india

img

அருட்தந்தை ஸ்டான் சுவாமி சிறையிலேயே காலமானார்... மோடி அரசுக்கு அரசியல் தலைவர்கள், சமூக ஆர்வலர்கள் கடும் கண்டனம்....

திருச்சி/தலேஜா:
பழங்குடி மக்களுக்காக பாடுபட்டு வந்த சமூக ஆர்வலர் பாதிரியார் ஸ்டான் சுவாமி(84) காலாமானார். எல்கர் பரிஷத் வழக்கில் தலேஜா சிறையில் இருந்தவர் உடல்நலக்குறைவினால் காலமானார். 

தமிழகத்தின் திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த 83 வயதான இயேசு சபை பாதிரியார் ஸ்டான் சாமி கடந்த 2020 ஆம் ஆண்டு என்ஐஏ மூலம் ஜார்க்கண்டில் கைது செய்யப்பட்டார். 2018ல் பீமா - கோரேகான் வன்முறையை தூண்டியதாகவும், எல்கார் பரிஷத் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசியதன் மூலம் வன்முறையை ஏற்படுத்தியதாகவும் மாவோயிஸ்ட் அமைப்புகளுடன் தொடர்பில் இருந்ததாகவும் இவர் மீது பொய்யாக புகார்கள் புனையப்பட்டன. ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் ஆதிவாசி மற்றும் தலித் மக்களுக்கு இவர் சேவை செய்து வந்த போது தேசிய புலனாய்வு அமைப்பு மூலம் திடீரென கைது செய்யப்பட்டார்.

இவர் என்ஐஏ நீதிமன்றம் மூலம் விசாரிக்கப்பட்டு வந்தார். இரண்டு முறை ஜாமீன் மனு தாக்கல் செய்தும் கூட என்ஐஏ நீதிமன்றம் இவரின் ஜாமீன் மனுவை நிராகரித்துவிட்டது. இந்நிலையில் ஸ்டான் சுவாமிக்கு போதிய மருத்துவ வசதிகள் செய்து கொடுக்கப்படவில்லை என்று தேசிய மனித உரிமைகள் ஆணையம்கண்டித்திருந்தது. மேலும் ஐநாவின் மனித உரிமைகள் பாதுகாப்பு பிரிவினர் மேரி லார் இதுகுறித்து ஒரு அறிக்கையை வெளியிட்டு இருந்தார். அதில் ஸ்டேன் சுவாமிக்கு உடனே சிறப்பு சிகிச்சை அளிக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தியிருந்தார். ஸ்டான் சுவாமியின் உடல்நிலை மிகவும் மோசமானதையடுத்து அவருக்கு வெண்டிலேட்டர் பொருத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்ததாக செய்திகள் வெளியானதை கேட்டு மேரி லாலர் அதிர்ச்சி அடைந்ததாக தெரிவித்திருந்தார். இந்நிலையில் திங்களன்று ஸ்டான் சுவாமி மரணமடைந்தார். அவர் சிறையிலேயே உடல்நலக்குறைவினால் மரணம் அடைந்தது சமூக ஆர்வலர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

                               ******************

பொய்வழக்கு புனைந்து பிணையில் விடாமல் அவரது உயிரைப் பறித்த மோடி அரசுக்கு  அரசியல் தலைவர்கள், சமூக ஆர்வலர்கள் கடும் கண்டனம்...  

பழங்குடியினர் உரிமைகளுக்கான செயற்பாட்டாளர் அருட்தந்தை ஸ்டான் ஸ்வாமி  மரணத்திற்குக் காரணமானவர்கள் கண்டறியப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.இது தொடர்பாக கட்சியின் அரசியல் தலைமைக்குழு ஓர் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டிருப்பதாவது:

பாதிரியார் ஸ்டான் ஸ்வாமி மரணத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு தன் ஆழ்ந்த துக்கத்தை வெளிப்படுத்திக் கொள்கிறது.84 வயதுடைய கிறித்தவப் பாதிரியாரான ஸ்டான்ஸ்வாமி ஜார்க்கண்ட் மாநிலத்தில் தொலைதூரப் பகுதிகளில் எல்லாம் வாழ்ந்துவந்த பழங்குடியின மக்களின் உரிமைகளுக்காகவும், நலன்களுக்காகவும் பாடுபட்டு வந்த சமூகச் செயற்பாட்டாளராவார். அவர் பீமா கோரேகான் வழக்குடன் சென்ற அக்டோபரில் மிகவும் கொடூரமான சட்டவிரோத நடவடிக்கைகள் தடைச் சட்டத்தின்கீழான குற்றச்சாட்டுகளின் கீழ் பொய்யாகப் புனையப்பட்டு, கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

அவர் மிகவும் மோசமான அளவில் பார்கின்சன்என்னும் பக்கவாத நோய் உட்பட பல்வேறுவிதமான விதங்களில் உடல்நலிவுற்றிருந்தார். இவ்வாறான அவருடைய நோய்களுக்கு உரிய சிகிச்சைகள் அவருக்கு மறுக்கப்பட்டிருந்தது. பல்வேறு மனித உரிமைகள் மற்றும் ஊனமுற்றோர் அமைப்புகள் மேற்கொண்ட தொடர் பிரச்சாரத்திற்குப் பின்புதான் அவருக்கு திரவ உணவு அருந்து வதற்கான குழாய் கருவியே (sipper) சிறை நிர்வாகத்தால் அளிக்கப்பட்டது என்பது இங்கே அடிக்கோடிடப்பட வேண்டியது அவசியமாகும்.

கோவிட்-19 கொரோனா வைரஸ் தொற்று வேகமாகப் பரவி வந்த சமயத்தில் மிகவும் நெரிசலுடன்இருந்த டலோஜா (Taloja) சிறையிலிருந்து அவரைவேறு சிறைக்கு மாற்ற வேண்டும் என்று எண்ணற்றவேண்டுகோள்கள் பலரால் அளிக்கப்பட்ட போதிலும் அவை உதாசீனம் செய்யப்பட்டன. அவரைப் பிணையில் விடவேண்டும் என்கிற வேண்டுகோள்களும் நிராகரிக்கப்பட்டன. அவர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு, அவருடைய உடல்நலன்  மிகவும் சீர்கேடடைந்து வந்த பின்னர் பம்பாய் உயர்நீதிமன்றத்தின் தலையீட்டின்பேரில் தனியார் மருத்துவமனை ஒன்றில் அவர் அனுமதிக்கப்பட்டதற்கு நன்றி சொல்ல வேண்டும். ஆனாலும்கூட, சிறைக்காவலிலிருந்து அவருடைய மரணத்தைத் தடுத்திட முடியாத அளவிற்கு அந்த நீதிமன்றத்தின் உத்தரவு தாமதமாகி விட்டது.

அவர் மீது பொய்யாக வழக்குகள் புனையப் பட்டதற்குக் காரணமானவர்களும், அவர் தொடர்ந்து சிறையில் அடைத்து வைக்கப் பட்டிருந்ததற்கும், மனிதாபிமானமற்றமுறையில் சிகிச்சை அளிக்காததற்குக் காரணமானவர்களும் தங்கள் குற்றப் பொறுப்பிலிருந்து தப்பித்துக்கொள்ள முடியாது. மிகவும் கொடூரமான சட்டவிரோத நடவடிக்கைகள் தடைச்சட்டம் மற்றும் இந்தியத் தண்டனைச் சட்டத்தின் தேசவிரோதக் குற்றப்பிரிவு ஆகியவற்றின்கீழ் பீமா கோரேகான் வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள அனைவரும் மற்றும் அரசியல்ரீதியாகக் கைது செய்யப்பட்டு சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள அனைவரும் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும்.  ஆட்சியாளர்களின் இத்தகைய அட்டூழியங்களுக்கு எதிராகத் தங்கள் சீற்றத்தை வெளிப் படுத்திடவும், இந்திய அரசமைப்புச்சட்டத்தின்கீழ் உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ள அடிப்படை உரிமைகளைப் பாதுகாத்திடவும், மக்கள் கிளர்ந்தெழ வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு அறைகூவல் விடுக்கிறது.இவ்வாறு அரசியல் தலைமைக்குழு அறிக்கையில் கோரியுள்ளது. (ந.நி.)

                               ******************

தமிழகம் முழுவதும் ஜூலை 8 சிபிஎம் ஆர்ப்பாட்டம்....

பழங்குடியின மக்களின் உரிமைப்போராளியும், மனித உரிமைகள் செயற்பாட்டாளரும், பாதிரியாருமான ஸ்டான் சுவாமி அவர்களின் மறைவிற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறது.

ஸ்டான் சுவாமி அவர்கள் திருச்சியை  பூர்வீகமாகக் கொண்டவர். ஜார்க்கண்ட் மாநிலம்  ராஞ்சியில் பழங்குடியின மக்களின் உரிமைகளுக்காக பட்டித்தொட்டி எங்கும் குரல்கொடுத்து வந்தார். கடந்த ஆண்டு அக்டோபர் 9ஆம் தேதி பீமா கோரேகான் சம்பவத்தையொட்டி தேசியபுலனாய்வு முகமையால் கைது செய்யப்பட்டார். ஏற்கனவே பார்கின்சன்ஸ் நோயினால் பாதிக்கப்பட்டிருந்த மாற்றுத் திறனாளியான அவருக்கு சிறையில் சரியான சிகிச்சை வசதிகள் செய்து கொடுக்கப்படவில்லை. குறைந்தபட்ச தேவையான உறிஞ்சி குடிக்கும் டம்ளர் கூட கொடுக்கப்படவில்லை. முறையாக உணவருந்த முடியாத நிலைக்கு அவர் தள்ளப்பட்டார். பிணையில் வெளிவருவதற்கான முயற்சியும் பலனளிக்கவில்லை. குறிப்பாக, நெரிசலும், கோவிட் தொற்றும் மிகுந்த தலோஜா சிறையிலிருந்து 84 வயதான ஸ்டான் சுவாமி அவர்களை மாற்ற வேண்டுமென்ற பலமட்ட கோரிக்கைகளையும் அரசு செவிமடுக்கவில்லை. மும்பை உயர்நீதிமன்ற தலையீட்டின் அடிப்படையிலேயே தனியார் மருத்துவமனையில் அவர் சேர்க்கப்பட்டார். ஆனாலும், கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டு அவரது உடல்நிலை மோசமடைந்து கொண்டே வந்து இன்று (5.7.21) அதிகாலை உயிரிழந்துள்ளார்.

மோடி ஆட்சிக்கு வந்த பிறகு சட்டவிரோத  தடுப்புச் சட்டம், தேசிய பாதுகாப்புச் சட்டம், தேச  துரோகச் சட்டம் உள்ளிட்ட அடக்குமுறை சட்டங்களின் கீழ் சமூக செயற்பாட்டாளர்களும், அரசாங்கத்தை விமர்சிப்பவர்களும் மிக அதிகமான எண்ணிக்கையில் கைது செய்யப்பட்டு வருகின்றனர். அந்த வரிசையில் தான் ஸ்டான் சுவாமி அவர்களும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.அவர் மீது பொய் வழக்கை தொடுத்தவர்கள், மனிதத்தன்மையற்ற முறையில் அவரை நடத்தியவர்கள் இதன் மூலம் அவரது மரணத்திற்கு காரணமானவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்; பீமா கோரேகான் வழக்கிலும் இதர அரசியல் உள்நோக்கம் கொண்ட வழக்குகளிலும் அடக்குமுறை சட்டங்களின் கீழ் கைது செய்யப்பட்ட அனைவரையும் விடுவிக்க வேண்டும்; அனைத்து பகுதி மக்களும் சிறைக்காவலில் நடந்த இந்த அநீதியான மரணத்தை எதிர்த்தும், கருத்து சுதந்திரம் பறிக்கப்படுவதை எதிர்த்தும், அரசை விமர்சிப்பவர்கள் பொய் வழக்கில் சிறையில் தள்ளப்படுவதை எதிர்த்தும் உறுதியாக குரல் கொடுக்க முன்வர வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கேட்டுக் கொள்கிறது.

இந்த அநீதியை எதிர்த்து 8.7.2021 அன்று தமிழகம் முழுவதும் கண்டன இயக்கங்கள்  நடத்திட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தீர்மானித்துள்ளது. இவ்வியக்கத்தில் ஒத்த கருத்துள்ள ஜனநாயகசக்திகள் கலந்து கொண்டு இந்த அநீதிக்கெதிராக கண்டன குரலெழுப்பிட வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கேட்டுக்கொள்கிறது.

சிபிஎம் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் விடுத்துள்ள அறிக்கையிலிருந்து....

                               ******************

சிறுபான்மை மக்கள் நலக்குழு இன்று ஆர்ப்பாட்டம்

அருட்தந்தை ஸ்டான் சாமி அவர்களின் மறைவுக்கு வேதனை கலந்த இரங்கலை தெரிவித்துள்ள தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு, “ஆட்சியாளர்களின் மனிதத்தன்மையற்ற கொடுஞ்செயலால் அருட்தந்தை ஸ்டான் சாமியின் மரணம் நிகழ்ந்துள்ளது. இதுபோன்ற கொடுமைகளுக்கு இந்திய தேசத்தின் மக்கள் நிச்சயம் பதில் சொல்வார்கள்” என்று கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும், ஸ்டான் சாமி மரணத்திற்கு காரணமான ஒன்றிய அரசுக்கு கண்டனம் தெரிவிக்கும் விதத்தில் ஜூலை 6 (இன்று)  தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என சிறுபான்மை மக்கள் நலக்குழுவின் மாநிலத் தலைவர்எஸ்.நூர்முகமது, பொதுச் செயலாளர் எம்.ராமகிருஷ்ணன் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.