tamilnadu

img

பழுதடைந்த சாலைகளை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை

அவிநாசி, ஏப்ரல்.26-அவிநாசி பேரூராட்சி பகுதியில் பெரும்பாலான சாலைகள் பழுதடைந்து காணப்படுகிறது. இச்சாலைகளை செப்பனிட பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருப்பூர் மாவட்டம், அவிநாசி பேரூராட்சியில் 18 வார்டுகள் உள்ளன. இங்கு 10ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றன. மேலும் தொழிற்சாலைகள், வணிக வளாகங்கள் அதிகளவில் உள்ளன. பேரூராட்சி பகுதியில் உள்ள சாலைகள் பழுதடைந்து காணப்படுகின்றன. இதனால் பொதுமக்கள் பெரிதும் சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனர். இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது, 18 வார்டுகளில் குப்பைகளை முறையாக அப்புறப்படுத்துவதில்லை. குடிநீர் மாதம் ஒரு முறை மட்டும்குறைந்த அளவிலேயே விநியோகிக்கப்படுகிறது. மேலும் ராஜாஜி வீதி, இஸ்மாயில் வீதி, கஸ்தூரிபாய் வீதி, சீனிவாசபுரம் ஆகிய பகுதிகளில் உள்ள சாலைகள் மிகவும் பழுதடைந்து குண்டும், குழியுமாக உள்ளன. இது வாகனங்களில் செல்வோருக்கு கடும் சிரமத்தை ஏற்படுத்துகிறது. இதேபோல் வி.எஸ்.வி. காலனி, மாருதி நகர், காமராஜ் நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சாக்கடை வசதி இல்லாததால், கழிவு நீர் வீதிகளில் ஆங்காங்கே தேங்கி நிற்கிறது. இதனால் கொசு உற்பத்தி அதிகரித்துள்ளது. மேலும் குழந்தைகள் முதல் பெரியவர் வரை உடல்நலம் பாதிப்பு ஏற்படுகிறது. இதுகுறித்து பேரூராட்சி நிர்வாகத்திடம் பொதுமக்கள் பலமுறை தெரிவித்துள்ளனர். ஆனால் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே பழுதடைந்த சாலைகளை செப்பனிடவும், முறையான சாக்கடை கால்வாய் அமைக்க பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள்தெரிவித்துள்ளனர்.

;