tamilnadu

img

வெளிநாட்டு கோவில்களுக்கு ஏற்றுமதியாகும் திண்டுக்கல்லின் பாரம்பரிய தொட்டிப் பூட்டுக்கள்....

திண்டுக்கல்:
திண்டுக்கல் மாநகரம் என்றால் நமது நினைவுக்கு வருவது பூட்டு. எந்த திருடனாலும் திறக்க முடியாத சிறப்பு அம்சம் கொண்டது திண்டுக்கல் பூட்டு. திண்டுக்கல் பூட்டு தமிழகத்தின் பெருமை மிகு பொருட்களில் ஒன்றாகும். திண்டுக்கல்  பூட்டுக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது. திண்டுக்கல் நகரத்தில் பாரம்பரியமாக தொடர்ந்து தயாரிக்கப்படும் பூட்டுக்களில் மாங்காய் பூட்டு, அடுத்து தொட்டி பூட்டு ஆகும். தொட்டி பூட்டு என்பது கதவுகளுக்கு பின்புறம் பொருத்தக்கூடிய பூட்டு ஆகும். 
இன்றைக்கு அனைத்து விடுகளிலும் தொட்டி பூட்டு பயன்படுத்தப்படுகிறது. கதவுகளை துளையிட்டு பின்புறமாக பொருத்தப்படுகிற இந்த பூட்டுக்கள் வலுவாக இருக்கின்றன. இதனால் கோவில்களில் உள்ள கதவுகளுக்கும் இந்த வகை பூட்டுக்கள் பொருத்தப்படுகின்றன.

திண்டுக்கல்லில் உள்ள பூட்டுத் தொழிலாளர்கள் பெரும்பாலும் தொட்டி பூட்டுக்களையே தயாரித்து விற்பனை செய்து வருகிறார்கள். இரண்டு லீவர், 3 லீவர் கொண்ட பூட்டுக்கள் தயாரிக்கப்படுகின்றன. திண்டுக்கல்லில் இருந்து தான் திருப்பதி பெருமாள் கோவில், பழனி முருகன் கோவில், மதுரை மீனாட்சிஅம்மன் கோவில், திண்டுக்கல் அபிராமி அம்மன் கோவில் என பல கோவில்களுக்கு முருகேசன் என்கிற தொழிலாளி ,பூட்டு செய்து தருகிறார். பிற தொழிலாளர்கள் சின்ன சின்ன பூட்டுக்களை தயார் செய்கிறார்கள். ஆனால் முருகேசன், கோவில்களுக்கு என பிரத்யேகமான தொட்டி பூட்டுக்கள் தயாரிப்பதில் நிபுணத்துவம் பெற்றவர் ஆவார்.  இவர் செய்த பூட்டுக்கள் உலக அளவில் உள்ள பல கோவில்களில் உள்ள கதவுகளுக்கு பொருத்தப்பட்டு உள்ளன. அந்த அளவிற்கு மிக வலுவான கட்டமைப்புடன் தொட்டி பூட்டுக்களை தயாரிக்கிறார். \

நலியும் தொழில்
திண்டுக்கல்லில் பூட்டு தொழில் நாளடைவில் நலிந்து வருகிறது. திண்டுக்கல் பூட்டுக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டிருந்தாலும். பூட்டுத் தொழிலாளர்களின் குடும்பங்கள் பெரும் சிரமங்களை சந்தித்து வருகின்றன. இந்நிலையில்  பூட்டுத் தொழிலாளியான முருகேசன் நம்மிடம்  கூறும் போது, நான் கோவில்களுக்கு என விசேசமான பூட்டுக்கள் செய்து கொடுத்துக் கொண்டிருக்கிறேன். இரண்டரை இன்ச் அதாவது 3 அடிமுதல்36 இன்ச் வரை  உள்ள பூட்டுக்கள் வரை செய்கிறேன். உள்ளுரில் உள்ள அபிராமி கோவில், தாடிக்கொம்பு அழகர் கோவிலில் இருந்து  உலக நாடுகளில் உள்ள ஏராளமான கோவில்களுக்கும் தொட்டி பூட்டு செய்து கொடுக்கிறேன். கொரோனா பாதிப்பு காரணமாக கடந்த 6 மாதமாக தொழில் முடங்கி இருந்தது. இப்போது அரசு தளர்வுகளை நீக்கியிருப்பதால் மீண்டும் தொழிலை நடத்த முடிகிறது. முழுமையான தளர்வுகள் அமலாகும் போது எங்களுக்கு ஆர்டர் தேடி வரும். கோவில் கட்டும் போதே 6 மாதத்திற்கு முன்பே எனக்கு  ஆர்டர் கிடைத்துவிடும். ஆர்டர் தேடி எங்கும் அலைய வேண்டியதில்லை. 

120 வகையான பூட்டுக்கள்
 உலக நாடுகள் முழுக்க நான் தயாரித்த பூட்டுக்களுக்கு வரவேற்பு இருந்தாலும் நான் எங்கு சென்றும் விற்பதில்லை. நேரடியாக வந்து என்னிடம் கொள்முதல் செய்கிறார்கள். 100 கிலோ அளவிலான பூட்டு செய்ய முடியும். அதே போல 120 வகையான பூட்டுக்களை செய்ய முடியும். இரண்டரை இன்ச் பித்தளை பூட்டு, இரண்டரை இன்ச் மாங்காய் பூட்டு, 4 சாவி பூட்டு, வில் பூட்டு, சாதாபூட்டு, இரட்டை தாழ் பூட்டு, ஒற்றை தாழ் பூட்டு, சாவி பிடிக்கிற பூட்டு, சாவி சுத்துகிற பூட்டு என ஏராளமான பூட்டுக்கள் தயாரித்து வருகிறேன். 

மீண்டும் திறக்க முடியாத தொழில்நுட்பம் 
கொரோனா ஊரடங்கு காலத்தில் கடந்த 6 மாதங்களாக எங்களுக்கு பின்னடைவு ஏற்பட்டது, இனி எங்கள் தொழில் மேம்பட வாய்ப்புள்ளது. தற்போது இரண்டு அடி நீளம்,  ஒரு அடி அகலத்தில் 35 கிலோவில் பூட்டு செய்துள்ளேன். இந்த பூட்டு மயிலாடுதுறையில் பிரபலமாக உள்ள பரிமள ரங்கநாதர் கோவிலுக்கு தயாரித்துள்ளேன். இந்த பூட்டில் 3 லாக் உள்ளது. நாங்கள் தயாரிக்கும் பூட்டுகளில் பூட்டிய பூட்டை மீண்டும் திறக்க முடியாத அளவிற்கு தொழில் நுட்பத்துடன் செய்ய முடியும். 

பூட்டு தொழில் நுட்ப பூங்கா 
திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கும், மதுரை மீனாட்சியம்மன் கோவிலுக்கும், பழனி முருகன் கோவிலுக்கும், லண்டன், மலேசியா, சிங்கப்பூரில் உள்ள கோவில்களுக்கும் பூட்டு செய்து கொடுத்திருக்கிறேன்.  ஆனால் இந்த குடிசை தொழிலை அரசு மேம்படுத்த உதவி செய்ய வேண்டும். நாங்க படிக்காதவர்கள். ஆனால் எங்களிடம் உள்ள தொழில்நுட்பத்தை பயன்படுத்தி இங்கு ஒரு பூட்டு தொழில் நுட்ப பூங்கா உருவாக்கி அதன் மூலம்  இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை  உருவாக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். 

அலிகார், சீனா, சிங்கப்பூர் என பல ஊர்களில் உள்ள பூட்டுக்களுக்கு சவாலாக சிறந்த பூட்டுக்களாக திண்டுக்கல் பூட்டுக்களை கொண்டு வர முடியும். நாங்கள் செய்யும் பூட்டுக்களை வெளிநாடுகளில் உள்ளவர்கள் யாராவது வந்து திறந்து காட்டட்டும் பார்க்கலாம் என்று சவால் விடுகிறார் முருகேசன். மெசின் மேக் பூட்டுக்கள் எல்லாம் சரியில்லை. எங்கள் கைத்தொழில் மூலம் தயாரிக்கும் பூட்டுக்கள் உறுதியானது என்பதை நாங்கள் மீண்டும் மீண்டும் தெளிவுபடுத்துகிறோம் . தற்போது வரை  எங்கள் பூட்டுத் தொழில் குடிசைத் தொழிலாகத் தான் உள்ளது. இந்த குடிசைத் தொழிலாளர்களுக்கு அரசு உதவி செய்ய வேண்டும். வங்கிக் கடன் உதவி உள்ளிட்ட அனைத்தும்  செய்து தந்து எங்கள் வாழ்வை மேம்படுத்த வேண்டும் என்று முருகேசன் கேட்டுக்கொண்டுள்ளார்.

====இலமு===
 

;