tamilnadu

முகிலன் குறித்து அவரது நண்பரிடம் திருப்பூரில் சிபிசிஐடி காவல்துறை விசாரணை

கடந்த பிப்ரவரி 15ஆம் தேதி காணாமல் போன முகிலன் குறித்து அவரது நண்பர்களான சமூக ஆர்வலர்களிடம் சிபிசிஐடி காவல்துறையினர் திருப்பூரில் விசாரணை நடத்தியுள்ளனர். இது பற்றிய விபரம் வருமாறு: தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்புப் போராட்டத்தில் 13 பேர் துப்பாக்கி சூட்டில் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் பிப்ரவரி 15ஆம் தேதி முகிலன் ஆதாரங்களை வெளியிட்டுப் பேசியிருந்

தார். அன்று இரவு மதுரைக்குப் புறப்பட்ட அவர் காணாமல் போனார். இதுவரை அவர்எங்கிருக்கிறார், என்ன ஆனார் என்பது தெரியவில்லை. இதுகுறித்து நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்யப்பட்ட நிலையில் சிபிசிஐடி காவல் துறையினர் 40 தனிப்படைகளை அமைத்து 250க்கும் அதிகமானோரிடம் விசாரணைமேற்கொண்டுள்ளனர். இதற்கிடையே முகிலனை கண்டுபிடித்துத்தர வலியுறுத்தி சமூக ஆர்வலர்கள், பொதுநல அமைப்பினர் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர்.இந்நிலையில் சிபிசிஐடி காவல்துறையினர் திருப்பூரைச் சேர்ந்த நேர்மை மக்கள் இயக்கத்தின் முதன்மை ஒருங்கிணைப்பாளர் பழ.ரகுபதி உள்ளிட்டோரிடம் ஏற்கெனவே முதல் கட்ட விசாரணை நடத்தினர். சென்னையில் முகிலனுடன் பழ.ரகுபதி கடைசியாக உடன் இருந்திருக்கிறார். இந்நிலையில் சென்னிமலையை சார்ந்தசமூக ஆர்வலரும், முகிலனின் நண்பருமான பாரதி என்பவரிடம் புதன்கிழமை காலை முதல் திருப்பூரில் சிபிசிஐடி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். திருப்பூரில் சிபிசிஐடி அலுவலகத்தில் விசாரணைக்கு அழைத்த அதே நேரத்தில் சென்னிமலையில் உள்ள பாரதியின் வீட்டிற்கும் காவல் துறையினரை அனுப்பி விசாரணை மேற்கொண்டதாகவும் பாரதி தெரிவித்துள்ளார். முகிலன் இப்போது எங்கிருக்கிறார் என்பது தனக்கு தெரியாது என்று விசாரணையில் பாரதி தெரிவித்ததாக கூறியுள்ளார். முகிலன் காணாமல் போய் 40 நாட்களைக் கடந்துள்ள நிலையில், உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட ஆட்கொணர்வு மனு ஏப்ரல் 8 ஆம் தேதி விசாரணைக்கு வருகிறது. இதில் ஏதேனும் முன்னேற்றம் ஏற்படலாம் என முகிலனின் உறவினர்கள் எதிர்பார்க்கின்றனர்.

;