tamilnadu

திருச்சூரில் பாஜகவுக்கு யுடிஎப் ஓட்டுகள் : காங்கிரஸ் கூட்டத்தில் வேட்பாளர் அலறல்

திருவனந்தபுரம், மே 14-கேரள மாநிலம் திருச்சூர் மக்களவைத் தொகுதியில் பாஜக வேட்பாளர் வலுவான நிலையில் இருந்ததாகவும், யுடிஎப் ஓட்டுகள் அவருக்கு சென்றுள்ளதாகவும் யுடிஎப் வேட்பாளர் டி.என்.பிரதாபன் காங்கிரஸ்நிர்வாகிகள் கூட்டத்தில் அச்சம் தெரிவித்துள்ளார். கேரள மாநிலத்தில் இடது ஜனநாயக முன்னணி அரசு மேற்கொண்டு வரும் முன்மாதிரியான பல திட்டங்கள் மக்கள்மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளன. இந்நிலையில் சபரிமலையில் இளம்பெண்களை அனுமதிப்பது தொடர்பான உச்சநீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்த வேண்டிய கட்டாயம் கேரள அரசுக்கு ஏற்பட்டது. இதை தங்களுக்கு கிடைத்த வாய்ப்பாக கருதி காங்கிரசும், பாஜகவும் களத்தில் இறங்கின. ஆர்எஸ்எஸ் சங்பரிவார் அமைப்பினர் மாநிலத்தை ரத்தக்களரியாக்க முயன்றனர். அதற்கு எதிராக சமுதாயஅமைப்புகளுடன் இணைந்து அரசின் முன்முயற்சியில் மாநிலத்தில் வனிதா மதில்போன்ற பெரும் மக்கள் இயக்கங்கள் நடைபெற்றன. இந்த சூழ்நிலையில் மக்களவைத் தேர்தல் கடந்த ஏப்ரல் 23 ஆம் தேதி நடைபெற்றது. இடது ஜனநாயக முன்னணி மிகுந்த நம்பிக்கையோடு மக்களை அணுகியது. அதற்கு பேராதரவும் கிடைத்து வந்தது.ஐக்கிய முற்போக்கு கூட்டணியோ காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கேரளத்தில் போட்டியிட்டால் கரையேறலாம் என்கிற நிலைக்கு தள்ளப்பட்டது. மற்றொருபுறம் பாஜகவும் கடும் இழுபறிக்கு பிறகு வேட்பாளர்களை அறிவித்தது. களத்தில் எல்டிஎப்புக்கும் யுடிஎப்புக்கும் கடும் போட்டிநிலவியது. ஆனாலும் சில இடங்களில் பாஜக வேட்பாளர்கள் யுடிஎப் ஓட்டுகளை விலைபேசி வாங்க முயற்சிப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. அதை உறுதி செய்யும் வகையில் தற்போது திருச்சூர்தொகுதி யுடிஎப் வேட்பாளரே காங்கிரஸ்கட்சியின் நிர்வாகிகள் கூட்டத்தில் பேசியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.பாஜக வேட்பாளர் சுரேஷ் கோபியைவேட்பாளராக நிறுத்தியது தங்களுக்கு(யுடிஎப்) பின்னடைவை ஏற்படுத்தியதாகவும், இந்து நாயர் ஓட்டுகள் பாஜகவுக்கு சென்றிருக்கலாம் எனவும், ஆர்எஸ்எஸ் செயல்பாடு வலுவாக இருந்ததாகவும் டி.என்.பிரதாபன் தெரிவித்துள்ளார். தங்களது வாக்குவங்கியில் எதிர்பாராத அரிப்பு ஏற்பட்டிருக்கலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.