tamilnadu

தருமபுரியில் அரசு ஊழியர்கள் வாக்களிக்க அதிகாரிகள் மறுப்பு

தருமபுரி, ஏப்.17- தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தபால் வாக்களிக்கச் சென்ற அரசுஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களை வாக்களிக்க அதிகாரிகள் அனுமதி மறுத்ததால் வாக்களிக்கமல் ஏமாற்றத்துடன் திரும்பினர். இது குறித்து அரசு ஊழியர்கள் மற்றும்ஆசிரியர்கள் கூறியதாவது, நாங்கள் பல்வேறு மாவட்டங்களில் பணிபுரிகிறோம். மேலும் +1, +2 தேர்வுத் தாள் திருத்தும் பணியில் ஈடுபட்டுள்ளோம். இதனுடன் வாக்கு சாவடியில் தேர்தல் பணியிலும் அமர்த்தப்பட்டுள்ளோம். தேர்தலில் வாக்கு சாவடியில் எவ்வாறு பணியாற்றுவது என்பது குறித்த தேர்தல் வகுப்புக்கும் செல்ல வேண்டியுள்ளது. பயிற்சி வகுப்பில் வாக்கு போடுவதற்கான விண்ணப்பம் வழங்கி பூர்த்தி செய்து வாங்கி கொண்டு தபாலில் வீட்டுக்கு வரும் என அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனால் இன்று வரை விண்ணப்பம் வீட்டுக்கு வரவில்லை.இந்நிலையில் தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செவ்வாயன்று மாலை தபால் வாக்களிக்க சென்றோம். தபால் வாக்கு போட ஆட்சியர் அலுவலக கூடுதல் கட்டிடத்தில் வாக்கு அளிக்க பெட்டி வைக்கப்பட்டிருந்தது. அங்கு தேர்தல் அலுவலர் ஒருவர் நியமிக்கப்பட்டிருந்தார். வாக்கு அளிக்க உள்ளே சென்ற எங்களுக்கு விண்ணப்பம் வழங்கினார். ஆனால்சின்னம் பொருத்தப்பட்ட பாலட் படிவம் தரப்படவில்லை. இது குறித்து அதிகாரியிடம் கேட்ட போது நான் கொடுத்த விண்ணப்பத்தை பூர்த்தி செய்து கொடுத்து விட்டு செல்லுங்கள். உங்களுக்கு தபாலில் சின்னம் பொருத்தப்பட்ட பாலட் படிவம் வரும் அதற்கு பின்னர் தான் வாக்கு அளிக்க முடியும் என சொல்லி விட்டார். மன்னதாக வாக்கு போடச் சென்றவர்களை அலுவலக ஊழியர் உள்ளே விடாமல் தடுத்தார். அவரிடம் வாக்குவாதம் செய்து தான் உள்ளே செல்ல முடிந்தது. அப்படி உள்ளே சென்றும் ஓட்டு போட முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்ப வேண்டிய சூழ்நிலை தான் ஏற்பட்டது. மேலும் வாக்குச்சாவடியில் பணியமர்த்தப்பட்ட எங்களுக்கு வாக்கு அளிக்க மறுப்பது வேதனையாக உள்ளது என தெரிவித்தனர்.

;