tamilnadu

img

புற்றுநோயை வென்றவர்களின் மறுவாழ்வு தின நிகழ்ச்சி

திருச்சிராப்பள்ளி, ஜூன் 2-புற்றுநோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து தொடர் சிகிச்சை கொடுப்பதன் மூலம் குணப்படுத்த முடியும்.இதுகுறித்து சில்வர்லைன் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை புற்றுநோய் அறுவை சிகிச்சை நிபுணர் செந்தில் குமார் நிருபர்களிடம் கூறியதாவது: புற்றுநோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து தொடர் சிகிச்சை அளிப்பதன் மூலம் குணப்படுத்த முடியும். இன்றளவில் உலகம் முழுவதும் தோராயமாக 32 மில்லியன் புற்றுநோயாளிகள் நோயை வென்று மறுவாழ்வு பெற்று இவ்வுலகில் வெற்றிகரமாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். 26 நவம்பர் 2004 லான்செட் என்ற மருத்துவ இதழ் வெளியிடப்பட்ட தகவலின்படி இந்தியாவில் புற்று நோய் குணமடையும் சதவீதம் மற்ற நாடுகளை ஒப்பிடும் பொழுது 50 சதவீதம் குறைவாகவே உள்ளது என்று கண்டறியப்பட்டுள்ளது. இதன் முக்கிய காரணமாக புற்றுநோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறியாமல் இருத்தல் மற்றும் தொடர் சிகிச்சை மேற்கொள்ளாமல் இருத்தலே ஆகும். இந்நிலை மாறவேண்டுமானால் புற்று நோய் பற்றிய விழிப்புணர்வு நமது சமுதாயத்திற்கு மிகவும் அவசியமாகிறது என்றார்.இதனை தொடர்ந்து திருச்சி இந்திய மருத்துவ சங்கம் கூட்ட அரங்கில் புற்றுநோயை வென்றவர்களுக்கான மறுவாழ்வு தின நிகழ்ச்சி நடைபெற்றது. ஜி.வி.என்.மருத்துவமனை முதல்வர் ஜெயபால் புற்றுநோய் மருந்தியல் நிபுணர் அருண்சேஷாசலம், இந்திய மருத்துவ மன்ற முன்னாள் தேசிய துணைத்தலைவர் டாக்டர் அஷ்ரப் ஆகியோர் சிறப்புரையாற்றினர். புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை மூலம் வென்றவர்கள் 250-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். புற்றுநோய் அறுவை சிகிச்சை நிபுணர் பாலாஜி நன்றி கூறினார்.