tamilnadu

img

விண்ணில் ஏவப்பட்ட நீர் செயற்கைகோள்: கரூர் அரசுப் பள்ளி மாணவர்கள் சாதனை

கரூர், செப்.14- காஞ்சிபுரம் மாவட்டம் சிறுசேரி, ஸ்பேஸ் போர்ட் இந்தியா ஏவுதளத்தில் இருந்து ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா நிறுவனம் மூலம் தமிழக அளவில் 12 அரசுப் பள்ளி மாணவர்கள் தயாரித்த 360 கிராம் எடை கொண்ட சிறிய ரக செயற்கைகோளை ஹீலியம் வாயு நிரப்பப்பட்ட ராட்சத பலூன் ராக்கெட்டில் ஆகஸ்டே 11-ம் தேதி காலை 11.25 மணிக்கு விண்ணில் வெற்றிகரமாக செலுத்தப்பட்டது. இதில் கரூர் மாவட்டம் வெள்ளியணை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள், வழிகாட்டி ஆசிரியர் பெ.தனபால் வழிகாட்டலால் தயாரிக்கப்பட்ட 30 கிராம் எடையில் நீர் செயற்கைகோள்- 30 தேர்வு பெற்றிருந்தது. விண்ணில் செலுத்தப்பட்ட 28 வினாடிகளில் செயற்கைகோள் கண்ணின் பார்வையிலிருந்து மறைந்த வேகத்தில் 35 கி.மீ, அதாவது ஒரு லட்சத்து பன்னிரெண்டாயிரம் அடி உயரம் விண்ணில் இலக்கை சென்றடைந்தது. மூன்றரை மணி பயணத்திற்கு பின் வளிமண்டல அழுத்தம், வெப்ப நிலை வேறுபாடு காரணமாக ஹீலியம் வாயு நிரப்பப்பட்ட பலூன் வெடித்ததும், பாராசூட் திறக்கப்பட்டு செயற்கைகோள்கள் புவியின் ஈர்ப்பு விசையால் கீழ் நோக்கி இறக்கப்பட்டு பாதுகாப்பான முறையில் ஏவுதளத்தில் இருந்து 170 கி.மீ அப்பால் வேலூர் மாவட்டத்தில் புவியை வந்தடைந்தது.  இந்நிகழ்வை தரைக் கட்டுப்பாட்டு அறையிலிருந்து கண்காணித்த ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா நிறுவனம் மீண்டும் செயற்கைகோளை கைப்பற்றி, தொடர் ஆய்வுக்காக நீர் செயற்கைகோள்-30, கரூர் மாவட்டம் வெள்ளியணை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு கடந்த 11-ம் தேதி அனுப்பி வைத்தது. நீர் செயற்கைகோள்-30 தயாரித்து, சிறுசேரி சென்று விண்ணில் வெற்றிகரமாக ஏவிய நிகழ்வை நேரில் பார்வையிட்டு வந்த  மாணவர்கள் கோ.சுகந்த், மு.விஷ்ணு, கா.பசுபதி, சு.ஜெகன், சி.நவீன்குமார் ஆகிய மாணவர்கள், ஆசிரியர் பெ.தனபால் உடன் கரூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சி.முத்துக்கிருஷ்ணன்,  கரூர் மாவட்ட கல்வி அலுவலர் சா.சிவராமன் ஆகியோரை நேரில் சந்தித்து வாழ்த்துப் பெற்றனர்.  மேலும் பள்ளி தலைமை ஆசிரியர்(பொ) இரா,கி.சாந்தி, பள்ளி கட்டிடக் குழுத் தலைவர் வீ,இராமநாதன், பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் அ.கருப்பண்ணன், முன்னாள் மாணவர் சங்க செயலாளர் அ.கிருஷ்ணன் மற்றும் ஊர் பொதுமக்கள், சாதனை மாணவர்களை பாராட்டினர்.

;