tamilnadu

அதிமுக எம்எல்ஏக்கள் 3 பேருக்கு நோட்டீஸ்

சென்னை,ஏப்.30-அமமுக கட்சி பொதுச்செயலாளர் தினகரனுக்கு ஆதரவாக உள்ளதாக அதிமுகவைச் சேர்ந்த 3 சட்டமன்ற உறுப்பினர்களுக்கு விளக்கம் கேட்டு சபாநாயகர் தனபால் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.தினகரனுக்கு ஆதரவாகவும் கட்சிக்கு எதிராகவும் செயல்படுவதாக அதிமுக எம்எல்ஏக்கள் மூன்று பேர் மீது நடவடிக்கை எடுக்குமாறு, அதிமுக கொறடா ராஜேந்திரன் புகார் அளித்திருந்தார். மூன்று பேரும் அமமுகவில் பதவி வகிப்பதாகவும் குற்றம்சாட்டியிருந்தார்.இதையடுத்து, அறந்தாங்கி எம்எல்ஏ ரத்தின சபாபதி, விருதாச்சலம் எம்எல்ஏ கலைச்செல்வன், கள்ளக்குறிச்சி எம்எல்ஏ பிரபு ஆகியோர் அதிமுக எம்எல்ஏக்களாக இருந்து கொண்டு டிடிவி தினகரனுக்கு ஆதரவாக செயல்பட்டுக் கொண்டிருப்பது குறித்து விளக்கம் கேட்டு சபாநாயகர் தனபால் அவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

நம்பிக்கையில்லா தீர்மானம்:திமுக மனு

இந்நிலையில் சபாநாயகர் தனபால் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவர திமுக சார்பில் செவ்வாயன்று மனு அளிக்கப்பட்டுள்ளது.எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலினின் மனுவை திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, சட்டப்பேரவை செயலாளர் சீனிவாசனிடம் அளித்தார்.

தலைமைத் தேர்தல் அதிகாரி 

3 சட்டமன்ற உறுப்பினர்கள் மீது நடவடிக்கை எடுக்க சபாநாயகரிடம் அரசு கொறடா மனு அளித்த விவகாரம் தொடர்பாக புகார் அளிக்கப்பட்டால் தேர்தல் நடத்தை விதிமீறல் குறித்து ஆய்வு செய்யப்படும் என்று தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யப்பிரத சாகு தெரிவித்துள்ளார்.



;