tamilnadu

img

கானூர் குளத்தை சுத்தம் செய்த சமூக ஆர்வலர்கள்

அவிநாசி, மே 19-அவிநாசி அடுத்த கானூரில் உள்ள குளத்தில் மழை காலத்தில் நீரை சேமித்து வைப்பதற்காக சுத்தம் செய்யும் பணியில் சமூக ஆர்வலர்கள் ஞாயிறன்று ஈடுபட்டனர்.திருப்பூர் மாவட்டம், அவிநாசி ஒன்றியம், கானூர் ஊராட்சிக்குட்பட்ட மொண்டிபாளையம் செல்லும் சாலையில் பழமை வாய்ந்த குளம் அமைந்துள்ளது. இந்தக் குளம் அவிநாசி சுற்றுவட்டார பகுதிகளிலேயே மிகப் பெரிய குளம். இதன் பரப்பளவு 240ஏக்கராகும். 10 ஆண்டுகளுக்கு முன்பு வரை இந்த குளத்தில் நீர் இருந்தது. என்றும் வற்றாத குளமாகவே இருந்தது, தற்போது இரண்டு ஆண்டுகளாக நீரின் அளவு படிப்படியாக குறைந்து வருகிறது இந்நிலையில் பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் குளத்தில் உள்ள புதர்களையும், கருவேல மரங்களையும் ஜேசிபி இயந்திரம் மூலம் அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், மழை காலம் நெருங்கி வரும் நிலையில் குளத்தை சுத்தப்படுத்தும் பணியில் பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் ஈடுபட்டு வருகின்றோம். குளத்தின் நீர் தேக்கத்தினால் அருகில் உள்ள விவசாயிகள் அதிகளவில் பயன்பெறுவர். நிலத்தடி நீர்மட்டம் உயரும்.அதுமட்டுமின்றி பல்வேறு வகையான பறவைகள் இந்தக் குளத்திற்கு வந்துசெல்லும். மீன் உற்பத்தி அதிகரிக்கும். ஆகவே, குளத்தை பாதுகாக்கும் வகையில் வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை சுத்தம் செய்வது என முடிவு செய்துள்ளோம். முதல்வாரமாக இன்று சுத்தம் செய்யும் பணிகளை தொடங்கி செய்து வருகின்றோம் என்று கூறினர்.

;