tamilnadu

அறந்தாங்கி மற்றும் தஞ்சாவூர் முக்கிய செய்திகள்

விழிப்புணர்வு கூட்டம்

அறந்தாங்கி, ஜூன் 16- அறந்தாங்கி நகராட்சி பகுதி குடியிருப்பு மக்களுக்கு, மக்கும்- மக்காத குப்பைகள் என தரம் பிரித்து வழங்குவது தொடர்பாக விழிப்புணர்வு கூட்டம், வார்டு 27 வீரகாளியம்மன் கோவில் பகுதி அருகே சுகாதார துறை சார்பில் நடைபெற்றது. இதில் மக்கும், மக்காத குப்பைகளை தனித் தனியாக பிரித்து வழங்குதல், நாப்கின், பேம்பர்ஸ் உள்ளிட்டவை மடித்து தனியாக வழங்குதல், டெங்கு காய்ச்சல் தடுப்பு குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. 

மண்புழு உரம் தயாரிப்பு பயிற்சி  

பொன்னமராவதி, ஜூன் 16- பொன்னமராவதி ஊராட்சி ஒன்றியப் பகுதியில் உள்ள 42 கிராம ஊராட்சிகளிலும் தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் மண்புழு உரம் தயாரிப்பு கூடம் கட்டப்பட்டுள்ளது. இதில் முதல் கட்டமாக மண்புழு உரம் தயாரிப்பு குறித்து அனைத்து ஊராட்சி செயலர்கள், பணித்தள பொறுப்பாளர்கள் மற்றும் தூய்மைக் காவலர்கள் ஆகியோருக்கு பயிற்சி வகுப்பு சனியன்று பொன்னமராவதி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்றது. பொன்னமராவதி வட்டார வளர்ச்சி அலுவலர்(வ.ஊ) ராமச்சந்திரன், வட்டார வளர்ச்சி அலுவலர்(கி.ஊ) மு.சுவாமிநாதன், ஒன்றிய உதவி பொறியாளர்கள் பாலமுருகன், ராமகிருஷ்ணன் ஆகியோர் பேசினர். மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சேகர், ப.சேகர், முருகேசன், வள்ளியம்மை, வட்டார ஒருங்கிணைப்பாளர் முருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர். பயிற்சி ஏற்பாடுகளை துணை வட்டார வளர்ச்சி அலுவலர் தங்கராஜ் செய்தார்.

பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்  

தஞ்சாவூர் ஜூன்.16- தஞ்சை மாவட்டம், அய்யம்பேட்டை பேரூராட்சி பகுதி கடைவீதிகளில் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள், புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா என பேரூராட்சி செயல் அலுவலர் சந்திரகுமார், துப்புரவு ஆய்வாளர் சுந்தர், பொது சுகாதாரத்துறை வட்டார சுகாதார மேற்பார்வையாளர் பாஸ்கரன், சுகாதார ஆய்வாளர்கள் செல்லப்பா, சுவாமிநாதன் ஆகியோர் ஆய்வு நடத்தினர்.  இதில் சில கடைகளில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவது தெரிய வந்தது. அவற்றை பறிமுதல் செய்து கடை உரிமையாளர்களுக்கு ரூ2,000 அபராதம் விதித்தனர். மேலும் 80 கிலோ எடையுள்ள பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதோடு, தடையை மீறி விற்பனை மற்றும் உபயோகம் செய்ததால் ரூ 3,500 அபராதமும் விதிக்கப்பட்டது. 

பயறு உற்பத்தியை பெருக்க மானியம்

புதுக்கோட்டை, ஜூன்.16- தேசிய உணவு பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் 2019-20 ஆம் ஆண்டு பயறு உற்பத்தியைப் பெருக்க ரூ.41.2 இலட்சம் மானியம் வழங்கப்பட உள்ளது. இத்திட்டத்தின் கீழ் உளுந்து தனிப்பயிர் தொகுப்பு செயல் விளக்கம் 200 எக்டரில் அமைக்க ரூ.15 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.  எக்டருக்கு ரூ.7,500 வீதம் மானியம் வழங்கப்பட உள்ளது. எக்டருக்கு தேவையான 20 கிலோ விதை(10 ஆண்டுக்குள் வெளியிடப்பட்ட புதிய ரகம்) 2.5 கிலோ டிரைகோடெர்மா விரிடி, உயிர் உரம் ஒரு லிட்டர், பயறு நுண்சத்து 5 கிலோ பூசா ஹைட்ரோ ஜெல் 100 கிராம், டி.ஏ.பி. 25 கிலோ முதலிய இடுபொருட்கள் வேளாண்மை விரிவாக்க மையங்கள் மூலமாக இலவசமாக வழங்கப்பட உள்ளது. விதைக்கும் கருவி வாடகை, பயிர் பாதுகாப்பு மருந்துகள் டி.ஏ.பி. தெளிப்பு கூலி போன்ற இனங்களில் விவசாயிகளுக்கு பின்னேற்பு மானியம் அவர்களது வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்படும். எனவே, பயறு சாகுபடியில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் அந்தந்த பகுதி வேளாண் துறை களப்பணியாளர்கள் மற்றும் வட்டார வேளாண் உதவி இயக்குநர்களை அணுகி பயனடையலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் மாணவர்கள் சந்திப்பு  

கும்பகோணம் ஜூன் 16- கும்பகோணம் அறிஞர் அண்ணா மேல்நிலைப்பள்ளி 1919 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 11ஆம் தேதி தொடங்கப்பட்டு நூறு ஆண்டு நிறைவடைகிறது அதனை முன்னிட்டு இப்பள்ளியில் கடந்த 1956-70 ஆம் ஆண்டு வரை படித்த முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.  பள்ளி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தனியார் பள்ளிக்கு இணையாக ஸ்மார்ட் வகுப்புகளாக மாற்ற முன்னாள் மாணவர்கள் சொந்த நிதியை கொண்டு பள்ளிக்கு தேவையான உபயோக பொருட்கள் வழங்குவது உள்ளிட்டவை முடிவு எடுக்கப்பட்டது. இப்பள்ளியின் முன்னாள் மாணவர் ஓய்வு பெற்ற நீதிபதி ரவீந்திரன் தலைமை தாங்கினார் முன்னாள் தலைமையாசிரியர் கல்யாணசுந்தரம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

;