பெரம்பலூர் அருகே மடிக்கணினி கேட்டு மாணவர்கள் மறியல்
பெரம்பலூர், ஜூலை 13- பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் கடந்த 2016-17 மற்றும் 2017-18 ஆம் கல்வி ஆண்டில் 12 ஆம் வகுப்பு படித்த மாணவ, மாணவிகளுக்கு அரசு சார்பில் வழங்கப்படும் இலவச மடிக்கணினி இதுவரை வழங்கவில்லை. இந்நிலையில் நிகழாண்டு 12-ம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு மடிக்கணினி வழங்கப்பட்டு வருகிறது. இதனால் அதிருப்தியடைந்த மாவட்டத்தின் பல பகுதிகளில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளிகளில் படித்த முன்னாள் மாணவர்கள் மடிக்கணினி கேட்டு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் வெள்ளியன்று பாடாலூர் அரசு பள்ளியில் படித்த முன்னாள் மாணவர்கள் திருச்சி- சென்னை நெடுஞ்சாலையிலும், எளம்பலூர் அரசு மேல்நிலைப்பள்ளி முன்னாள் மாணவர்கள் பெரம்பலூர்- எளம்பலூர் சாலையிலும் மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் மற்றும் கல்வித்துறை அதிகாரிகள், போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தி போராட்டத்தை கைவிடச் செய்தனர்.
காரில் தப்பிக்க முயன்ற கஞ்சா கும்பலை துப்பாக்கியால் சுட்டு மடக்கிய காவல்துறை
பெரம்பலூர், ஜூலை 13- வெளிமாநிலத்தில் இருந்து தமிழகத்துக்கு காரில் கஞ்சா கடத்தி வருவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில், திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பெரம்பலூர் மாவட்டம் திருமாந்துறை சுங்கச்சாவடியில் சனிக்கிழமை தனிப்படையினர் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது, அவ்வழியே வந்த காரை வழிமறிக்க முயன்ற போது காவலர்கள் மீது மோதி விட்டு காரில் வந்த நபர்கள் தப்ப முயன்றதோடு, காரில் இருந்த நபர் காவலர்களை தாக்குவதற்காக ஆயுதங்களை எடுக்க முயற்சித்ததாக தெரிகிறது. இதையறிந்த காவலர்கள், துப்பாக்கியால் சுட்டு காரை வழிமறித்து நிறுத்தினர். இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. பின்னர் காரில் இருந்த இரண்டு நபர்களையும் பிடித்து, காரை திறந்து சோதனையிட்டதில் மூட்டை, மூட்டையாக கஞ்சா இருந்தது கண்டறியப்பட்டது. இதையடுத்து அருகில் உள்ள மங்கலமேடு காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரித்ததில் அவர்கள், மதுரை காமராஜபுரம் முத்து மகன் படைமுனியசாமி(29), ராமநாதபுரம் மாவட்டம், சிறைமீட்டான் மகன் வழிவிடு முருகன்(19) என்பதும், ஆந்திர மாநிலம், காக்கிநாடா பகுதியிலிருந்து மதுரைக்கு கஞ்சா கடத்திச் சென்றதும் தெரியவந்தது. இதுதொடர்பாக மங்கலமேடு காவலர்கள் வழக்குப் பதிந்து, முனியசாமி, வழிவிடு முருகன் ஆகியோரை கைது செய்தனர். மேலும், கஞ்சா கடத்துவதற்கு பயன்படுத்தப்பட்ட கார் மற்றும் பல லட்சம் மதிப்புள்ள 180 கிலோ கொண்ட கஞ்சா மூட்டைகளையும் பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட இருவர் மீதும், மதுரை மற்றும் ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் வழக்குகள் நிலுவையில் உள்ளன. நடைபெற்ற மக்களவைத் தேர்தலின் போது மதுரையில் நிகழ்ந்த வழக்குரைஞர் கொலை வழக்கில் கைதாகி, உயர்நீதிமன்றத்தில் ஜாமீன் பெற்று வெளியே வந்துள்ளதும் தெரியவந்துள்ளது. தற்போது வெளி மாநிலங்களிலிருந்து தமிழகத்துக்கு கஞ்சா கடத்துவதில் ஈடுபட்டுள்ளனர் என காவல்துறையினர் தெரிவித்தனர்.