tamilnadu

img

இலால்குடி அருகே தேவேந்திர குல வேளாளர் மக்களின் வழிபாட்டு உரிமை பறிப்பு.... காவல்துறையும் சாதி ஆதிக்க சக்திகளும் கட்டவிழ்த்துவிட்ட கொடூரத் தாக்குதல்.... சிபிஎம் கடும் கண்டனம்....

 திருச்சி:
திருச்சி மாவட்டம் இலால்குடி அருகே அன்பில் கிராமத்தில் தேவேந்திர குல வேளாளர் சமூக மக்களின் வழிபாட்டு உரிமையை பறித்ததோடு மட்டுமின்றி, அவர்கள் மீது காவல்துறையும் சாதி ஆதிக்க சக்திகளும் கொடூரமான தாக்குதலை கட்டவிழ்த்துவிட்ட சம்பவம் நடந்துள்ளது. இதுதொடர்பான புகார்கள் இருந்தும் திருச்சி மாவட்ட நிர்வாகம் கைகட்டி வேடிக்கை பார்த்துள்ளது. இதுகுறித்த விபரம் வருமாறு:

திருச்சி மாவட்டம் இலால்குடி ஒன்றியத்தில் அன்பில்,  மங்கம்மாள்புரம்,  சங்கமராஜபுரம்,  ஆதிகுடி,  கொன்னக்குடி உள்ளிட்ட 5 க்கும் மேற்பட்ட ஊராட்சிகளில் வசிக்கும் மக்கள் ஆச்சிராம வள்ளியம்மன் கோவிலில் வழிபாடு நடத்தி வருகின்றனர். அம்மன் வீதி உலா அனைத்து சமூக மக்களின் வீதிகளிலும் நடைபெற்று வந்துள்ளது.  இதனை தடுக்கும் விதமாகசாதி ஆதிக்க சக்திகள் இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகளை பயன்படுத்திதேவேந்திரகுல வேளாளர் மக்களின் தெருக் களுக்கு அம்மன் வீதி உலா வருவதை தடுக்கும் நோக்கத்தோடு தடை உத்தரவை பிறப்பித்து திருவிழா நடத்த ஏற்பாடு செய்துள்ளனர். இதை அறிந்து, 1000 குடும்பங்களுக்கு மேல் வசிக்கும்தேவேந்திரகுல வேளாளர் வீதிகளுக்கு அம்மன்வீதி உலா வரவேண்டும் என்று கூறி இந்து சமயஅறநிலைத்துறையின் இணை ஆணையர் மற்றும் கோயில் செயல் அலுவலர் ஆகியோரிடம் முறையாக முறையீடு செய்துள்ளனர். இவற்றைக் கவனத்தில் கொண்ட கோவில் செயல் அலுவலர், சட்டம் - ஒழுங்கு பாதிப்பு ஏற்படும் சூழல் இருப்பதால் தற்போது நடக்க இருக்கும் திருவிழாவை நிறுத்துவதாக அறிவித்தார். 

உரிமைகள் பறிப்பு
இத்தகைய சூழலில் இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையரின் பரிந்துரையின் பெயரில் தக்காரின் உத்தரவைப் பெற்று மார்ச் 9 செவ்வாயன்று திருவிழா நடத்த சாதி ஆதிக்கசக்திகள் முடிவு செய்தனர். இந்த அடிப்படையில் அம்மன் வீதியுலா தேவேந்திரகுல வேளாளர் மக்கள் வீதிகளுக்கு வருவது தடை செய்யப்படுவதோடு அவர்கள் பூஜை செய்வது, கிடா வெட்டுவது, அவர்களிடம் வரி வாங்குவது உள்ளிட்ட அனைத்து உரிமைகளையும் சாதி ஆதிக்க சக்திகளும் இந்து சமய அறநிலையத்துறை தக்காரும் திட்டமிட்டு பறித்துள்ளனர். இதுகுறித்து திருச்சி மாவட்ட ஆட்சியருக்கும்மாவட்ட காவல்துறைக்கும் இலால்குடி வருவாய் கோட்டாட்சியருக்கும் தேவேந்திரகுல வேளாளர் மக்கள் முறையீடு செய்து தங்களுக்கு சமமான வழிபாடு உரிமை வழங்கி திருவிழா நடத்த வேண்டும் என்று கோரிக்கைவிடுத்தனர்.

கோவில் முன்பு மறியல்
இதனை வலியுறுத்தி செவ்வாய் மாலை 4 மணி முதல் புதன் விடியற்காலை  5-30  மணி வரை அன்பில் கிராம சிவன் கோவில் முன்பு மறியல்போராட்டம் நடத்தினர்.  மறியல் போராட்டத்தில்ஈடுபட்ட தேவேந்திரகுல வேளாளர் மக்களோடு இலால்குடி  வருவாய் கோட்டாட்சியர் அவர்களும், வருவாய் வட்டாட்சியர், மாவட்ட காவல்துறை துணை கண்காணிப்பாளர் ஆகியோர் தொடர் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். இந்த பேச்சுவார்த்தையில் அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் அ.பழநிசாமி, தீண்டாமை ஒழிப்பு முன்னணிமாவட்ட தலைவர் டி. ரஜினிகாந்த்  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றிய செயலாளர் சி.ஜெகதீசன் ஆகியோர் கலந்து கொண்டனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் எம்.ஜெயசீலன், மாவட்ட ஆட்சியர்மற்றும் காவல்துறை அதிகாரிகள் கவனத்திற்கு கொண்டு சென்று அன்பில் பகுதியில் நிலவும் அசமத்துவ நிலையை கவனத்தில் கொண்டு உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

கோவிலைப்பூட்டிய அதிகாரிகள்
ஆனாலும் மாவட்ட நிர்வாகம் சமத்துவமாக திருவிழா நடத்த ஒப்புக் கொள்ளவில்லை.  தேவேந்திர குல வேளாளர் சமூகத்தினர் வீதிகளுக்கு சாமி வீதியுலா வராது என்று கோட்டாட்சியர்  பேச்சுவார்த்தையில் தெரிவித்தனர்.  முடிவு எட்டப்படாமல் போராட்டம் தொடர்ந்த நிலையில் வேறுவழியின்றி கோட்டாட்சியர் உத்தரவின் பேரில் புதன் அதிகாலை 5 மணிஅளவில் சிவன் கோவில் பூட்டப்பட்டது. அதற்குப் பிறகு போராட்டத்தை கைவிட்டு மக்கள் கலைந்து செல்லுமாறு கோட்டாட்சியரும் காவல்துறையும் கேட்டுக்கொண்ட அடிப்படையில் போராட்டத்தை கைவிட்டு தேவேந்திரகுல வேளாளர் மக்கள் கலைந்து சென்றனர்.  

பூட்டை உடைத்து சாமி சிலையை தூக்கிய சாதி ஆதிக்க சக்திகள்
இந்நிலையில் புதன் காலை 9 மணிக்கு மேல் 500 க்கும் மேற்பட்ட உயர்சாதி இந்துக்கள்ஆர்டிஓ உத்தரவால் பூட்டப்பட்ட,  சிவன்கோவில் பூட்டை உடைத்து ஆச்சிராம வள்ளி அம்மன் சிலையை எடுத்துக்கொண்டு திருவிழா நடத்துவதற்காக கோவிலை விட்டு வெளியேகொண்டு சென்றனர்.

காவல்துறை அட்டூழியம் 
இந்த நேரத்தில் தேவேந்திர குல வேளாளர் சமூகத்தை சேர்ந்த இளைஞர்கள் தங்களை புறக்கணித்து திருவிழா நடத்துவதை ஏற்க மறுத்து, சிலையை எடுத்து செல்வதை தடுத்துமறியல் செய்தனர்.  அப்போது காவல்துறை யினர் தேவேந்திரகுல வேளாளர் இளைஞர்கள் மீதும் பெண்கள் மீதும் கண்மூடித்தனமாக தடியடிதாக்குதலைக் கட்டவிழ்த்துவிட்டனர். தடியடிக்குஅஞ்சி தங்களது தெருக்களில் தஞ்சம் புகுந்தவர்கள் மீது காவல் துறையோடு இணைந்து கொண்டு சாதி ஆதிக்க சக்திகளும் வெறி கொண்டு தாக்குதல் நடத்தினர்.

கொலைவெறித் தாக்குதல், சொத்துக்கள் சேதம்
வீட்டுக்குள்ளே ஓடிய இளைஞர்களை பிடித்து சூழ்ந்துகொண்டு கொலைவெறித்தாக்குதல்  நடத்தியதில்  ஸ்ரீராம் என்பவருக்கு மண்டைஉடைந்தது.  மோகன் என்பவருக்கு வாய்கிழிந்து கடுமையாக பாதிக்கப்பட்டு இலால்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.   பத்துக்கும் மேற்பட்ட நபர்களுக்கு மண்டை உடைந்து, கை உடைந்து, வாய் கிழிந்து,கை கால்களில் காயம் ஏற்பட்டு தெருக்களில் விழுந்து கிடந்துள்ளனர்.அதேநேரத்தில் வீடுகளுக்குள் புகுந்த ஆதிக்க சாதியினரும் காவல்துறையும் தேவேந்திர குல வேளாளர்கள் வீடுகளில் இருந்த டிவியை உடைத்தும் தட்டுமுட்டு சாமான்களை உடைத்தும் வீட்டின் கதவை உடைத்தும் கையில்  கிடைத்த பொருள்களை எல்லாம் உடைத்தும் நாசமாக்கியுள்ளனர்.  காவல்துறையும் ஆதிக்க சக்திகளும் கூட்டு சேர்ந்து தேவேந்திர குலவேளாளர் தெருக்களில் நுழைந்து அவர்களுடைய உணவுப் பொருட்கள் உட்பட நாசம் செய்துள்ளனர்.வயல் வெளிகளில் ஓடி ஒளிந்த பெண்களையும் கடுமையாக போலீஸ் தாக்கியுள்ளது.

                                  ******************

வேடிக்கை பார்த்த மாவட்ட நிர்வாகம் : சிபிஎம் கடும் கண்டனம்

இதுதொடர்பாக கண்டனம் தெரிவித்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருச்சி புறநகர் மாவட்டச் செயலாளர் எம்.ஜெயசீலன் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

தேவேந்திரகுல வேளாளர் மக்களின் இறை வழிபாடு உரிமையை நிலைநாட்ட வேண்டிய திருச்சி மாவட்ட நிர்வாகம் சாதி ஆதிக்க சக்திகளுடன் சேர்ந்து கொண்டு வேடிக்கை பார்த்ததாலேயே அன்பில் பகுதியில் சமூக பதற்றமும் விரும்பத் தகாத சம்பவங்களும் நடந்துள்ளன.  இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள், உயர் சாதி இந்துக்களுக்கு ஆதரவாக உத்தரவு வழங்கியதன் பேரில் ஏற்பட்டுள்ள சட்டம் ஒழுங்கு பிரச்சனையில் திருச்சி மாவட்ட நிர்வாகம் உரிய முறையில் அணுகவில்லை. தேவேந்திரகுல வேளாளர் மக்களின் வழிபாட்டு உரிமையை மறுத்த அறநிலையத்துறை அதிகாரிகள் மீது தமிழ்நாடு அரசு உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்துகிறோம். 

தேவேந்திரகுல வேளாளர் மக்கள் சமத்துவமாக இறைவழிபாடு நடத்திட அனுமதிக்காத திருச்சி மாவட்ட நிர்வாகத்தை கண்டிக்கிறோம்.ஆதிக்க சாதியினருடன் கூட்டு சேர்ந்து, தேவேந்திரகுல வேளாளர் மக்களின் தெருக்களில் நுழைந்து வீடுகளுக்குள் புகுந்து அவர்களை தாக்கியதோடு, அவர்களது உடமைகளை நாசமாக்கிய மாவட்ட காவல்துறையை கண்டிக்கிறோம்.தீண்டாமையைக் கடைப்பிடித்து தேவேந்திரகுல வேளாளர் மக்களின் வழிபாட்டு உரிமையை தடுத்ததோடு அவர்கள் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்தியுள்ள ஆதிக்க சக்திகள் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டம் 1989 ன்படி வழக்கு பதிவு செய்து கடும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்துகிறோம்.  தாக்குதலால் பாதிக்கப்பட்ட 15க்கும் மேற்பட்ட  தேவேந்திரகுல வேளாளர் இளைஞர்கள் மீது வழக்கு பதிவு செய்து  சிறையிலடைப்பதை ஏற்க முடியாது. ஆகவே அவர்கள் மீதான வழக்கை திரும்ப பெற வேண்டும்.

தற்போது 144 தடையுத்தரவை பிறப்பித்து தேவேந்திரகுல வேளாளர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் வீடுகளை விட்டு வெளியே வர முடியாமல் சிறை வைக்கப்பட்டுள்ளனர். இதனால் தாக்குதலுக்கு உள்ளானவர்களை சிகிச்சைக்கு கொண்டு செல்ல முடியாமல் அவதிப்படுகின்றனர்.பெட்டிக்கடை உள்ளிட்ட காய்கறி கடைகள் வலுக்கட்டாயமாக மூடப்பட்டதால் உணவுப் பொருட்கள் கிடைக்காமல் தவிக்கின்றனர். ஆகவே 144 தடையுத்தரவை தேவேந்திரகுல வேளாளர் குடியிருப்பு பகுதிகளில் விலக்களித்து அவர்களின் அன்றாட வாழ்க்கையை உறுதி செய்ய வலியுறுத்துகிறோம்.

;