tamilnadu

img

குன்னம் கிராமச் சாலையை சீரமைக்க கோரிக்கை

சீர்காழி, ஜூன் 7- சீர்காழி அருகே புத்தூரிலிருந்து வடரெங்கம் செல்லும் சாலை மற்றும் குன்னம் சாலையின் நடுவே போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள ஜல்லிக் கற்கள் குவியலை அகற்ற கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.  நாகை மாவட்டம் சீர்காழி அருகே புத்தூரிலிருந்து வடரெங்கம் செல்லும் சிமெண்ட் சாலை கடந்த 5 வருடங்களுக்கு முன்பு அமைக்கப்பட்டது. அப்பகுதியில் கொள்ளிடம் ஆற்றில் இயங்கி வந்த மணல் குவாரிக்கு அடிக்கடி லாரிகள் சென்று மணல் ஏற்றி வந்ததால் சாலையின் நடுப்பகுதியில் பள்ளம் இருந்து வந்தது. இந்தப் பள்ளத்தால் இருசக்கர வாகனத்தில் செல்வோர் விபத்தில் சிக்கினர். இதில் பலருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இந்நிலையில் சாலையின் நடுவே உள்ள பள்ளத்தை சரி செய்வதற்காக குன்னம் கிராமத்தில் சிமெண்ட் சாலையின் நடுவே நெடுஞ்சாலைத் துறையால் கருங்கல் ஜல்லிகளும், எம்-சாண்டு செயற்கை மணலும் கொட்டப்பட்டது. ஆனால் பத்து நாட்கள் ஆகியும் எந்த பணியும் மேற்கொள்ளப்படாததால் கருங்கல் ஜல்லி குவியல் சாலையின் நடுவிலேயே கிடக்கிறது. இதனால் சைக்கிளில் செல்லும் பள்ளி மாணவர்களும், மோட்டார் பைக்கில் செல்வோர்களும் கருங்கல் ஜல்லி இடறி கீழே விழுந்து காயமடைகின்றனர்.  இதுகுறித்து எருக்கூர் முன்னாள் ஊராட்சித் தலைவர் முத்துகுபேரன் கூறுகையில், புத்தூரிலிருந்து வடரெங்கம் செல்லும் சிமெண்ட் சாலையின் நடுவில் சுமார் அரை அடி ஆழத்திற்கு சில இடங்களில் பள்ளம் ஏற்பட்டது. ஆனால் குன்னம் கிராமத்தில் சாலையின் நடுவே உள்ள பள்ளத்தை சரி செய்வதற்காக சாலையின் நடுவே கருங்கல் ஜல்லி கொட்டப்பட்டுள்ளது. இதனால் நடந்து செல்வோர்களும் இடறி கீழே விழுகின்றனர்.   சாலையில் கருங்கல் ஜல்லி குவியல் மற்றும் எம்சாண்ட் மணல் 10 நாட்களாக அப்படியே போக்குவரத்துக்கு இடையூறாக உள்ளது. எனவே போக்குவரத்துக்கு இடையூறாக சாலையின் நடுவே உள்ள ஜல்லி குவியலை அகற்றி, சாலையில் உள்ள பள்ளத்தை சரி செய்யவும் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். 

;