கும்பகோணம், ஜூன் 16- தீண்டாமை ஒழிப்பு முன்னணி யின் மாவட்டத் தலைவர் அபிம ன்னன், மாவட்டச் செயலாளர் சின்னை.பாண்டியன் ஆகியோர் கூறியதாவது: தஞ்சை மாவட்டம் பாபநாசம் ஒன்றியம் மணலூர் கிராமத்தை சேர்ந்த தலித் சமூகத்தை சேர்ந்த பிரசாந்த் (22), அருகில் உள்ள தெருவைச் சேர்ந்த 17 வயது பெண்ணும் காதலித்துள்ளனர். அப்பெண் வீட்டில் காதலுக்கும் எதிர்ப்பு தெரிவித்து பெண்ணை அடித்து துன்புறுத்தியதால் கடந்த செவ்வாய் அதிகாலை வீட்டை விட்டு இருவரும் வெளியூர் சென்று விட்டனர். பெண்ணின் பெற்றோர் அய்யம்பேட்டை காவல் நிலையத்தில் தன் பெண்ணை கடத்தியதாக புகார் தெரிவித்துள்ளனர். அய்யம்பேட்டை காவல் நிலையத்தினர் மற்றும் கிராமத்தினர் பிரசாந்த் வீட்டினரை மிரட்டியுள்ளனர். இதற்கிடையில் காதலர்கள் சமயபுரம் கோவிலில் திருமணம் செய்து கொண்டனர். பெண் வீட்டார் தகவலறிந்து ஆசை வார்த்தை பேசி காரில் போய் காதலர்களை அழைத்து கொண்டு வந்து திருவையாறு அருகே பண வெளி வென்னாற்றாங்கரையில் வைத்து பிரசாந்தை பெண்ணின் தந்தை மற்றும் உறவினர்கள் மிக கொடூரமாக படுகொலை செய்துள்ளனர். இக்கொடூரமான படுகொலையை தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் தஞ்சை மாவட்டக் குழு வன்மையாக கண்டிகிறோம் குற்றவாளிகளை காவல்துறை கைது செய்துள்ளது வரவேற்கத்தக்கது. மேலும் குற்றவாளிகளை தப்பவிடாமல் தண்டனை பெற்றுத் தர வேண்டும். படுகொலை செய்யப்பட்ட பிரசாந்த் குடும்பத்திற்கு முதலமைச்சர் 15 லட்சம் நிவாரண நிதியும், ஒருவருக்கு அரசு வேலையும் வழங்கிட நடவடிக்கை எடுத்திட வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.