தஞ்சாவூர், மே 29- தஞ்சை மாவட்டம் சேதுபாவா சத்திரம் கடலோரப் பகுதிகளில், மீன் பிடித் தடைக்காலத்தில் விசைப்படகு கள் மராமத்து பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. ஆண்டுதோறும் மீன் இனப் பெருக்க காலம் என அரசு அறிவித்து ஏப்ரல் 14 நள்ளிரவு முதல் ஜூன் 14 நள்ளி ரவு வரை 61 நாட்களுக்கு விசைப்பட குகள் கடலுக்கு மீன் பிடிக்கச் செல்ல தடை விதித்து வருகிறது. இந்த ஆண்டு கொரோனா ஊரடங்கால் மீன்பிடி தடைக்காலம் தொடங்குவதற்கு முன்பாகவே கடந்த மார்ச் மாதம் 24 தேதி முதல் மீனவர்களும் கடலுக்கு செல்லவில்லை. ஆகவே ஊரடங்கு நாட்களை கணக்கில் கொண்டு, மே.31 ஆம் தேதி யுடன் 47 நாட்களில் ரத்து செய்து கடலுக்கு செல்ல அனுமதி அளிக்கப் பட்டுள்ளது. இதில் தஞ்சை மாவட்டம் சேதுபாவாசத்திரம், மல்லிப்பட்டினம், கள்ளிவயல்தோட்டம் ஆகிய பகுதி களில் கஜா புயலுக்கு முன் சுமார் 246 விசைப்படகுகள் இருந்தன. ஆனால் தற்போது 146 படகுகள் மட்டுமே உள்ளன.
தற்போது மீன்பிடி தடைக்காலம் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில் இப்பகுதியில் உள்ள குறைந்த அளவு விசைப்படகுகளையும் மராமத்து பார்க்கும் பணிகளில் மீனவர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். மேலும் ஊரடங்கால் தளவாட சாமான்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளதால் படகுகளை பழுது நீக்கம் செய்வதற்கு 5 லட்சம் முதல் 20 லட்சம் ரூபாய் வரை செல வழிக்கப்படுவதாக மீனவர்கள் கூறுகின்றனர். இதுகுறித்து விசைப்படகு மீன வர்கள் கூறியதாவது, “படகுகள் தினந்தோறும் கடலுக்கு மீன் பிடிக்க சென்றால் சிறுசிறு வேலைகளை அவ்வப்போது செய்து தொழில் நடை பெற்று வரும். அதே சமயம் தற்போது 70 நாட்களுக்கு மேல் மீன்பிடி தொழி லுக்குச் செல்லாமல், ஒரே இடத்தில் நிறுத்தி வைத்திருந்ததால் முழுமையாக மராமத்து பணிகள் செய்ய வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
சாதாரணமாக ஒரு விசைப்படகை கரையில் ஏற்றி சுத்தம் செய்து சில்லரை வேலைகள் பார்த்து வர்ணம் பூசி கடலுக்கு செல்வதற்கு மட்டும் குறைந்த பட்சம் 4 லட்சம் ரூபாய் வரை செலவா கிறது. கஜா புயலில் சேதமடைந்து அரைகுறையாக வேலை பார்த்து கடலுக்கு சென்று வந்த படகுகள் எல்லாம் தற்போது முழுமையாக மராமத்து பணிகள் பார்க்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. புதுப்படகின் விலை 20 முதல் 40 லட்சம் ரூபாய் வரை உள்ளது. தற்போது விலைவாசிகளுக்கு ஏற்ப தச்சுப்பணி தினக்கூலி 2000 முதல் 2500 ரூபாயாக உள்ளது. பலகை 1 கன அடி 500 முதல் 700 ரூபாயாகவும், இணைப்புக்கட்டை 2000 முதல் 2500 ரூபாயாகவும் உள்ளது. மட்டி அடித்து பைபர் தடவுவதற்கு 2 லட்சம் ரூபாயும் வர்ணம் பூச 50 ஆயிரம் ரூபாயும் தேவைப்படுகிறது. முழு திருப்திகரமாக படகுகளை மராமத்து பார்ப்பதற்கு 5 லட்சம் முதல் 20 லட்சம் ரூபாய் வரை தேவைப்படுகிறது. நலிந்து வரும் மீன்பிடி தொழிலை பாதுகாக்க தடைவிதி காலங்களில் மராமத்து பணிகளுக்காக அரசு நிதி உதவி அளிக்க வேண்டும் என்றனர்.