தஞ்சாவூர், ஆக.9- புதுக்கோட்டை மாவட்டம், காட்டாத்தி காந்தி நகரைச் சேர்ந்தவர் சபாபதி மகன் மணிமாறன்(24). இவரும், தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை பகுதி கிராமத்தைச் சேர்ந்த 17 வயது சிறுமியும் சில ஆண்டுகளுக்கு முன்பு காதலித்தனர். இவர்களது காதலுக்குச் சிறுமி வீட்டில் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில், கடந்த 2016, மே 26 ஆம் தேதி அதிகாலை சிறுமி வீட்டில் அனைவரும் தூங்கிக் கொண்டிருந்தனர். அப்போது, சிறுமியை மணிமாறன் திருமணம் செய்து கொள்வதாகக் கூறி அழைத்துக் கொண்டு தேனி அருகேயுள்ள குமுளிக்குச் சென்றார். அங்குள்ள விடுதியில் இருவரும் தங்கி இருந்தனர். இதனிடையே, திருவோணம் காவல் நிலையத்தில் சிறுமியின் தந்தை புகார் செய்தார். இதன் பேரில் காவல்துறையினர் இருவரையும் வரவழைத்தனர். அப்போது, தன்னிடம் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைக் கூறி மணிமாறன் பாலியல் வல்லுறவு செய்தார் என சிறுமி கூறினார். இதன் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து காவல்துறையினர் மணிமாறனைக் கைது செய்தனர். இதுதொடர்பாக தஞ்சாவூர் மகளிர் விரைவு நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டது. இந்த வழக்கை நீதிபதி எம்.எழிலரசி விசாரித்து மணிமாறனுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.2,000 அபராதமும் விதித்து வியாழக்கிழமை தீர்ப்பளித்தார்.