சென்னை, ஜூன் 24 - தாம்பரத்தை மையப்படுத்தி தொழிலாளர் நலத்துறை துணை ஆணையர், முறைசாரா நலவாரிய அலுவலகம் அமைக்க வேண்டும் என்று சிஐடியு வலியுறுத்தி உள்ளது. சிஐடியு தென்சென்னை மாவட்ட 14வது மாநாடு ஜூன் 22, 23 ஆகிய தேதிகளில் சைதாப்பேட்டையில் நடை பெற்றது. இந்த மாநாட்டில், நிறை வேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு: தொழிற்சங்கம் அமைத்தால் பழிவாங்கப்படும் விவகாரத்தில் அரசு தலையிட்டு தீர்வு காண வேண்டும், பேக்குவரத்து துறையில் நடை முறைப்படுத்தப்படும் 12 மணி நேர வேலைமுறையை ரத்து செய்ய வேண்டும்,
பிற்பகல் பணியோடு இரவு நேரமும் சேர்த்து 16 மணி நேரம் பேருந்துகளை இயக்க நிர்பந்திப்பதை கைவிட வேண்டும், வரவுக்கும் செலவுக்குமான வித்தியாசத்தொகை யை ஈடுகட்ட பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும், மின்வாரியம் போன்றே போக்குவரத்து ஓய்வூதியர்களுக்கு பட்ஜெட்டில் நிதிஒதுக்கீடு செய்ய வேண்டும். மின்வாரிய ஒப்பந்த ஊழியர்களுக்கு தினக்கூலி வழங்குவ தோடு, பணிநிரந்தரம் செய்ய வேண்டும், மருந்து மற்றும் விற்பனை பிரதிநிதிகளுக்கான குறைந்தபட்ச ஊதிய உத்தரவுக்கு எதிரான தடையை நீக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும், பெட்ரோலியப் பொருட்களை ஜிஎஸ்டிக்குள் கொண்டு வர வேண்டும். 6 ஆண்டுகளாக உயர்த்தப்படாமல் உள்ள ஆட்டோ கட்டணத்தை மாற்றி அமைக்க வேண்டும், கட்டுமான நலவாரிய செயல்பட்டையும் பணப் பயன்களையும் தற்காலத்திற்கு ஏற்ப மாற்றி அமைக்க வேண்டும்,
உள்ளாட்சி தற்காலிக, ஒப்பந்த தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதிய அரசாணையை அமல்படுத்த வேண்டும், இ-சேவை பணிகளில் உள்ள தொழிலாளர்களை பணி நிரந்த ரம் செய்ய வேண்டும், சலவைத் தொழி லாளர்களின் இஸ்திரி வண்டிகளுக்கு லைசன்ஸ் வழங்க வேண்டும், பழைய சலவை நிலையங்களை புதுப்பிக்க வேண்டும், வீட்டுவேலை தொழிலா ளர்களுக்கு ஒரு மணி நேரத்திற்கு 50 ரூபாய் ஊதியம் நிர்ணயிக்க வேண்டும், 480 நாட்கள் பணி முடித்த கூட்டுறவு ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும், மருத்துவமனை ஊழியர்களில் தற்காலிக, காண்ட்ராக்ட் முறையை கைவிட வேண்டும், டாஸ்மாக் ஊழியர்களை பணிநிரந்தரம் செய்து காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். அங்கன்வாடி ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாநாட்டை வாழ்த்தி சங்கத்தின் மாநிலத் தலைவர் அ.சவுந்தரராசன், வடசென்னை மாவட்டச் செயலாளர் சி.திருவேட்டை ஆகியோர் பேசினர். துணைப் பொதுச் செயலாளர் வி.குமார் மாநாட்டை நிறைவு செய்து பேசினார். எம்.பாண்டியன் நன்றி கூறினார்.
நிர்வாகிகள்
சங்கத்தின் தலைவராக எம். சந்திரன், செயலாளராக பா. பாலகிருஷ்ணன், பொருளாளராக ஏ. பழனி ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.