tamilnadu

இலக்கியத் திறனாய்வு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு புத்தகத் திருவிழாவில் இன்று பரிசளிப்பு

திருப்பூர், பிப். 3 – 17ஆவது திருப்பூர் புத்தகத் திருவிழாவை முன்னிட்டு நடத்தப்பட்ட மாணவர் இலக்கியத் திறனாய்வுப் போட்டிகளில் வெற்றி பெற்றவர் களுக்கு இன்று (செவ்வாய்)பரிசளிப்பு விழா நடை பெறுகிறது. புத்தகத் திருவிழாவை முன்னிட்டு திருப்பூர், பல்லடம், காங்கேயம், ஊத்துக்குளி, அவிநாசி, குன்னத்தூர் உள்பட 10 மையங்களில் மாணவர் இலக்கியத் திறனாய்வுப் போட்டிகள் கடந்த ஜனவரி 12ஆம் தேதி நடத்தப்பட்டன. பத்து மையங்களிலும் ஓவியம், கட்டுரை, கவிதை என மூன்று பிரிவுகளில் நடத்தப்பட்ட இப்போட்டிகளில் வெற்றி பெற்றவர்களின் விபரத்தை புத்தகத் திருவிழா வரவேற்புக்குழு அறிவித்துள்ளது. வெற்றி பெற்றவர்களுக்கு கே.ஆர்.சி. சிட்டி சென்டரில் புத்தகத் திருவிழா மேடையில் செவ்வாய் கிழமை மாலை பரிசுகள் வழங்கப்படுகின்றன. இந்த பரிசளிப்பு விழாவுக்கு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ரா.ரமேஷ் தலைமை ஏற்கிறார். திருப்பூர் மாநகர காவல் ஆணையர் சஞ்சய்குமார், மாவட்ட வருவாய் அலுவலர் ஆர்.சுகுமார் ஆகி யோர் பங்கேற்று மாணவ, மாணவிகளுக்குப் பரிசுகள் வழங்குகின்றனர். திருப்பூர் மாநகராட்சி ஆணையர் க.சிவக்குமார், மாநகர காவல் துணை ஆணையர் பத்ரி நாராயணன் ஆகியோர் வாழ்த்திப் பேசுகின்றனர். இதில் வெற்றி பெற்றோருக்கு நினைவுப் பரிசு, ரொக்கம், புத்தகம், சான்றிதழ் ஆகியவை வழங்கப்படும். பங்கேற்ற அனைவருக்கும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும். எனவே வெற்றி பெற்றவர்கள் மட்டுமின்றி அனைத்துத் தரப்பு மாணவ, மாணவிகளும், பெற்றோரும் இவ்விழாவில் பங்கேற்றுச் சிறப்பிக்கும்படி புத்தகத் திருவிழா வரவேற்புக்குழுவின் தலைவர் மோகன் கே.கார்த்திக் கேட்டுக் கொண்டிருக்கிறார்.

;