tamilnadu

ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் மீது  பொய் வழக்கு ரத்து செய்ய வலியுறுத்தல்

திருச்சிராப்பள்ளி, ஜன.5- தமிழ்நாடு பட்டதாரி, முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் மாநில பொதுக்குழு கூட்டம் ஞாயிறன்று திருச்சியில் நடைபெற்றது. மாநிலத் தலைவர் மகேந்திரன் தலைமை வகித்தார். மாநில பொதுச்செயலாளர் சுந்தரமூர்த்தி ஆண்டறிக்கை வாசித்தார். வரவு – செலவு கணக்குகளை மாநில பொருளாளர் ஜான்உபால்ட் தாக்கல் செய்தார். 2019-ம் ஆண்டு ஜனவரி மாதம் நடைபெற்ற ஜாக்டோ–ஜியோ போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள் - அரசு ஊழியர்கள் மீது புனையப்பட்டுள்ள பொய் வழக்குகளையும், துறை ரீதியான நடவடிக்கையையும் (17பி) விரைந்து ரத்து செய்ய வேண்டும். இடைநிலைக் கல்வியியல் கற்றல் - கற்பித்தல் பணி சிறப்புற்று கற்றல் அடைவுத்திறன் உயர்ந்திடவும், கல்வித்துறை சிறந்து விளங்கிடவும் 6 முதல் 10 வகுப்பு வரை கற்பித்தல் பணிக்கு குறைந்தது 8 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை உறுதிப்படுத்திட வேண்டும்.  2004 ஆம் ஆண்டு முதல் பல்வேறு காலக்கட்டங்களில் தொகுப்பூதிய நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்களது பணிக்காலத்தை நியமன நாள் முதலே பணிவரன்முறை செய்ய வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.  மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர். முன்னதாக மாநில துணைத்தலைவர் ஜேம்ஸ் வரவேற்றார். திருச்சி மாவட்டச் செயலாளர் ராகவன் நன்றி கூறினார்.

;