tamilnadu

img

ஆடு மேய்க்கும் சிறுவனை கடத்திய கும்பலுக்கு துணைபோன பயிற்சி டிஎஸ்பி.... நடவடிக்கை கோரி சிபிஎம் கண்டன ஆர்ப்பாட்டம்

திருச்சிராப்பள்ளி:
கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் அருகே அரசக்குடி கிராமத்தில் வசித்து வந்த வேல்முருகன்,  அவரது மகன் சீனிவாசன் ஆகிய இருவரும் மதுரை மாவட்டம் கொட்டாம்பட்டியில் சாமிநாதன் என்பவரிடம் கடந்த 4 வருடங்களாக ஆடு மேய்த்து வந்துள்ளனர்.

அவர்கள் 24 மணி நேரமும் ஆடு மேய்ப்பது, ஆடுகளை காவல்காப்பது, சாமிநாதன் வீட்டு வேலைகளை செய்யவது என நிர்பந்தப்படுத்தி கொத்தடிமையாக பல்வேறுவேலைகளை செய்து வந்துள்ளனர். சரியான உணவும் மருத்துவ வசதியும் கொடுக்கப்படவில்லை.  தங்குவது, ஆடு மேய்ப்பது, உணவு உண்பது அனைத்தும் ஆடுகளுக்கு மத்தியிலேயே இவர்கள் வாழ நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளார்கள். சொல்லும் வேலையை செய்யவில்லை என்றால் கடுமையாக தாக்கப்பட்டுள்ளனர்.பழங்குடி இருளர் சமூகத்தைச்சேர்ந்த தந்தையும், மகனும் செய்வதறியாது ஆட்டு மந்தைகளோடு சேர்ந்து வாழ்ந்திருக்கிறார்கள். நான்கு வருடங்களுக்கு மேலாகியும் வாங்கிய கடன் அடையவில்லை என்று சொல்லி தொடர்ந்துவேலை செய்ய நிர்ப்பந்தம் செய்யவே அவர்கள் அங்கிருந்து தப்பித்து சொந்த ஊருக்கு கடந்த 15 தினங்களுக்கு முன்பாக வந்து விட்டார்கள்.
இந்நிலையில், சிறுவன் சீனிவாசன், திருச்சி மாவட்டம் லால்குடி அருகில் பெரியகுருக்கை அகரம் கிராமத்தில் வேறு ஒருவருக்கு ஆடு மேய்த்துக் கொண்டிருந்தபோது கடந்த அக்.3 அன்று இரவு 8 மணிக்கு கொட்டாம்பட்டியைச் சேர்ந்த சாமிநாதனும், அவரது அடியாட்களும் சீனிவாசனை கடத்த முயற்சி செய்தனர். இத்தகவல் அறிந்த சீனிவாசனின் பெரியப்பா மகன் செல்வம் சிறுகனூர் காவல் துறைக்கு தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு வந்த காவல் உதவி ஆய்வாளர் மணிவேல் கடத்தல் கும்பலை எச்சரித்து விட்டு ஆடுகளின் உரிமையாளரிடம் நாளை காலை 10 மணிக்கு பாதுகாப்பாக சீனிவாசனை காவல் நிலையத்தில் ஒப்படையுங்கள் என்று சொல்லி சென்றிருக்கிறார். 

அதற்கு பிறகு சாமிநாதன் உள்ளிட்ட கடத்தல் கும்பல் இரவு10 மணிக்கு மேல் சிறுவன் சீனிவாசனை அடித்து துன்புறுத்தி பலவந்தமாக மதுரை மாவட்டம் கொட்டாம்பட்டிக்கு காரில் கடத்தி சென்றுள்ளனர். சிறுவன் கடத்தப்பட்ட சம்பவம் குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி விருத்தாச்சலம் ஒன்றிய செயலாளர் அசோகன் மற்றும் சீனிவாசனின் உறவினர்களும் சிறுகனூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.  புகாரின் பேரில் காவல்துறை யினர் சாமிநாதன் கும்பலிடமிருந்து சீனிவாசனை மீட்டனர். பின்னர் நடைபெற்ற விசாரணையில் கொடுத்த கடனுக்கு சீனிவாசனை அழைத்து சென்றதாக சாமிநாதன் வாக்குமூலம் கொடுத்துள்ளார். இதன் பேரில் சாமிநாதன் மீது, ‘ஆள்கடத்தல் வழக்குப்பதிவு செய்வதற்குமாறாக, பணத்தை கொடு இல்லையென்றால் உன் மீது திருட்டு வழக்கும், கொலை முயற்சி வழக்கும் போடுவேன்’ என திருச்சிமாவட்ட காவல்துறை துணை கண்காணிப்பாளர்(பயிற்சி) சுரேஷ்குமார் மிரட்டி உள்ளார்.

மேலும் கடத்தல் கும்பலுக்கு நாற்காலி கொடுத்து அதில் உட்காரச்செய்து விசாரித்துள்ளார். பழங்குடிஇருளர் சமூகத்தைச் சேர்ந்த ஒடுக்கப்பட்டவர்களை அவமானப்படுத்தி யுள்ளார். தந்தை, மகன் இருவரை யும் மதுரை கொட்டாம்பட்டி மேலூர் காவல் நிலையங்களில் திருட்டு வழக்கு பதிவு செய்வதற்காக இருவரின் கைரேகை விரல்களை டிஎஸ்பி பதிவு செய்து எடுத்துள்ளார். மேலும் காவல்நிலையத்திற்கு தகவல் தந்த செல்வத்தின் கைரேகைவிரல்களையும் பதிவு செய்து கடத்தல் கும்பலுக்கு தந்துள்ளார். பழங்குடி இருளர் சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்ய பயிற்சி டிஎஸ்பி தலைமையில் சிறுகனூர் காவல்துறை செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. 

காவல்துறையின் இத்தகைய நடவடிக்கையை கண்டித்தும், கொத்தடிமையாக வேலை வாங்கி, சிறுவனைகடத்திய சாமிநாதன் உள்ளிட்ட ரவுடி கும்பல் மீது எஸ்சி, எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்து நடவடிக்கை எடுக்கவலியுறுத்தியும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மண்ணச்சநல்லூர் கிழக்கு, புள்ளம்பாடி ஒன்றியக்குழுக்கள் சார்பில் சிறுகனூர் காவல் நிலையம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மண்ணச்சநல்லூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் அ.கனகராஜ் தலைமை வகித்தார். புள்ளம்பாடி ஒன்றிய செயலாளர் டி.ரஜினிகாந்த் முன்னிலை வகித்தார். போராட்டத்தை விளக்கி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருச்சி புறநகர் மாவட்ட செயலாளர் எம்.ஜெயசீலன்,மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் அ.பழநிசாமி, ஜே.சுப்பிரமணியன், கடலூர் மாவட்ட செயற்குழு உறுப்பினர் செ.அசோகன், வழக்கறிஞர் குமரகுரு ஆகியோர் பேசினர்.பின்னர் மாவட்ட துணை கண்கா ணிப்பாளர் ராதாகிருஷ்ணன் தலைமையில் நடந்த பேச்சுவார்த்தையில், ஆடு முதலாளி சாமிநாதன் மீது ஆள்கடத்தல், கொலை முயற்சி வழக்குபதிவு செய்யப்பட்டது. இதனையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.