tamilnadu

img

திருச்சி மாநகராட்சி ஆணையரிடம் செப். 9-ல் மனு கொடுக்கும் போராட்டம் குடியிருப்போர் நலச் சங்க கூட்டமைப்பு அறிவிப்பு

திருச்சிராப்பள்ளி, ஆக.29- திருச்சி மாநகர குடியிருப்போர் நலச் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் புதனன்று திருச்சி பிரஸ் கிளப்பில் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது. இதில் மாநகர ஒருங்கிணைப்பாளர்கள் சக்திவேல், சுப்ரமணியன் ஆகியோர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழக அரசாணையில் வரி உயர்வு அதிகபட்சம் 50 சதவீதம் என்று தான் சொல்லப்பட்டுள்ளதே தவிர கட்டாயம் 50 சதவீதம் உயர்த்தப்பட வேண்டும் என்று சொல்லப்படவில்லை. 12 மடங்கு வரி உயர்த்திடுவதற்கு எந்தவித ஆதாரமும் இல்லை. பொதுமக்களிடம் கலந்து ஆலோசிக்காமல் 1 முதல் 60 வார்டுகளுக்கு 50 சதவீதமும் மற்றும் 61 முதல் 65 வார்டுகளுக்கு 12 மடங்கு உயர்வு என்பது திருச்சி மாநகராட்சி நிர்வாகம் எடுத்த முடிவு.  அதிகப்படியாக உயர்த்தப்பட்ட வரியை மாநகராட்சி குறைத்திட மறுக்கிறது. ஆகவே உயர்த்தப்பட்ட வரியை ஒட்டுமொத்தமாக நிறுத்தி வைத்திட வேண்டும். உள்ளாட்சி தேர்தல் முடிந்த பின் வரி உயர்வு தொடர்பாக புதிதாக அமைகின்ற மாமன்றம் முடிவெடுத்து கொள்ளட்டும். உயர்த்தப்பட்ட வரியே கேள்விக்குறியாக உள்ள நிலையில் வரி உயர்வை முன் தேதியிட்டு வசூலிப்பது என்ற பேச்சுக்கே இடமில்லை.  தமிழக சட்டமன்றத்தில் திருவெறும்பூர் சட்டமன்ற உறுப்பினரின் வரிஉயர்வு தொடர்பான கோரிக்கைக்கு, உள்ளாட்சித்துறை அமைச்சர், தமிழக முதல்வர் அறிவுறுத்தலின்படி வரி உயர்வை மறுபரிசீலனை செய்யப்படும் என்று உறுதியளித்துள்ளார்கள்.  பெரும்பாலான விஸ்தரிப்பு பகுதிகளில் மாநகராட்சி முழுமையான அடிப்படை வசதிகளை செய்து கொடுக்கவில்லை. இந்நிலையில் திருச்சி மாநகராட்சி, வரி உயர்வு தொடர்பாக வீட்டு உரிமையாளர்களுக்கு புதிதாக நோட்டீஸ் கொடுப்பதையும், போனில் தொடர்பு கொண்டு வரியை கட்ட சொல்லி கட்டாயப்படுத்துவதையும் உடனடியாக நிறுத்த வேண்டும்.  திருச்சி மாநகராட்சியில் உள்ள அனைத்து குடியிருப்பு நலச்சங்கங்கள் மற்றும் அந்தந்த பகுதியை சார்ந்த தன்னார்வலர்கள் மேற்கண்ட முடிவுகளை வலியுறுத்தி செப்டம்பர் 9-ம்  தேதி காலை திருச்சி மாநகராட்சிக்கு பெருந்திரளாக சென்று ஆணையரிடம் மனு கொடுக்க உள்ளோம்.  மாநகராட்சி உயர்த்தப்பட்ட வரிக்கு நோட்டீஸ் கொடுத்தால் வீட்டின் உரிமையாளர்கள் மேற்கண்ட காரணங்களை கூறி நோட்டீஸ் வாங்க மறுப்பு தெரிவிக்க வேண்டும். இது தொடர்பாக சம்பந்தப்பட்ட நலச் சங்கங்களுக்கு சுற்றறிக்கை அனுப்ப உள்ளோம். மேலும் உயர்த்தப்பட்ட வரிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக வரிகொடா மக்கள் இயக்கத்தை அனைத்து நலச்சங்கங்களையும் ஒருங்கிணைத்து கூட்டமைப்பு முன்னெடுக்க உள்ளது.இவ்வாறு அவர்கள் கூறினர். பேட்டியின் போது கோட்ட ஒருங்கிணைப்பாளர்கள் பொன்மலை கோட்ட நடராஜன், அரியமங்கலம் கோட்ட துரைகண்ணு, முருகையா, கோஅபிஷேகபு ரம் வெங்கடாசலம் ஆகியோர் உடனிருந்தனர். 

;