tamilnadu

img

சாரணியப் போட்டிகளில் பொறையார் சர்மிளா பள்ளி முதலிடம்

தரங்கம்பாடி: நாகை மாவட்டம், சீர்காழி கல்வி மாவட்ட அளவிலான சாரண சாரணியர் படைகள், குருளையர் மற்றும் நீலப்பறவையர் படைகள் ஆகியோருக்கான ஆண்டு முகாம் சீர்காழி பெஸ்ட் மெட்ரிக். பள்ளி வளாகத்தில் ஜனவரி 9, 10 ஆகிய இரு தினங்கள் நடைபெற்றன. 24 க்கும் மேற்பட்ட பள்ளிகளிலிருந்து சுமார் 400 சாரண சாரணியர் கலந்து கொண்டனர்.  சாரண விதிகள், முதலுதவி, பொது அறிவு, அணி வகுப்பு உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டன. அனைத்துப் போட்டிகளிலும் பொறையாரைச் சேர்ந்த சர்மிளா காடஸ் எஸ்.எம்.மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியின் நேதாஜி சாரணப் படையும், சர்மிளா சாரணியர் படையும் கலந்து கொண்டு 27 முதல் பரிசுகள், 20 இரண்டாம் பரிசுகள் வென்றனர்.  மேலும் சாரணர் இயக்கத்தின் இளையோர் பிரிவான குருளையர் நீலப்பறவையர் படைகள் நாகை வருவாய் மாவட்டத்தில் இப்பள்ளியில் மட்டும் இயங்குவதால் அப்படையினரின் தனித்திறன் நிகழ்ச்சிகள் மேடையேற்றப்பட்டன. மூன்று முதல் ஐந்து வகுப்பினர் தேசிய சீருடையில் குழுவாக நிகழ்ச்சிகள் நடத்தியதை வரவேற்ற சாரணர் இயக்க நிர்வாகிகளும், அனைத்துப் பள்ளி சாரண ஆசிரிய ஆசிரியர்களும் இளையோர் படைகளை பாராட்டியதோடு தாங்களும் அவரவர் பள்ளியில் மேற்படி படைகளைத் துவங்க உறுதி ஏற்றனர். 

மாவட்டப் போட்டிகளில் மிகச் சிறந்த பள்ளிக்கான விருது, குழுப்போட்டிகளில் வென்றோர், தனிநபர் போட்டிகளில் வென்றோர் ஆகியோருக்கானப் பரிசுகளையும் மாவட்ட சாரண சங்க தலைவர் அறிவுடைநம்பி, மாவட்ட சாரண ஆணையர் செந்தாமரைக்கண்ணன் ஆகியோர் வழங்கினர். குழுப்போட்டிகளில் எட்டு கேடயங்களை வென்ற இப்பள்ளியை சீர்காழி மாவட்டக் கல்வி அலுவலர் வாழ்த்தி கேடயங்களை வழங்கினார். சாரணத் தலைவி கள் உஷா (மாவட்ட சாரணிய பயிற்சி ஆணையர்), சந்தானமேரி, ஆர்த்தி, குருளையர் மற்றும் நீலப்பறவையர் தலைவிகள் விக்னேஷ்வரி, உமா மகேஷ்வரி ஆகியோர் மாணவ மாணவிகளை போட்டிகளுக்கு வழிநடத்தி மாவட்ட முகாமின் உலக சமாதானப் பேரணியை நடத்திக் கொடுத்தனர். சாரண முகாமில் கலந்து கொண்ட மற்றும் வெற்றி பெற்ற சாரண இயக்க மாணவ மாணவி களையும், சாரண ஆசிரியைகளையும் பள்ளி முதல்வர் மாநில அரசின் நல்லாசிரியர் விருது பெற்ற பாண்டியராஜன் மற்றும் சீர்காழி கல்வி மாவட்ட செயலாளர் இளங்கோவன், மயிலாடுதுறை கல்வி மாவட்டச் செயலாளர் தியாகராஜன், மாவட்ட முதன்மை ஆணையர் ஆ.ராஜாராமன், பெஸ்ட் மெட்ரிக் பள்ளி தாளாளர் ராஜ்கமல் ஆகியோர் பாராட்டினர்.

;