tamilnadu

img

ஏழை மாணவர்களின் கல்வி மீட்பர்கள்....

திண்டுக்கல்:
கிராமப்புற ஏழை மாணவர்களின் கல்வியை மீட்டெடுக்க திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் பகுதி இந்திய ஜனநாயக வாலிபர் சங்க இளைஞர்கள் இலவசப் பாடசாலையை துவங்கினர். 

கொரோனா பெருந்தொற்று காலத்தில் செல்போன் இல்லாத காரணத்தால் கிராமப்புற பள்ளி மாணவர்கள் ஆன் லைன் வகுப்புகளில் பங்கேற்க முடியாத நிலை உள்ளது.  இதனால் கடந்த 2 ஆண்டுகளாக இம்மாணவர்களின் கல்வித்தரம்கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.  இந்த காலக்கட்டத்தில் அரசுப் பள்ளிகளில் பயிலும்  மாணவர்கள் தங்கள் பாடத்திட்டங்களில் கவனம் செலுத்தாமல் குழந்தை தொழிலாளர்களாகவும் மாறியுள்ள அவலம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் அரசுப் பள்ளி மாணவர்களின்  கல்வித்தரத்தை மீட்கும்வகையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம்சார்பாக பல இடங்களில் இலவச பாடசாலைகளை துவங்கி செயல்படுத்தி வருகிறார்கள். 

கோவிலூர்  அருகே நாகையகோட்டையில் இலவச பாடசாலை நடத்தப்பட்டு வருகிறது. இந்த பாடசாலையில் வாலிபர் சங்க கிளை உறுப்பினர்கள் பாடம் நடத்தி வருகிறார்கள். தற்போது கல்லூரியில் பயின்று வரும்  வினிதா, எம்.சி.ஏ. பட்டதாரி சுகுமார், கல்வியியல் பட்டதாரி ஜாஸ்மின் ஆகியோர் மாணவர்களுக்கு பாடம் கற்றுத்தருகிறார்கள். இதேபோல் எரியோடு அருகே உள்ள அச்சனம்பட்டியில் ஒரு இலவச பாடசாலை நடத்தப்படுகிறது. சங்கத்தின் ஒன்றிய துணைச்செயலாளர் கல்வியியல் பட்டதாரி பாண்டியராஜன், பி.ஏ. பட்டதாரி மாணவர் தங்கப்பாண்டியன் ஆகியோர் ஆசிரியர்களாக இந்த பாடசாலையில் பாடம் கற்றுத்தருகிறார்கள். கரூர் புறவழிச்சாலையில் ரெங்கநாதபுரம் பகுதியில் உள்ள வாங்கலாபுரத்தில் ஞாயிறன்று ஒரு இலவச பாடசாலை துவங்கப்பட்டு உள்ளது. இந்த பாடசாலையில் மாணவர்களுக்கு புவனேஷ்வரி, அருண்பாண்டியன் ஆகிய பட்டதாரிகள் பாடம் நடத்தி வருகிறார்கள்.இந்த பாடசாலைகளின் துவக்க நிகழ்ச்சியில் சங்கத்தின் மாவட்டச்செயலாளர் கே.ஆர்.பாலாஜி, மாவட்டப்பொருளாளர் ஜி.கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் பங்கேற்றனர்.  தொடர்ந்து இது போன்ற இலவச பாடசாலைகளை தொடங்கப் போவதாக நிகழ்ச்சியில் அறிவித்தனர்.(ந.நி.) 

;