tamilnadu

img

குவியும் உதவிகளால் பல ஆண்டுக்கு பின் ஒளிர்ந்த சாதனை மாணவியின் குடிசை வீடு

தஞ்சாவூர், ஏப்.26-தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அடுத்த பூக்கொல்லை பகுதியைச் சேர்ந்தவர் கணேசன். இவர் தையல் கடையில் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி சித்ரா கூலித் தொழிலாளி. இவர்களது மகள் சஹானா(17), பேராவூரணி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தார். நடந்து முடிந்த பொதுத்தேர்வில் 600க்கு 524 மதிப்பெண் பெற்றார். சிறிய குடிசை வீட்டில் வறுமையின் கோரப்பிடியில் சிக்கித் தவித்து வரும், மாணவி சஹானா மருத்துவராக வேண்டி நீட் தேர்வுக்காக தயாராகி வருகிறார். சஹானா குறித்து தீக்கதிரில் வெள்ளிக்கிழமை அன்று செய்தி வெளியாகியிருந்தது. இதைத்தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் ஆ.அண்ணாதுரை மாணவியோடு தொலைபேசியில் தொடர்பு கொண்டு தேவையான உதவிகளை செய்து தருவதாக உறுதியளித்தார். மேலும் மாணவியின் வங்கி கணக்கிற்கு தனது சொந்த நிதியிலிருந்து ஒரு குறிப்பிட்ட தொகையை அனுப்பினார். குடிசை வீட்டில் மின் வசதியின்றி மாணவி இருப்பதை அறிந்து உடனடியாக சோலார் மின் விளக்கு வசதி ஏற்படுத்தி தர உத்தரவிட்டார்.


ஆட்சியரின் அறிவுறுத்தலை தொடர்ந்து, சேதுபாவாசத்திரம் ஒன்றிய ஆணையர் கை.கோவிந்தராசன், வட்டார வளர்ச்சி அலுவலர்(கி.ஊ) கிருஷ்ணமூர்த்தி மற்றும் ஒன்றிய உதவி பொறியாளர்கள் கதிரேசன், அருண் மற்றும் கண்ணன் ஆகியோர் ரூ.6000 மதிப்பிலான சோலார் விளக்குகளை இவரது வீட்டிற்கு அமைத்து கொடுத்துள்ளனர். இதனால் பல ஆண்டுகளுக்கு பிறகு மாணவியின் குடிசை வீடு வியாழக்கிழமை இரவு ஒளிர்ந்தது. மேலும் மாணவிக்கு, பேராவூரணி சேர்ந்த கௌதமன் என்பவர் கல்வி வழிகாட்டியாக செயல்பட்டு வருகிறார்.இது குறித்து மாணவி சஹானா கூறியதாவது, தற்போது நான் நீட் தேர்வுக்கு தயாராகி வருகிறேன். எப்படியும் வெற்றி பெற்று விடுவேன் என்ற நம்பிக்கை உள்ளது. அனைவருக்கும் என்னுடைய கண்ணீரை நன்றியோடு காணிக்கையாக்குகிறேன். எங்கள் வீட்டிற்கு சோலார் மின்விளக்கு வசதியை ஆட்சியர் ஏற்படுத்தி தந்துள்ளார். ஒரு குறிப்பிட்ட தொகையை எனக்கு தன்னுடைய சொந்த நிதியிலிருந்து அன்பளிப்பாக அவர் வழங்கியுள்ளார். நீட் தேர்வு பயிற்சிக்கும் உதவுவதாக சொன்னார். மேற்படிப்பிற்கான செலவினை தஞ்சாவூர் மாவட்ட ஊரக வளர்ச்சித் துறை ஊழியர்கள் ஏற்றுக் கொள்ள இருப்பதாக, சேதுபாவாசத்திரம் ஒன்றிய ஆணையரும், ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் சங்க மாவட்டச் செயலாளருமான கை.கோவிந்தராசன் தெரிவித்தார் என மாணவி சஹானா கூறினார்.

;