tamilnadu

சீர்காழி ,கும்பகோணம் ,அறந்தாங்கி மற்றும் தஞ்சாவூர் முக்கிய செய்திகள்

பயிர்க் காப்பீடு செய்ய விவசாயிகளுக்கு அழைப்பு

சீர்காழி, மே 31-2019-ம் ஆண்டுக்கான மத்திய பயிர்க் காப்பீட்டு திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு இழப்பீடு நிதி உதவி வழங்கி பாதுகாக்கவும், பண்ணை வருவாயை நிலைப்படுத்திடவும் மற்றும் அதிநவீன தொழில் நுட்பங்களை கடைபிடிப்பதை ஊக்குவிக்கவும் தமிழகத்தில் கரீப் குறுவை சொர்னாவாரி நெற்பயிர் மற்றும் இதர கரிப் பருவ பயிர்களை காப்பீடு செய்து கொள்ளலாம். நாகப்பட்டினம் மாவட்டம் சீர்காழி கொள்ளிடம் பகுதியில் குறுவை பருவத்தில் நெல் பயிரிட்ட விவசாயிகள் 31.07.2019-க்குள் தங்கள் பயிர்க் காப்பீட்டினை பதிவு செய்ய வேண்டும். இதர கரீப் பயிர்களான மக்காச்சோளம் பயிரிடும் விவசாயிகள் இத்திட்டத்தில் பதிவு செய்ய கடைசி நாள் 15.07.2019 ஆகும் என கொள்ளிடம் வட்டார வேளாண் உதவி இயக்குநரும், சீர்காழி பொறுப்பு உதவி இயக்குநருமான சுப்பையா தெரிவித்துள்ளார்.

உழவர் உற்பத்தியாளர் குழு கூட்டம்  

கும்பகோணம் மே 31- கும்பகோணம், திருவிடைமருதூர், திருப்பனந்தாள் வட்டார வேளாண் துறை சார்பில் ஒருங்கிணைந்த கூட்டு பண்ணைய திட்ட உழவர் உற்பத்தியாளர் குழுக்களுக்கு சிறப்பு ஆய்வுக் கூட்டம் கும்பகோணத்தில் நடைபெற்றது. வேளாண் அலுவலர் கோபாலகிருஷ்ணன் வரவேற்றார். தஞ்சை மாவட்ட வேளாண் இணை இயக்குனர் நெடுஞ்செழியன் தலைமை வகித்து பேசினார். வட்டார, துணை வேளாண் அலுவலர்கள், உழவர் ஆர்வலர் குழுவினர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். 

அரசுக் கல்லூரியில் மாணவர் சேர்க்கை  

அறந்தாங்கி, மே 31-புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் தாலுகா பெருநாவலூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர் சேர்க்கை கலந்தாய்வு ஜூன் 3ம் தேதி தொடங்க இருக்கிறது. அன்று காலை 9 மணிக்கு அனைத்து பாடப்பிரிவுகளிலும் மாற்றுத்திறனாளிகள், விளையாட்டு, முன்னாள் ராணுவத்தினர், தேசிய மாணவர் படை ஆகியோருக்கு சிறப்பு ஒதுக்கீட்டில் மாணவர் சேர்க்கையும் நடைபெற உள்ளது. இதைதொடர்ந்து அனைத்து பாடப்பிரிவு மாணவ- மாணவிகளுக்கும் கலந்தாய்வு நடைபெற உள்ளதாக கல்லூரி முதல்வர் ஜெசுகந்தி தெரிவித்துள்ளார். மேலும் ரம்ஜான் விடுமுறை அன்று கலந்தாய்வு நடைபெறாது. 

இப்தார் நோன்பு நிகழ்ச்சி 

கும்பகோணம் மே 31-கும்பகோணத்தில் சிட்டி யூனியன் வங்கி சீமாட்டி சில்க்ஸ் ஆகியவை இணைந்து இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கும்பகோணம் இஸ்லாமிக் சோசியல் வெல்பர் அசோசியேஷன் தலைவர் அப்துல் சுபஹான் தலைமை தாங்கினார் சீமாட்டி சில்க்ஸ் நிர்வாக இயக்குனர் நசீர் அகமது ரெடிமேட்ஸ் நிர்வாக இயக்குனர் முகம்மது ஜியாவுதீன் டான் அகடாமி பள்ளி தாளாளர் ஹாஜாமைதீன் அல் அமீன் பள்ளி  தாளாளர் கமாலுதீன் ஜவுளி வியாபாரிகள் சங்க தலைவர் ஜர் ஜிஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.நிகழ்ச்சியில் கும்பகோணம் ஆர்டிஓ உதவி ஆட்சியர் வீராச்சாமி நகராட்சி ஆணையர் ஜெகதீசன் கலந்து கொண்டனர்காசியம்மாள் ஜாமியா மஸ்ஜித் இமாம் கேஎம் அப்துல் அஜீஸ் கிராஅத் சிறப்புரை ஆற்றினார் தொழிலதிபர்கள் தங்க விலாஸ் சாதிக் அலி  கிரேட் வே ஜாகிர் உசேன் பள்ளி முதல்வர் அப்துல் சுபான் பேராசிரியர் நஜிபுதீன் கிஸ்வா நிர்வாகிகள் சலீம் ஜாகிர் உசேன் ஏஆர்கே அசாருதீன் மற்றும் சிட்டி யூனியன் வங்கி  நிர்வாகி பாலசுப்ரமணியன் உட்பட பலர் கலந்து கொண்டனர். எஸ்மோகன் நன்றி கூறினார். 

வீட்டு வசதி வாரிய ஒதுக்கீடுதாரர்களுக்கு சலுகை

தஞ்சாவூர் மே.31-தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய திட்டங்களில் மாதாந்திர தவணை முறையில் ஒதுக்கீடு பெற்றுள்ள ஒதுக்கீட்டுதாரர்களுக்கு தவணை செலுத்தத் தவறியதற்கான அபராத வட்டி மற்றும் வீட்டின் விலை முதலாக்கத்தின் மீதான வட்டியை முழுவதுமாகவும், நிலத்தின் இறுதி விலை வித்தியாசத்தின் மீதான வட்டியை ஆண்டுக்கு 5 மாதங்கள் தள்ளுபடி செய்து வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி வாரியத்தால் அரசாணை பிறப்பிக்கப்பட்டு 2019 பிப்.21ம் தேதி உத்தரவிடப்பட்டுள்ளது. தஞ்சாவூர், பட்டுக்கோட்டை, கும்பகோணம், திருவாரூர், மன்னார்குடி, நாகப்பட்டினம், தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழக வளாகம் ஆகிய வீட்டு வசதி திட்டங்களின் ஒதுக்கீடுதாரர்கள், வட்டி தள்ளுபடி போக மீதியுள்ள நிலுவைத் தொகையை ஒரே தவணையில் செலுத்தி, வீட்டுக்கான மட்டும் மற்றும் வீட்டு மனைக்கான விற்பனை பத்திரத்தை பெற்றுக் கொள்ளலாம். இந்த வட்டி சலுகை 2020 மார்ச் 31-ம் தேதி வரை மட்டுமே நடை முறையில் இருக்கும் என தஞ்சாவூர் வீட்டு வசதி பிரிவு செயற்பொறியாளர் ஆர்.ரெங்கநாதன் தெரிவித்துள்ளார். 

;