tamilnadu

சீர்காழி,கும்பகோணம் மற்றும் தஞ்சாவூர் செய்திகள்

கொள்ளிடம் ஆற்றில் மணல் கடத்திய 5 பேர் கைது


சீர்காழி, ஏப்.5- நாகை மாவட்டம் கொள்ளிடம் பகுதி குத்தவக்கரை மேலத் தெருவைச் சேர்ந்தவர் மகாதேவன்(40). அதே பகுதியைச்சேர்ந்த பாரத் நகர் செல்லையன் மகன் காசிநாதன்(32). கொள்ளிடம் தோப்பு தெருவைச் சேர்ந்தவர் ஆறுமுகம்(50) ஆகியோர் கொள்ளிடம் ஆற்றிலிருந்து அனுமதியின்றி மாட்டுவண்டிகளில் மணல் ஏற்றிக் கொண்டு விற்பனைக்காக எடுத்துச்சென்று கொண்டிருந்தனர். அப்போது மாங்கணாம்பட்டு பிள்ளையார் கோயில் தெரு அருகே மெயின் ரோட்டில் கொள்ளிடம் காவல்துறையினர் மூன்று டயர் வண்டிகளையும் மடக்கிப் பிடித்து மணலுடன் பறிமுதல் செய்து மேற்கண்ட 3 பேரை கைது செய்தனர். இதே போல் கொன்னக்காட்டு படுகை கிராமம் கொள்ளிடம்ஆற்றங்கரை சாலையில் சென்று கொண்டிருந்த இரண்டு டயர் வண்டிகளை மணலுடன் பறிமுதல் செய்து, சிதம்பரநாதபுரம் கிராமம் தெற்கு தெருவைச் சேர்ந்த அர்ச்சுணன்(55)மற்றும் புத்தூர் மந்தகரை தெருவைச் சேர்ந்த அப்துல் சுக்கூர்மகன் ரகுமான் (19) ஆகிய இருவரை காவலர்கள் கைது செய்தனர். தினந்தோறும் இரவு நேரங்களில் நடைபெறும் மணல் கடத்தலுக்குப் பின்னணியில் உள்ள நபர்கள் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் சார்பில்கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 


மூன்று பேர் கைது 


கும்பகோணம், ஏப்.5-கும்பகோணம் அடுத்த திருவிடைமருதூர் அறக்கட் டளை தெருவைச் சேர்ந்தவர் லாலி என்ற மணிகண்டன்(30) மற்றும் திருச்சியைச் சேர்ந்த பிரசாந்த், தாராசுரம் அசோக் குமார். இவர்கள் 3 பேரும் கூட்டாக பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்டனர். இதில் லாலி மணிகண்டன் மீது கொலை,கொள்ளை உள்பட 13 வழக்குகள் நிலுவையில் உள்ளனஇந்நிலையில் லாலி மணிகண்டன் மீது கும்பகோணம் பிரபல தொழிலதிபருக்குக் கொலை மிரட்டல் விடுத்ததாகப் புகாரின் பேரில் மூன்று பேரையும் கைது செய்து விசாரித்தனர். இதில் லாலி மணிகண்டன் கூலிப்படை தலைவனாக இருந்துமூளையாக செயல்பட்டது தெரியவந்தது. மேலும் லாலி மணிகண்டன் என்பவன் பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில பொறுப்பாளரான ஸ்டாலின் சகோதரர் வழக்குரைஞர் ராஜா கொலை வழக்கில் சம்பந்தப்பட்டு இருப்பதாகவும், கடந்தாண்டு கும்பகோணம் அடுத்த திப்பிராஜபுரத்தில் நடந்த ஆளுநர் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தொழிலதிபர் ஒருவருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் இப்பிரச்சனையில் ஆளுநர் தலையிட்டதால் குற்றவாளிகளை உடனடியாக கைது செய்யப் பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.


ரூ.1.42 லட்சம் பறிமுதல் 


தஞ்சாவூர், ஏப்.5-தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே சூரப் பள்ளம் கிராமத்தில் தேர்தல் பறக்கும் படையினர் வாகனச் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக மோட்டார்சைக்கிளில் வந்தவரிடம் உரிய ஆவணங்கள் இன்றி இருந்தரூ.60 ஆயிரத்தை பறிமுதல் செய்தனர். இதே போல் கோட்டாகுடி கிராமத்தில் நடத்திய வாகனச்சோதனையில் மோட்டார் சைக்கிளில் வந்த ஒருவரிடம் உரிய ஆவணங்கள் இன்றி வைத்திருந்த ரூ.82 ஆயிரத்து140 பறிமுதல் செய்தனர். இரு இடங்களிலும் பறிமுதல் செய்யப்பட்ட ரூ.1 லட்சத்து 42 ஆயிரத்து 140, பட்டுக்கோட்டை கோட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டது.




;