tamilnadu

தஞ்சாவூர் ,முசிறி ,தொட்டியம் ,திருவாரூர் முக்கிய செய்திகள்

கொலை வழக்கில் வாலிபருக்கு ஆயுள்

தஞ்சாவூர், ஆக.23– தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே கண்ணந்தங்குடி மேலையூர் பகுதியை சேர்ந்தவர் தயாநிதி(44). கடந்த 2003 ஆம் ஆண்டு விழாவின் போது, மாடு அவிழ்த்து விடுவது தொடர்பாக ஊர்க் கோவிலில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. அப்போது அதே பகுதியை சேர்ந்த தினேஷ்(27), தயாநிதியுடன் தகராறு செய்து வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதையடுத்து தயாநிதி கத்தியால் குத்தியதில், தினேஷ் இறந்து போனார். இவ்வழக்கு பட்டுக்கோட்டை மூன்றாவது கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி ரவீந்திரன், குற்றவாளி தயாநிதிக்கு ஆயுள் தண்டனையும், 25 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து வியாழக்கிழமை தீர்ப்பளித்தார்.

 கள்ளநோட்டு: இருவர் கைது

தஞ்சாவூர் ஆக.23-  தஞ்சை மாவட்டம் பேராவூரணி அருகிலுள்ள செந்தலைப்பட்டினத்தில் வியாழக்கிழமை மதியம் முகமது யாசின் என்பவரது மளிகை கடையில் மன்னார்குடி ஆர்.பி.சிவம் நகர் மணிகண்டன்(26) டிரைவர், கன்னியாகுறிச்சி கலிச்சான்கோட்டை விஜய்(22) மெக்கானிக் ஆகிய இருவரும் 2000 ஆயிரம் ரூபாய் நோட்டு கொடுத்து சிகரெட் வாங்கிக் கொண்டு மீதி தொகையையும் பெற்றுக் கொண்டு கட்டுமாவடி நோக்கி சென்றுவிட்டனர். சிறிது நேரத்தில் நோட்டின் மீது சந்தேகப்பட்ட முகமதுயாசின் 2000 ஆயிரம் ரூபாய் நோட்டை சோதனை செய்துள்ளார். அது கள்ளநோட்டு என்பது தெரியவந்து அதிர்ச்சியடைந்தார். எதேச்சையாக அரை மணி நேரத்தில் கட்டுமாவடி நோக்கி சென்ற மணிகண்டன், விஜய் ஆகிய இருவரும் அதே வழியில் திரும்பி வந்துள்ளனர். இதை பார்த்த கடைவீதியில் நின்ற பொதுமக்கள் இருவரையும் மடக்கி பிடித்துள்ளனர்.  அவர்களிடம் நடத்திய விசாரணையில் அந்த நோட்டு கள்ளநோட்டு என்பதையும், அதை மன்னார்குடி திருமாக்கோட்டையை சேர்ந்த மாதவன் என்பவர் கொடுத்து மாற்றச் சொன்னதாகவும் கூறியுள்ளனர். பல்வேறு இடங்களில் மோட்டார் சைக்கிளுக்கு ஆயில், நெய் டப்பா போன்ற பொருட்களை வாங்கி விட்டு 2, 3 நோட்டுக்களை மாற்றியுள்ளதாகவும் வாக்குமூலம் கொடுத்துள்ளனர். மேலும் அவர்கள் கைவசம் இருந்த நான்கு 2000 ரூபாய் கள்ளநோட்டுகளையும் சேதுபாவாசத்திரம் காவல்துறையினர் பறிமுதல் செய்து மணிகண்டன், விஜய் ஆகிய இருவரை கைது செய்து விசாரணை நடத்தினர். இதற்கு மூளையாகச் செயல்பட்டு, தற்போது தலைமறைவாகி உள்ள நபர்களையும் தேடி வருகின்றனர்.

பெயர் பட்டியலை சரி பார்க்க வாக்காளர்களுக்கு அழைப்பு  

தஞ்சாவூர் ஆக.23- தஞ்சாவூர் மாவட்ட வாக்காளர் சரி பார்ப்பு திட்டம் மற்றும் சுருக்கமுறை திருத்தம் தொடர்பான கூட்டம் நடைபெற்றது. இதில் வாக்காளர் பட்டியலில், பொது மக்கள் தங்களின் விபரங்கள் யாவையும் VOTER HELPLINE என்ற MOBILE APP செயலி மூலம் அல்லது NVSP PORTAL என்ற WEbSITE மூலம் அறிந்திட வழிவகை செய்யப்பட்டுள்ளது. மேலும் வாக்காளர்கள் தங்கள் பெயர் தவறின்றி வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ளதை உறுதி செய்திடவும், தவறு ஏதும் இருப்பின் தொடர்புடைய வாக்குச்சாவடி நிலை அலுவலரிடம் தெரிவிக்குமாறு பொது மக்களுக்கு ஆட்சியர் அறிவுறுத்தி உள்ளார். கூட்டத்தில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

பல்கலை. அளவிலான  செஸ் போட்டி

முசிறி, ஆக.23- திருச்சி மாவட்டம் முசிறி அண்ணா அரசு கலைக் கல்லூரியில் பாரதிதாசன் பல்கலைக்கழக கல்லூரிகளுக்கு இடையிலான ஆண், பெண், தனி நபர் செஸ் போட்டிகள் நடைபெற்றன. போட்டியில், ஆண்களில் 38 பேர், பெண்களில் 48 பேரும் பங்கேற்றனர். தனி நபர் போட்டியில் முதல் 5 இடம் பெற்றவர்கள் பல்கலைக்கழக அணியில் தேர்வு செய்யப்பட்டு தென்னிந்திய மண்டல போட்டிகளில் பங்கு பெற தகுதி பெற்றனர்.  முன்னதாக போட்டிகளை கல்லூரியின் முதல்வர் ராஜ்குமார் துவக்கி வைத்தார். ஆண்கள் மற்றும் பெண்கள் போட்டியில் திருச்சி பிஷப்ஹீபர் கல்லூரி மாணவ, மாணவிகள் வென்றனர். வெற்றி பெற்றவர்களுக்கு பல்கலைக்கழக உடற்கல்வித் துறை தலைவர் பழனிச்சாமி பரிசுகளை வழங்கி பாராட்டினர். 

மழைநீர் சேமிப்பு விழிப்புணர்வு மாரத்தான்

தொட்டியம், ஆக.23- திருச்சி மாவட்டம் தொட்டியம் அருகே காட்டுப்புத்தூரில் மழைநீர் சேமிப்பு விழிப்புணர்வு மாரத்தான் போட்டி நடைபெற்றது. காட்டுப்புத்தூரிலிருந்து சுமார் 15 கி.மீ தூரத்திலான போட்டியில் 500-க்கும் மேற்பட்ட வீரர் மற்றும் வீராங்கனைகள் பங்கேற்றனர். மழைநீரை சேமிப்பதன் அவசியம், நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்துவது உள்ளிட்டவை விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. போட்டியில் முதல் 6 இடங்களை பிடித்தவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. போட்டி ஏற்பாடுகளை காட்டுப்புத்தூர் பகுதியைச் சேர்ந்த கருணாகரன் தலைமையிலான குழுவினர் செய்திருந்தனர்.

முசிறியில் மக்கள் குறைதீர் முகாம்

முசிறி, ஆக.23- திருச்சி மாவட்டம் முசிறி பேரூராட்சி அலுவலகத்தில் மக்கள் குறைதீர் முகாம் நடைபெற்றது. கோட்டாட்சியர் ரவிச்சந்திரன் தலைமை வகித்தார். தாசில்தார் ஆறுமுகம் முன்னிலை வகித்தார். செயல் அலுவலர் கணேசன் வரவேற்றார். மண்டல துணை வட்டாட்சியர் விஜய், வருவாய் ஆய்வாளர் சக்திவேல் உள்ளிட்டோர் அரசின் நலத் திட்டங்கள் குறித்து விளக்கி பேசினர். முகாமில் வீட்டுமனை பட்டா உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை மனுக்களை பொதுமக்கள் அளித்தனர். முகாம் வரும் 31-ந் தேதி வரை நடைபெறுகிறது. 

ஆக.27 விவசாயிகள் குறைதீர் கூட்டம்

திருவாரூர் ஆக23- திருவாரூர் மாவட்ட விவசாயிகள் குறைதீர் கூட்டம் மற்றும் சம்பா சாகுபடி குறித்த ஆலோசனைக் கூட்டம் வரும் 27-ம் தேதி காலை 10.30 மணிக்கு ஆட்சியர் கூட்டரங்கில் நடைபெற உள்ளது. எனவே இதில் மாவட்ட முன்னோடி விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் தவறாமல் கலந்து கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

;