tamilnadu

img

வாகன ஓட்டிகளுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் தடுப்பு சுவர் இல்லா குளம்

தஞ்சாவூர் : கிழக்கு கடற்கரை சாலையில், சேதுபாவாசத்திரத்தில் வாகன ஓட்டிகளுக்கு பாதுகாப்பு இல்லாத வகையில் உள்ள குளக்கரையில் தடுப்பு சுவர் அமைக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.  தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அருகே உள்ள சேதுபாவாசத்திரம் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள முக்கியமான மீனவர் கிராமம் ஆகும். இந்த சாலை வழியாக தெற்கே இராமநாதபுரம், கன்னியாகுமரி ஆகிய பகுதிகளுக்கும், வடக்கே வேளாங்கண்ணி, சென்னை வரைக்கும் என நாளொன்றுக்கு ஆயிரக்கணக்கான வாகனங்கள் பயணிக்கின்றன. முக்கியத்துவம் வாய்ந்த இச்சாலையில் தனியார், அரசு வாகனங்கள், சுற்றுலா வாகனங்கள், கார்கள் என 24 மணி நேரமும் பயணித்தவாறே இருக்கும்.  இந்நிலையில் சேதுபாவாசத்திரம் கடைவீதி அருகே குளம் சாலையோரம் உள்ளது. இதையொட்டி அமைக்கப்பட்டிருந்த தடுப்புச் சுவர், கால ஓட்டத்தில் சாலை உயர்ந்த தால், தடுப்புச் சுவர் உயரம் குறைந்து விட்டது. மேலும் அமைக்கப்பட்டு இருந்த பாதுகாப்பு சிமெண்ட் பில்லர்களும் உடைந்து போய் விட்டது. மேலும் இந்த இடத்தில் இரவு நேரத்தில் போதிய வெளிச்சமும் இல்லாத நிலை உள்ளது. எனவே, “ஏதேனும் அசம்பாவிதம் ஏற்படும் முன், இந்த குளக்கரையில் பாதுகாப்பு தடுப்புச் சுவர் அமைக்க, சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

;