திருநெல்வேலி:
தமிழக அரசு அனைத்து பேருந்துகளையும் இயக்க வேண்டும், பணிக்கு வரும் அனைத்து தொழிலாளர்களுக்கும் பாரபட்சமின்றி பணி வழங்க வேண்டும் உள்ளிட்டவை வலியுறுத்தி நெல்லை, தூத்துகுடி, தென்காசி மாவட்டத்தில் 18 பணிமனைகள் முன்பு அனைத்து போக்குவரத்து தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நெல்லை வண்ணார்பேட்டை தாமிரபரணி டெப்போ முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு தொமுச மாநில அமைப்பு செயலாளர் தர்மன் தலைமை தாங்கினார். கோரிக்கைகளை விளக்கி சிஐடியு மாநிலக்குழு உறுப்பினர் எஸ்.பெருமாள், ஏஐடியுசி உலகநாதன், எச்.எம்.எஸ் மாநிலத் துணைத் தலைவர் சுப்பிரமணியன், ஐஎன்டியூசி சார்பில் கண்ணன், டிடிஎஸ் எப்.சார்பில் சந்தானம் ஆகியோர் பேசினர். சிஐடியு போக்குவரத்து தொழிலாளர் சங்க மாவட்ட தலைவர்காமராஜ், மாவட்ட பொதுச்செயலாளர் ஜோதி, பொருளாளர் மணி, தொமுச மகாவிஷ்ணு, ஏஐடியூசி ஜெயக்குமார், வெங்கடேசன் உட்பட ஏராளமானோர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.இதே போல் திருச்செந்தூர் பணிமனை முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு தொமுச கிளைச்செயலாளர் ஜெயக்குமார் தலைமை தாங்கினார். சி.ஐ.டி.யு கிளை தலைவர் பிரமநாயகம், ரேவா எஸ் சிவதாணு தாஸ், ஓய்வு பெற்ற நல அமைப்பு (REWA)மாநில குழு உறுப்பினர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.