tamilnadu

மழலையர் கல்வி பயிற்சி முடித்த ஆசிரியர்களை எல்கேஜி, யுகேஜி வகுப்புகளுக்கு நியமிக்க கோரிக்கை

புதுக்கோட்டை, ஏப்.3- மழலையர் பயிற்சி முடித்த ஆசிரியர்களை தமிழக அரசு அறிவித்துள்ள எல்கேஜி, யுகேஜி வகுப்புகளுக்கான புதிய நியமனத்தில் முன்னுரிமை அளித்து பணி வழங்க வேண்டுமென மழலையர் கல்வி பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் நலச்சங்கம் வலியுறுத்தி உள்ளது.மழலையர் கல்வி பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் நலச்சங்கத்தின் புதுக்கோட்டை மாவட்ட செயற்குழுக்கூட்டம் புதுக்கோட்டையில் புதன்கிழமையன்று நடைபெற்றது. மாவட்டத் தலைவர் செந்தில்குமார் தலைமை வகித்தார். சங்கத்தின் எதிர்கால செயல்பாடுகள் குறித்து மாவட்டச் செயலாளர் நரசிம்மன் பேசினார். தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாவட்டத் தலைவர் அ.மணவாளன், உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் சங்கத்தின் மாவட்டச்செயலாளர் மா.குமரேசன் ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.மழலையர் கல்வி பயிற்சி முடித்த ஆசிரியர்களை நியமனம் செய்வதன் மூலம் மூன்றிலிருந்து ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகளின் மனநிலைக்கு தகுந்தவாறு ஆடல், பாடல் மூலம் எளிமையான முறையில் கல்வி வழங்க முடியும். இதன் மூலம் அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கைஅதிகமாகும். போதிய மாணவர்கள் இல்லாமல் அரசுப் பள்ளிகளை மூடும் அவலநிலை தடுக்கப்படும். எனவே, மழலையர் பயிற்சி முடித்த ஆசிரியர்களை தமிழக அரசு அறிவித்துள்ள எல்கேஜி, யுகேஜி வகுப்புகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் பணி நியமனம் செய்ய வேண்டும் எனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

;