாங்கம்,கேடு பயக்கும் வேளாண் சட்டங்களை உடனடியாக ரத்து செய்திட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகோருகிறது. கடந்த நான்கு மாதங்களில்வரலாறு படைத்திடும் போராட்டத்தில் தங்கள் உயிர்களை இழந்த சுமார் 300 விவசாயிகளுக்கும் அரசியல் தலைமைக்குழு தன் ஆழ்ந்த அஞ்சலியை செலுத்திக்கொள்கிறது.

தனியார்மயத்திற்கு எதிரான போராட்டம்

பொதுத்துறை நிறுவனங்களை ஒட்டுமொத்தமாகத் தனியாரிடம் தாரைவார்த்திடவும், நாட்டின் சொத்துக்களை சூறையாடவும் மோடி அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கைகளுக்கு எதிராக மத்தியத் தொழிற்சங்கங்கள் மேற்கொண்டுள்ள போராட்டங்களுக்கு அரசியல் தலைமைக்குழு தன் ஆதரவையும் ஒருமைப்பாட்டையும் தெரிவித்துக் கொள்கிறது.ஆந்திராவில் விசாகப்பட்டினம் உருக்குத் தொழிற்சாலையைத் தனியார்மயப்படுத்திடும் நடவடிக்கைக்கு எதிராக நடைபெற்று வரும் மக்கள் போராட்டத்திற்கும் அரசியல் தலைமைக்குழு தன் ஆதரவை தெரிவித்துக் கொள்கிறது. வரும் மார்ச் 15, 16 தேதிகளில் அனைத்து வங்கி ஊழியர் சங்கங்களும் விடுத்துள்ள வேலைநிறுத்த அறைகூவலுக்கும், மார்ச் 17 அன்று பொது இன்சூரன்ஸ் ஊழியர் சங்கங்களின் வேலைநிறுத்த அறைகூவலுக்கும், மார்ச் 18 அன்று ஆயுள் இன்சூரன்ஸ் ஊழியர் சங்கங்களின் வேலைநிறுத்த அறைகூவலுக்கும் அரசியல் தலைமைக்குழு தன் ஆதரவினைத் தெரிவித்துக் கொள்கிறது.

பதில் சொல்ல மறுப்பது ஏன்? 

தொடர்ந்து உயர்த்திவரும் பெட்ரோலியப் பொருள்களின் விலை உயர்வு போன்று எரிகிற மக்கள் பிரச்சனைகள் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க மத்திய பாஜக அரசாங்கம் மறுத்து வருவதற்கு அரசியல் தலைமைக்குழு கடும் கண்டனம் தெரிவித்துக் கொள்கிறது. இவற்றின் மீதான விவாதங்களைத் தவிர்ப்பதற்காகவே, நாடாளுமன்றக் கூட்டத்தொடர் மார்ச் 15 வரை ரத்து செய்யப்பட்டிருக்கிறது. இந்திய அரசமைப்புச் சட்டத்தில் வரையறுக்கப்பட்டுள்ளபடி, நாடாளுமன்றத்திற்கு அரசாங்கம் பதில் சொல்லவேண்டும் என்பதை அரசாங்கம் கைவிடும் செயலுக்கு இது மிகவும் மோசமான ஓர் எடுத்துக்காட்டாகும். பெட்ரோலியப் பொருட்களின் மீதான அனைத்துக் கலால் தீர்வைகளின் மீதான அனைத்து உயர்வுகளையும் மத்திய அரசாங்கம் விலக்கிக்கொள்ள வேண்டும் என்கிற கோரிக்கை யை அரசியல் தலைமைக்குழு மீண்டும் வலியுறுத்துகிறது. (ந.நி.)

;